அண்மைய காலங்களில், தொடர் தோல்விகளையே பார்த்து பழக்கப்பட்டிருந்த இலங்கை அணிக்கும், இலங்கை அணியின் இரசிகர்களுக்கும் நடந்து முடிந்த இந்திய அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டி மறக்க முடியாத ஒன்றாக மாறிப்போயிருந்தது. அதற்கு முக்கிய காரணம் வெறும் 23 வயதேயான இலங்கை அணியின் சுழல் வீரர் அகில தனன்ஞயவின் அபார பந்துவீச்சாகும்.
பல்லேகலையில் இடம்பெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில், வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 231 ஓட்டங்களை 47 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடியிருந்த இந்திய அணி தமது இலக்கினை அடைவதற்கு ஆரம்பத்தில் மிகவும் சிறப்பாகவே செயற்பட்டிருந்தது.
இந்திய அணி, ஆரம்பத்தில் விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி தமது தொடக்க வீரர்களின் அதிரடியான ஆட்டத்துடன் 109 ஓட்டங்களுடன் மிகவும் வலுவான நிலையில் காணப்பட்டிருந்தது.
எனினும், அப்போது பந்துவீச ஆரம்பித்த அகில தனன்ஞய இந்திய அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் சர்மா, விராத் கோலி, லோக்கேஷ் ராகுல், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, அக்ஷார் பட்டேல் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து, பலம்மிக்க எதிரணியினை ஒரு கட்டத்தில் 131 ஓட்டங்களிற்கு 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்த ஒரு இக்கட்டான நிலைக்கு மாற்றியிருந்தார்.
தனன்ஞயவின் இவ்வாறான பந்துவீச்சு பற்றி சமூக வலைதளமான டுவிட்டரில், இலங்கை அணியின் தற்போதைய, முன்னாள் வீரர்களாலும், கிரிக்கெட் வல்லுனர்களாலும் கருத்துக்கள் பகிரப்பட்டிருந்தன.
“என்னால், (தனன்ஞயவின்) ஆட்டத்தினை நேரடியாகப் பார்க்க முடியாமல் போயிருப்பினும், இந்தியா போன்ற நாடொன்றிற்கு எதிராக தனன்ஞய இப்படியான ஒரு பந்து வீச்சினை வெளிப்படுத்தியிருப்பது என்பது மிகவும் பாராட்டுக்குரிய விடயம். அதோடு இப்படியான நகர்வுகள் மிகவும் சிறப்பானது.” எனக் குறிப்பிட்டு குமார் சங்கக்கார தனன்ஞயவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து ஊக்கம் அளித்திருந்தார்.
அதேபோன்று, இலங்கை அணியின் சிரேஷ்ட பந்து வீச்சாளர்களில் ஒருவரான ரங்கன ஹேரத் இந்திய அணியுடனான குறித்த போட்டி நடைபெற்ற தினத்திற்கு முந்தைய தினத்திலேயே திருமண வாழ்க்கையில் இணைந்த இளம் சுழல் வீரருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, தான் தனது வாழ்க்கையில் கண்ட மிகவும் சிறந்த பந்து வீச்சுக்களில் அகில தனன்ஞயவின் குறித்த பந்து வீச்சும் ஒன்று எனக் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை அணிக்காக இதுவரையில், ஒருநாள் போட்டிகளில் 135 விக்கெட்டுக்களை பதம் பார்த்திருக்கும் பர்வீஸ் மஹரூப், அகில தனன்ஞயவின் பந்து வீச்சினையும் தாண்டி இந்திய அணி வெற்றி பெற்றிருப்பதால் சிறிது ஏமாற்றம் அடைவதாகவும், குறித்த போட்டியில் அணி தோற்றது தனன்ஞயவிற்கு சற்று கடினமானதாக அமையக்கூடும் என்ற விதத்தில் கருத்தினை வெளியிட்டிருந்தார்.
மேலும், இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலும், கிரிக்கெட் வர்ணனையாளர் ரொஷான் அபேசிங்கவும் தனன்ஞயவின் பந்து வீச்சிற்காகவும் புதிதாக திருமண வாழ்வில் இணைந்தமைக்காகவும் வாழ்த்துக்களை வெளியிட்டிருந்தனர்.
அகில தனன்ஞயவினை, இலங்கை அணியில் அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக செயற்பட்டிருந்த மஹேல ஜயவர்தன, “ இலங்கை அணிக்கு எதிர்பாராத ஒரு போட்டி முடிவு. ஆனாலும் ஒரு அணியாக இலங்கை நல்ல முறையில் செயற்பட்டிருந்தது. அகில தனன்ஞயவிற்காகவும் மிகவும் சந்தோமடைகின்றேன். “ என குறிப்பிட்டிருந்தார்.
2012 ஆம் ஆண்டிலேயே இலங்கை அணிக்கு அறிமுகமாயிருந்த தனன்ஞயவிற்கு, இதுவரையில் நான்கு ஒரு நாள் போட்டிகளில் மாத்திரமே விளையாட வாய்ப்பளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, லஹிரு திரிமான்ன, நீண்ட காலத்திற்குப் பின்னர் இவ்வாறனதொரு சிறந்த பந்து வீச்சினை தான் பார்ப்பதாகவும், அது தனக்கு இலங்கை அணியில் ஒரு காலத்தில் சிறப்பாக செயற்பட்ட அஜந்த மெண்டிசை ஞாபகமூட்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இன்னும், நீண்ட உபாதைகள் காரணமாக ஓய்விலிருக்கும் வேகப்பந்து வீச்சாளரான தம்மிக்க பிரசாத், தனன்ஞயவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து, இலங்கை அணி காட்டிய போராட்டத்தினை கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும், அடுத்த போட்டியில் இலங்கை சாதிக்கும் என தான் எதிர்பார்க்கின்றேன் எனவும் கூறியிருந்தார்.
இலங்கை அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் துரதிஷ்டவசமாக தோல்வி அடைந்திருப்பினும் சீரான பயணம் ஒன்றில் இருந்த மிகவும் சவால்மிக்க இந்திய அணியினை தனது மாய சுழலின் மூலம் அச்சுறுத்தினார் அகில தனன்ஞய. இது போன்ற திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனில், தற்போது துவண்டு போயிருக்கும் இலங்கை கிரிக்கெட், மீண்டும் எழுந்து வீர நடைபோடும் காலம் மிகத்தொலைவில் இல்லை என்பதே பலரதும் கருத்தாகும்.