எவரெடி வெற்றிக் கிண்ண அரையிறுதியில் மோதவுள்ள நான்கு அணிகள்

512
Eveready cup - Quarter final results

அம்பாரை மாவட்ட கால்பந்து லீக்கின் அனுசரணையுடன் மருதமுனை எவரெடி விளையாட்டுக் கழகம் நடாத்தும் ”எவரெடி வெற்றிக் கிண்ணம் – 2017″ பகலிரவு கால்பந்து சுற்றுப்போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு மருதமுனை ஒலிம்பிக்,  மட்டக்களப்பு டிஸ்கோ, மருதமுனை கோல்ட் மைன்ட் மற்றும் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி ஆகிய விளையாட்டுக் கழக அணிகள் தெரிவாகியுள்ளன.  

எவரெடி கிண்ண கால்பந்து தொடரின் முதல் சுற்று முடிவுகள்

அம்பாரை மாவட்ட கால்பந்து லீக்கின் அனுசரணையுடன்..

மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டங்களில் உள்ள பலம் கொண்ட 16 அணிகள் மோதிய குறித்த சுற்றுப் போட்டி கடந்த 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அன்றிலிருந்து தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இடம்பெற்ற முதல் சுற்றில் வெற்றி பெற்ற 8 அணிகள் அடுத்த சுற்றான காலிறுதிக்குத் தகுதி பெற்றன.

இதன்படி கடந்த 17ஆம் திகதி மாலை இடம்பெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் அணியும், மருதமுனை கிறீன்மெக்ஸ் அணியும் விளையாடின. இதில் 2 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் ஒலிம்பிக் அணி வெற்றி பெற்று முதலாவது அணியாக அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

அன்றைய தினம் இரவு 8.00 மணிக்கு இடம்பெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டியில் மட்டக்களப்பு டிஸ்கோ அணியும், மருதமுனை யுனிவர்ஸ் அணியும் விளையாடின. இதில் 4 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் டிஸ்கோ அணி இலகுவாக வெற்றி பெற்று இரண்டாவது அணியாக அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டது.

அடுத்த நாள் (18ஆம் திகதி) மாலை இடம்பெற்ற மூன்றாவது காலிறுதிப் போட்டியில் மருதமுனை கோல்ட் மைன்ட் அணியும், மட்டக்களப்பு யங் ஸ்டார் அணியும் விளையாடின. இதில் போட்டி நிறைவுறும் நேரத்தில் கோல் எண்ணிக்கை 2 – 2 என சமநிலைக்கு வந்ததால் பெனால்டி உதை வழங்கப்பட்டது.

அதன்போது, 4 – 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் கோல்ட் மைன்ட் அணி வெற்றி பெற்று மூன்றாவது அணியாக அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

அதேதினம் இரவு 8.00 மணிக்கு இடம்பெற்ற நான்காவது காலிறுதிப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணியும், ஏறாவூர் லக்கி ஸ்டார் அணியும் மோதின. இதில் 2-1 என்ற கோல்கள் அடிப்படையில் வை.எஸ்.எஸ்.சி  அணி வெற்றி பெற்று நான்காவது அணியாக எவரெடி கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று (19) மாலை இடம்பெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் அணியும், மட்டக்களப்பு டிஸ்கோ அணியும் மோதவுள்ளன. இரவு 8.00 மணிக்கு இடம்பெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி மற்றும் கோல்ட் மைன்ட் அணிகள் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<