இந்த பருவகாலத்திற்கான FA கிண்ணப் போட்டித் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் அரையிறுதிச் சுற்றின் விறுவிறுப்பான இரண்டு போட்டிகள் சுகததாச விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை இடம்பெறவுள்ளன.
கடந்த வருடத்தை போன்றே இம்முறையும் பலமிக்க கொழும்பு கால்பந்துக் கழகம் மற்றும் இராணுவப்படை விளையாட்டுக் கழக அணிகள் அரையிறுதிப் போட்டியில் சந்திக்கின்றன. அடுத்த அரையிறுதிப் போட்டியில் ரசிகர்களின் ஆதரவினை அதிகளவில் கொண்டிருக்கின்ற ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் மற்றும் சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழக அணிகள் மோதுகின்றன.
கொழும்பு கால்பந்துக் கழகம் எதிர் இராணுவப்படை விளையாட்டுக் கழகம்
காலம் – மே மாதம் 13ஆம் திகதி , நேரம் – மாலை 5.00 மணிக்கு
கழக மட்ட கால்பந்து போட்டிகளில் சுவாரஷ்யம் மிக்கதொரு போட்டியாகவே இவ்விரண்டு அணிகள் மோதிக்கொள்ளும் போட்டிகள் காணப்பட்டு வந்துள்ளன.
ரினௌன் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த ஜாவா லேன் அரையிறுதியில்
சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற ஜாவா லேன்..
கொழும்பு அணியின் அனுபவமிக்க மத்திய கள வீரரான மொமாஸ் யாப்போவின் சிறப்பாட்டங்களின் காரணமாக கடந்த போட்டிகளில் இராணுவப்படை அணி கடும் சவாலை எதிர்நோக்கியிருந்தது. இந்நிலையில் மொமாஸ் யாப்போ இப்போட்டியில் களமிறங்காத காரணத்தினால் இராணுவப்படை விளையாட்டுக் கழகம் சற்று நம்பிக்கையுடன் விளையாடவுள்ளது எனலாம்.
நடப்புச் சம்பியனான இராணுவப்படை அணி இவ்வருடமும் தமது போட்டிகளில் முழு ஆதிக்கத்தையும் செலுத்தி எதிரணிகளை துவம்சம் செய்த நிலையில் தனது சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் அணியாகக் காணப்படுகின்றது. இவ்வணியானது காலிறுதிப் போட்டியில் சுப்பர் சன் அணியை 12-1 என படுதோல்வியடையச் செய்திருந்தமை மூலம் தனது பலத்தை நிரூபித்திருந்தது.
அரையிறுதிப் போட்டிகளை கருத்திற் கொள்ளும் போதும் இராணுவப்படை அணியே வலு மிக்க அணியாக காணப்படுகின்றது. அவ்வணியின் அனைத்து முன்கள வீரர்களும் தொடர்ந்து திறமையை வெளிக்காட்டி வந்துள்ளதுடன் புன்சர திருன, மதுஷான் டி சில்வா, சஜித் குமார மற்றும் மொஹமட் இஸ்ஸதீன் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்களத்தில் இராணுவ அணிக்கு வலுசேர்க்கும் மற்றுமொரு வீரரான திவங்க சந்திரசேகர தனது உடற்பலத்தை சிறப்பான முறையில் பாவித்து தனது அணிக்கு கோல்களை பெற்றுத் தந்துள்ளார். மாற்று வீரராக களமிறங்கும் போதும் உடனடியாக போட்டி நிலைமைக்கு ஏற்ற வகையில் விளையாட்டு பாணியை மாற்றியமைத்து அணிக்கு பங்களிப்பினை வழங்கி வந்துள்ளமை அவரது சிறப்பம்சமாகும்.
இதேவேளை, கொழும்பு கால்பந்துக் கழகமானது இம்முறை அதிசிறந்த முறையில் திறமையை வெளிக்காட்டிய அணியாக காணப்படவில்லை.
விமானப்படை அணியுடனான காலிறுதிப் போட்டியை மிகுந்த சிரமத்துடனேயே கொழும்பு அணி வெற்றி கொண்டிருந்தது. அப்போட்டியில் விமானப்படை வீரர்களின் கோல் முயற்சி ரௌமி மொஹிதீனின் கைகளை உரசி வெளியேறியதன் காரணமாக கைநழுவிய போதிலும், அவர் சிவப்பு அட்டை காண்பிக்கப்படாமல் தப்பியிருந்தார்.
மேலும், கவிந்து இஷான் பல கோல் வாய்ப்புக்களையும், இலகுவான பெனால்டி வாய்ப்பினையும் தவறவிட்டிருந்தார். இவ்வாறான நிலைகளில் நிறைவடைந்த போட்டியொன்றின் பின்னர் அவ்வணி வலுமிக்க இராணுவப்படை அணியை சந்திக்கவுள்ளது.
சஸ்னியின் கோலினால் பெற்ற வெற்றியுடன் அரையிறுதிக்குத் தெரிவாகிய கொழும்பு அணி
FA கிண்ணத்தில், விமானப்படை அணியுடனான காலிறுதிப் போட்டியில் 1-0 என்ற..
எனினும் அப்போட்டியில் கொழும்பு அணியின் கோல் காப்பாளர் மொஹமட் இம்ரான் அபாரமான விளையாட்டுப் பாணியை வெளிக்காட்டியிருந்தார். அனைத்து போட்டிகளிலும் தனி நபர்களின் சிறப்பாட்டத்தின் காரணமாகவே கொழும்பு கால்பந்துக் கழகம் அரையிறுதிச் சுற்று வரை முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவ்வணி சார்பில் தொடர்ந்து அசத்தி வருகின்ற வீரராக சர்வான் ஜொஹரை கருதலாம். இவர் கடந்த போட்டிகளில் மத்திய களத்தில் தனது சிறந்த நகர்வுகள் மூலம் முன்கள வீரர்களுக்கு வாய்ப்புக்களை உருவாக்கித் தந்திருந்தார். பிரபல இராணுவ அணியுடன் வெற்றிகரமாக போட்டியிடுவதாயின் அவரது பங்களிப்பு கொழும்பு அணிக்கு அத்தியாவசியமானதாகும்.
அத்துடன் அனுபவமிக்க பயிற்றுவிப்பாளர் மொஹமட் ரூமியின் விவேகமான உத்திகளும் கொழும்பு அணிக்கு கைகொடுக்கவுள்ளன. கள அமைப்பு மற்றும் நகர்வுகளை சிறப்பாக தயார்படுத்துவதுடன் எதிரணியின் விங் நிலை வீரர்களுக்கு பந்தினை செல்ல விடாமல் தடுப்பதும் முக்கியமானதாக அமையும்.
முக்கிய வீரர்கள்
இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – மொஹமட் இஸ்ஸதீன்
கொழும்பு கால்பந்துக் கழகம் – சர்வான் ஜொஹார்
கடந்த போட்டிகளின் முடிவுகள்
கொழும்பு கால்பந்துக் கழகம் 2 – 1 இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (டயலொக் சம்பியன்ஸ் லீக் 2016 – சுப்பர் 8)
கொழும்பு கால்பந்துக் கழகம் 0 – 2 இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (டயலொக் சம்பியன்ஸ் லீக் 2016 – குழுநிலைப் போட்டி)
கொழும்பு கால்பந்துக் கழகம் 0 – 1 இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (FA கிண்ணம் 2016 – அரையிறுதி)
கொழும்பு கால்பந்துக் கழகம் 2 – 0 இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (டயலொக் சம்பியன்ஸ் லீக் 2015 – சுப்பர் 8)
சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்
காலம் – மே மாதம் 13ஆம் திகதி , நேரம் – மாலை 7.30 மணிக்கு
கொழும்பு நகர்ப்பகுதியின் பழமையான மற்றும் அதிக ரசிகர்களை கொண்டுள்ள இரு அணிகளான சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழக மற்றும் ஜாவா லேன் விளையாட்டுக் கழக அணிகள் இரண்டாவது அரையிறுதியில் மோதுகின்றன.
அனுபவமிக்க வீரர்கள், இளம் வீரர்கள் மற்றும் தாக்குதல் ஆட்டம், தடுப்பாட்டம் என அனைத்து காரணிகளிலும் இரு அணிகளும் சமவலு மிக்க அணிகளாக காணப்படுகின்றன.
இரண்டாம் பாதி அதிரடியினால் புளு ஸ்டாரை வீழ்த்திய சௌண்டர்ஸ்
சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற FA கிண்ணத்தின் விறுவிறுப்பான இரண்டாவது..
சௌண்டர்ஸ் அணியானது பாரிய வித்தியாசத்தில் வெற்றிகளை பெறாத போதிலும், திறமையான ஆட்டங்களின் உதவியுடன் அரையிறுதிச் சுற்று வரை முன்னேறியுள்ளது. காலிறுதி சுற்றில் ப்ளூ ஸ்டார் அணியுடனான போட்டியின் போதும், எதிரணியை விட பின்னிலையில் காணப்பட்டு, பின்னர் சிறந்த முறையில் எதிர்த்தாக்குதல் நடத்தி 2-1 என வெற்றியை சுவீகரித்திருந்தது.
எனினும் அவ்வணி வீரர்களால் பாஹிர் அலி, பாலகமகே ஷிவங்க போன்ற சிறந்த தடுப்பு வீரர்களை மீறி முன்கள வீரர்களினால் கோல்வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ள இயலாமல் போனது. ஜாவா லேன் அணியை எதிர்கொள்ளும் போது இவ்விடயத்தில் அவ்வணி அதிக கரிசனை காட்ட வேண்டியது முக்கியமானதாகும்.
அனுபவமிக்க வீரரான கிரிஷாந்த அபேசேகர அப்போட்டியில் சௌண்டர்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக காணப்பட்டிருந்தார். அதேபோன்று, அவருடன் மற்றுமொரு முன்னணி வீரரான சனோஜ் சமீரவும் இணைந்து இப்போட்டியில் தங்களது வழமையான சிறப்பாட்டத்தை வெளிப்படுத்தினால், அவ்வணியினால் தங்களது FA கிண்ண சம்பியன்ஷிப் பட்டங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம்.
தங்களது நகர்வுகளின் வேகத்தை அதிகரித்துக் கொள்வதன் மூலமே சௌண்டர்ஸ் வீரர்களினால் எதிரணி வீரர்களை மீறி முன்னேற முடியும். ரினௌன் அணி அவ்வாறு செய்யத் தவறியதன் காரணமாகவே ஜாவா லேன் அணியிடம் தோல்வியை தழுவியிருந்தது. அத்துடன் ஜாவா லேன் வீரர்கள் எதிர்தாக்குதலில் பலமிக்க வீரர்களாக காணப்படுவதால் அதனை வெற்றிகரமாக தடுப்பதிலும் சௌண்டர்ஸ் வீரர்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஜாவா லேன் அணியானது, முதற்தர தொடரான டயலொக் சம்பியன்ஸ் லீக் சுற்றுப் போட்டியிலிருந்து தரமிறக்கம் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து முற்றிலும் மாறுபட்ட அணியாக விளையாடி வருகின்றது. புத்துணர்ச்சி மிக்க விளையாட்டுப் பாணியுடன் எதிரணிகளுக்கு அதிர்ச்சியளித்து இச்சுற்று வரை முன்னேறியுள்ளது. அத்துடன் உபாதையிலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியிருக்கும் மொஹமட் ரிஸ்கானின் வருகையுடன் அவ்வணி மேலும் வலுப்பெற்றுள்ளது.
சுப்பர் சன்னை 12 கோல்களால் துவம்சம் செய்த ராணுவப்படை
சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற FA கிண்ணத்தின் முதலாவது காலிறுதிப்..
அவ்வணியின் அற்புத எதிர்த்தாக்குதல் நகர்வுகள் மற்றும் நவீன் ஜூட், மொஹமட் அப்துல்லாஹ் ஆகியோரின் அசத்தல் வேகம் என்பன ரினௌன் அணியை நிலைகுலையச் செய்திருந்ததுடன், சௌண்டர்ஸ் அணியுடனான போட்டியிலும் அதே விளையாட்டுப்பாணியை காணக்கூடியதாக இருக்கும்.
எதிரணியின் சனோஜ் சமீரவுடன் மத்திய களத்தில் ஜானக சமிந்த மோதவுள்ள நிலையில், இவ்விரு வீரர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டுபவரின் அணியே வெற்றி பெற அதிக வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும்.
முக்கிய வீரர்கள்
சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் -சௌந்தரராஜ் நிரேஷ்
ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் – நவீன் ஜூட்
கடந்த போட்டிகளின் முடிவுகள்
சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 4 – 2 ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் (டயலொக் சம்பியன்ஸ் லீக் 2016 – குழு நிலைப் போட்டி)