கிறிஸ்டல் பெலசை வீழ்த்தி காலிறுதிக்குள் தடம் பதித்த ஜாவா லேன்

727
Java Lane vs Crystal Palace

FA கிண்ணத்தில், 16 அணிகளுக்கு இடையிலான மோதலில் தமது பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்களுக்கு மத்தியில் கம்பளை கிறிஸ்டல் பெலஸ் அணியை வீழ்த்திய ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் தொடரின் காலிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது.  

ஜாவா லேன் அணி முன்னைய சுற்றில் 5-1 என்ற கோல்கள் கணக்கில் கிருலபனை யுனைடட் அணியை வெற்றி கொண்டு இந்த சுற்றுக்குள் வந்தது. அதேபோல், மலையகத்தில் இடம்பெற்ற விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத போட்டியில் பெனால்டி முறையில் நிவ் யங்ஸ் அணியை வெற்றி கொண்டதன்மூலம் கிறிஸ்டல் பெலஸ் அணி இந்த 16 அணிகளைக் கொண்ட சுற்றுக்கு தெரிவாகியது.

காலிறுதி மோதலுக்குள் நுழைந்த ராணுவப்படை மற்றும் ரினௌன் அணிகள்

இந்நிலையில், ஜாவா லேன் அணியின் சொந்த மைதானமான சிடி லீக் கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் ஆரம்பத்திலேயே கிறிஸ்டல் பெலஸ் பெற்ற கோணர் உதையின்போது, ரவ்சான் பந்தை உள்ளனுப்ப சிமாக் அதனை ஹெடர் செய்தார். எனினும் பந்து அவரது தலையில் ஒழுங்காகப் படவில்லை.

பின்னர் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பின்போது, ஷரித ரத்னாயக உதைந்த பந்தை சிமாக் ஹெடர் மூலம் உயர்த்த, பந்து கம்பங்களுக்கு மேலால் சென்றது.

அடுத்த நிமிடம் ஜாவா லேன் வீரர் ரிஸ்கான் பந்தை தனியே எடுத்துச் செல்கையில், தடுக்க வந்த பல வீரர்களையும் ஏமாற்றி சிறந்த முறையில் முன்னே சென்றார். எனினும் அவருக்கு உதவிக்கு யாரும் இருக்காததால் அவரால் எதிரணியின் பின்களத்தைத் தாண்ட முடியாமல் போனது.

பின்னர் கிறிஸ்டல் பெலஸ் வீரர்களுக்கு பெனால்டி எல்லைக்கு சற்று வெளியே வைத்து ப்ரீ கிக் வாய்ப்பொன்று கிடைத்தது. இதன்போது ஷரித உள்ளனுப்பிய பந்தை சப்ரி தலையால் முட்டி கோலுக்குள் செலுத்தினார். எனினும் எதிரணியின் பின்கள வீரரால் அது தடுக்கப்பட்டது.

பின்னர், நடுவரினால் எதிரணிக்கு கோல் உதைக்கான சைகை வழங்கப்பட்டதும், ஜாவா லேன் அணியின் பார்வையாளர்கள் மற்றும் அவ்வணியின் நிர்வாக அதிகாரிகள் அந்த தீர்ப்புடன் அதிருப்தி அடைந்தனர். பின்னர் ஏனைய நடுவர்களுடன் பிரதான நடுவர் உரையாடலை மேற்கொண்டுவிட்டு, அந்த தீர்ப்பை கோணர் உதை என்று மாற்றி, ஜாவா லேன் அணிக்கு வாய்ப்பை வழங்கினார்.

இபாம் தன்னிடம் வந்த பந்தை மிக வேகமாக கோலுக்கு உதைய, ஜாவா லேன் கோல் காப்பாளர் ஷம்மிக செனரத்திடம் பந்து நேரடியாக சென்றது. அதனை அவர் இலகுவாகப் பிடித்தார்.

காலிறுதிக்கு முன்னைய சுற்றில் சௌண்டர்ஸ், ராணுவப்படை மற்றும் கிறிஸ்டல் பெலஸ் அணிகள்

ப்ரீ கிக்கின்போது தன்னிடம் வந்த பந்தை சிறந்த முறையில் ஹெடர் செய்தார் நாலக பெரேரா. எனினும், பந்து கோல் காப்பாளரின் கைகளில் பட்டு வெளியே சென்றது.

எனினும் அடுத்த சந்தர்ப்பமாக, நீண்ட தூர பந்துப் பரிமாற்றத்தினால் தன்னிடம் வந்த பந்தை அழகாக நிறுத்தி கோலுக்குள் உதைந்து ஜாவா லேன் அணியை முன்னிலைப்படுத்தினார் மாலக பெரேரா.

முதல் பாதி: ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் 0 – 0 கிறிஸ்டல் பெலஸ் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதி ஆரம்பித்ததில் இருந்து ஜாவா லேன் அணியின் ஆதிக்கமே நீடித்தது. முதல் கோணரின்போது பந்தை கோல் காப்பாளர் தடுத்து, எதிரணியின் முயற்சிகளை நிறைவுக்கு கொண்டு வந்தார்.

ஜாவா லேன் வீரர்களுக்கு தொடர்ந்து சிறந்த வாய்ப்புக்கள் கிடைத்த பொழுதும் அவர்களால் ஒழுங்காக நிறைவுகள் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், குறித்த முயற்சிகள் அனைத்திற்கும் சிறந்த பயனாக இளம் வீரர் சபீர் மூலம் ஜாவா லேன் அணியின் இரண்டாவது கோல் பெறப்பட்டது. இதன்போது ஒரு திசையில் இருந்து கோல்களை நோக்கி சற்று உயர்த்தி வழங்கப்பட்ட பந்தை, சபீர் பாய்ந்து தலையால் முட்டி கோலாக்கினார்.

அதன் பின்னர் மீண்டும் தன்னிடம் வந்த பந்தை மைதானத்தின் நடுவில் இருந்து நீண்ட தூரத்திற்கு எடுத்து வந்த சபீர், இறுதியாக ஜானக சமிந்தவிடம் கொடுத்தார். அவர் வந்த வேகத்திலேயே பந்தை வேகமாக கோலுக்கு உதைந்தார். எனினும் கம்பங்களை விடவும் உயர்ந்தவாறு வெளியே பந்து சென்றது.

அதன் பின்னரும் ஜாவா லேன் வீரர்களுக்கு தொடர்ச்சியாக பல வாய்ப்புகள் கிடைத்தன. எனினும் முன்னர் போன்றே அவர்களால் கோலுக்கான நிறைவுகளை மேற்கொள்ள முடியாமல் இருந்தது.

மறு திசையில் இளம் வீரர்கள் பலருடன் விளையாடிக்கொண்டிருந்த கம்பளை தரப்பினருக்கு, ஜாவா லேன் அணியின் மத்திய கள மற்றும் பின்கள வீரர்களைக் கடந்து செல்வது மிகவும் கடினமான ஒரு செயலாக இருந்தது. எனினும் இறுதி வரை அவர்களது முயற்சி பார்வையாளர்களை மிகவும் பரவசப்படுத்தியது.

முழு நேரம்: ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் 2 – 0 கிறிஸ்டல் பெலஸ் விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – மொஹமட் ரிஸ்கான் (ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்)

போட்டியின் பின்னர் ThePapare.com இடம் கருத்து தெரிவித்த ஜாவா லேன் அணியின் பயிற்றுவிப்பாளர் மொஹமட் நசார், ”இன்றைய போட்டியில் எமது வீரர்கள் அதிகமான கோல் வாய்ப்புக்களைத் தவற விட்டனர். நாம் 6 அல்லது 7 கோல்களைப் பெற்றிருக்க வேண்டிய ஒரு போட்டி இது. எனினும் எமது வீரர்களின் இன்றைய விளையாட்டு எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.

அடுத்த போட்டி தீர்மானம் மிக்க காலிறுதிப் போட்டி. இதில், முன்னர் நடந்த போட்டிகள் அனைத்தையும் விட பலம் வாய்ந்த ஒரு அணியையே நாம் சந்திக்க இருக்கின்றோம். அதற்கான பூரண தகுதியுடன் எமது அணி இருக்கின்றது” என்றார்.

தோல்வியடைந்த கிறிஸ்டல் பெலஸ் அணியின் பயிற்றுவிப்பாளரும், முகாமையாளருமான சுனில் சேனவீர ThePapare.com இடம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அவர், ”இன்றைய போட்டியில் நாம் தோல்லியடைந்தாலும் நான் மகிழ்ச்சியடைகின்றேன். காரணம் இன்று தேசிய அணியில் இடம் பிடித்தவர்கள் உட்பட எமது முக்கிய 4 வீரர்கள் விளையாடவில்லை. இந்நிலையில் எமது இளம் வீரர்களின் ஆட்டம் 100 வீத திருப்தியை அளிக்கின்றது.

சிறந்த இளம் புது முகங்களுடன் நாம் அடுத்த சம்பியன்ஸ் லீக் தொடரில் களமிறங்கவுள்ளோம். அத்தொடரில் பல மாற்றகளை மேற்கொண்டு சிறந்த ஒரு விளையாட்டைக் காண்பிப்போம்” என்றார்.

கோல் பெற்றவர்கள்

ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் – மாலக பெரேரா37’, சபீர் ரசூனியா 59’

மஞ்சள் அட்டை 

ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் – துவான் பாஹிம் 67’

கிறிஸ்டல் பெலஸ் விளையாட்டுக் கழகம் – மொஹமட் சப்ரி 39, மொஹமட் அக்ரம்  54’