11 வாரங்களாக விறுவிறுப்புடன் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி லீக் தொடரின் முடிவில் இறுதிப் போட்டிக்கு நிகராக இடம்பெற்ற போட்டியில் திரித்துவக் கல்லூரியை சொந்த மைதானத்தில் தோற்கடித்த றோயல் கல்லூரி சம்பியனாக முடிசூடிக் கொண்டது.
2017ஆம் ஆண்டிற்கான ரக்பி லீக் தொடரின் கிண்ணத்திற்கான முதற் பிரிவுப் போட்டிகள் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற நான்கு போட்டிகளுடன் நிறைவுக்கு வந்தன.
கிண்ணத்திற்கான பிரிவின் இரண்டாம் சுற்றில் இரண்டாம் வார போட்டிகளின் நிறைவில் நான்கு அணிகள் சம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை கொண்டிருந்தன. எனினும் நான்காவதும் இறுதியுமான வாரத்தின் போது திரித்துவக் கல்லூரி மற்றும் றோயல் கல்லூரி அணிகளுக்கிடையிலான போட்டி சம்பியன் அணியை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்திருந்தது.
சம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்புடன் நான்கு அணிகள்
பாடசாலைகளுக்கு இடையிலான சிங்கர் லீக் ரக்பி சம்பியன்ஷிப் தொடரில் மேலும் இரண்டு வாரங்களிற்கான…
இப்போட்டியானது 73ஆவது ‘பிரெட்பி’ கிண்ணத்திற்கான முதற் பாக போட்டியாகவும் காணப்பட்டதனால் ரக்பி ரசிகர்களினால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக அமைந்திருந்தது. இரு அணிகளும் சரி சமமாக மோதிக் கொண்ட போதிலும் போட்டியின் நிறைவில் 22-17 என்ற புள்ளிகள் அடிப்படையில் றோயல் கல்லூரியானது திரித்துவக் கல்லூரியை வீழ்த்தியது. றோயல் கல்லூரி திரித்துவக் கல்லூரியின் சொந்த மைதானமான பல்லேகளை மைதானத்தில் அவ்வணியை இதற்கு முன்னர் ஒரு தடவையே தோற்கடித்திருந்த நிலையில் இரண்டாவது முறையாகப் பெற்றுக் கொண்ட இவ்வெற்றி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாகவும் காணப்படுகின்றது.
சனிக்கிழமை மேலும் மூன்று போட்டிகள் இடம்பெற்றதுடன் இசிபதன மற்றும் புனித ஜோசப் கல்லூரி அணிகள் வெற்றிகளை பெற்றிருந்தன. இதேவேளை புனித பேதுரு மற்றும் புனித தோமியர் அணிகள் மோதிக் கொண்ட போட்டி சமநிலையில் நிறைவு பெற்றது.
வெஸ்லி கல்லூரியை எதிர்கொண்ட இசிபதன கல்லூரியானது எதிரணியை ஒரு புள்ளியேனும் பெறவிடாமல் தடுத்து 28-00 என இலகு வெற்றியை சுவீகரித்துக் கொண்டது. புனித ஜோசப் கல்லூரி மற்றும் ஸாஹிரா கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டியில் புனித ஜோசப் கல்லூரி 38-14 என வெற்றியை தனதாக்கியது. இவ்வருடத்திற்கான முதலாவதும் இறுதியுமான வெற்றி தோல்வியற்ற போட்டியாக புனித பேதுரு கல்லூரி மற்றும் புனித தோமியர் கல்லூரிகள் மோதிய போட்டி முடிவடைந்தது. போட்டியின் எண்பது நிமிடங்கள் நிறைவில் இரு அணிகளும் 25 புள்ளிகளை பெற்று போட்டியை சமநிலையில் நிறைவு செய்தன.
11 வாரங்கள் நிறைவில் இறுதி புள்ளிகள் அட்டவணை பின்வருமாறு காணப்படுகின்றது:
தொடரின் முதல் ஒன்பது வாரங்களின் போதும் தமது முழு ஆதிக்கத்தையும் நிலை நாட்டியிருந்த திரித்துவக் கல்லூரி முதலிடத்தை தக்கவைத்திருந்தது. புனித பேதுரு கல்லூரியுடனான அதிர்ச்சி தோல்வியின் பின்னரும் சராசரி புள்ளிகளின் அடிப்படையில் அவ்வணியே முதலிடத்தில் காணப்பட்டது.
எனினும் இறுதி வாரத்தில் பெற்ற தோல்வியுடன் மொத்தமாக இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவிய திரித்துவக் கல்லூரி 4.56 என்ற சராசரி புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டது. இறுதி வாரத்தில் வெற்றியைப் பெற்றுக் கொண்ட இசிபதன கல்லூரியும் இரண்டு போட்டிகளில் தோல்வியுற்றிருந்தது. எனினும் சராசரி புள்ளிகள் அடிப்படையில் அவ்வணி திரித்துவக் கல்லூரியை விட முன்னிலையில் (4.60) காணப்பட்டதால் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
இறுதியாக 2015ஆம் ஆண்டில் லீக் சம்பியன்களாக முடி சூடிய றோயல் கல்லூரி இவ்வருடமும் ஓவின் அஸ்கியின் தலைமையின் கீழ் வெற்றிவாகை சூடியுள்ளது. நான்கு வருடங்களின் பின்னர் லீக் தொடரின் போது ஒரு போட்டியிலேனும் தோல்வியைத் தழுவிய அணியொன்று சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2013-2016 காலப்பகுதியில் சம்பியன் பட்டம் வென்ற அனைத்து அணிகளும் ஒரு போட்டியிலேனும் தோல்வி பெறாமல் சம்பியன்களாக தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2015ஆம் ஆண்டில் றோயல் கல்லூரி சம்பியன் பட்டத்தை வென்ற போதும் இவ்வருடத்தினை போன்றே இசிபதன கல்லூரி இரண்டாம் இடத்தையும் திரித்துவக் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்தன.
வெஸ்லி கல்லூரியானது தொடரின் முதல் வாரத்தில் திரித்துவக் கல்லூரியிடம் படுதோல்வியடைந்த போதிலும் அதன் பின்னர் முன்னேற்றகரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி நான்காம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. இவ்வணி றோயல், இசிபதன மற்றும் திரித்துவக் கல்லூரி அணிகளிடம் மாத்திரமே தோல்வி அடைந்திருந்தது.
கடந்த வருடம் 8ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்ட வெஸ்லி கல்லூரி இம்முறை சிறந்த முன்னேற்றத்தை வெளிக்காட்டியிருந்தமையினால் அவ்வணியை பொறுத்தமட்டில் வெற்றிகரமான பருவகாலம் எனக் கூறலாம்.
வெஸ்லி கல்லூரியை விட 0.05 புள்ளிகள் பின்னிலையில் காணப்பட்ட புனித ஜோசப் கல்லூரி ஐந்தாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. எனினும் இரண்டாம் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவ்வணி எதிர்வரும் பருவகாலத்தில் எதிர்பார்க்கக் கூடிய ஒரு அணியாக காணப்படுகின்றது.
சில போட்டிகளில் அதிசிறப்பாகவும் சில போட்டிகளில் படுமோசமாகவும் விளையாடி எப்போட்டியிலும் யூகிக்க முடியாத அணியாக காணப்பட்ட புனித பேதுரு கல்லூரி ஆறாம் இடத்தையே பெற்றுக் கொண்டது. பிரபல திரித்துவக் கல்லூரி மற்றும் இசிபதன கல்லூரி அணிகளுக்கு அதிர்ச்சியளித்திருந்த அவ்வணி ஏனைய போட்டிகளில் சிறப்பாட்டத்தை வெளிப்படுத்தத் தவறியிருந்தது.
இதேவேளை கடந்த பருவகாலத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட புனித தோமியர் கல்லூரியினால் இம்முறை ஏழாம் இடத்தையே பெறமுடிந்தது. ஒன்பது போட்டிகளில் மூன்று போட்டிகளில் மாத்திரம் வெற்றிபெற்று அவ்வணி ஏமாற்றமளித்திருந்தது.
இவ்வருடம் முதற் தர அணியாக தரமேற்றம் செய்யப்பட்டு முதற் சுற்றில் அசத்தலான விளையாட்டுப்பாணியை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த ஸாஹிரா கல்லூரி, இரண்டாம் சுற்றின் நான்கு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி எட்டாம் இடத்தையே பெற்றுக் கொண்டது. எனினும் கடந்த பருவகாலத்துடன் ஒப்புநோக்குகையில் அவ்வணி சிறந்த முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது.
இதன்படி கடந்த சில பருவகாலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது 2017ஆம் ஆண்டிற்கான ரக்பி லீக் தொடர் மிகவும் விறுவிறுப்பானதாகவும் பல அணிகள் ஏறத்தாழ ஒரே மட்டத்தில் காணப்பட்டதால் இறுதி வாரம் வரை வெற்றியாளரை யூகிக்க முடியாமலும் அமைந்திருந்தது. இலங்கை ரக்பி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய கண்கவர் மற்றும் சுவாரஷ்யமான தொடராக இத்தொடர் காணப்பட்டது.
இறுதியாக, இத்தொடரின் உடனடி செய்திகள் மற்றும் போட்டி விபரங்களை கண்டறிய ThePapare.com ஆகிய எம்முடன் தொடர்ந்து இணைந்திருந்த எமது அபிமான ரசிகர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.