நேபாளத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கங்களை வென்ற கையோடு, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கும் தோற்றி அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட ஆறு வீராங்கனைகள் விளையாட்டுத்துறை அமைச்சினால் கௌரவிக்கப்பட்டனர்.
13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா கடந்த டிசம்பர் மாதம் 01ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நேபாளத்தின் தலைநகர் கத்மண்டு மற்றும் பொக்கஹரா ஆகிய நகரங்களில் நடைபெற்றது.
இதன்போது கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெற்ற சாதாரண தர பரீட்சைக்கு முகங்கொடுக்க இருந்த ஆறு வீராங்கனைகள் இலங்கை குழாத்தில் இடம்பிடித்திருந்ததுடன், இவர்களுக்கு நேபாளத்தில் வைத்து பரீட்சை எழுதுவதற்கான சகல ஏற்பாடுகளையும் தேசிய ஒலிம்பிக் குழு செய்து கொடுத்தது.
நேபாளத்தில் சாதாரண தர பரீட்சை எழுதிய இலங்கை வீராங்கனைகளுக்கு சிறந்த பெறுபேறுகள்
இதன்படி, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்புடன், கத்மண்டுவில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட பரீட்சை நிலையத்தில் வைத்து இந்த மாணவிகள் பரீட்சை எழுதியிருந்தனர்.
இதனிடையே, கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டிருந்ததுடன், நேபாளத்தில் வைத்து சாதாரண தர பரீட்சை எழுதிய ஆறு மாணவிகளும் அதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டனர்.
இதில் பெண்களுக்கான வாள் சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கங்களை மொறட்டுவை வேல்ஸ் குமாரி கல்லூரியைச் சேர்ந்த சதுனி பாக்யா கருணாரத்ன, 9 பாடங்களிலும் ஏ சித்திகளையும், அதே பாடசாலையைச் சேர்ந்த மற்றுமொரு மாணவியான சமோதி ப்ரதிபா கருணாரத்ன 8 பாடங்களில் ஏ சித்திகளையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கையின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம் தியகமவில்
இதனிடையே பெண்களுக்கான டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கொழும்பு மகளிர் வித்தியாலத்தைச் சேர்ந்த அலானா செனவிரத்ன 7 பாடங்களில் ஏ சித்திகளையும், பெண்களுக்கான மேசைப்பந்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற அதே பாடசாலையைச் சேர்ந்த அய்லா ஷாரிக் சிட்டி 5 பாடங்களில் ஏ சித்திகளையும், ஒரு பி சித்தி மற்றும் ஒரு சி சித்திகளைப் பெற்றுக் கொண்டனர்.
மேலும், பெண்களுக்கான ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கொழும்பு விஷாகா கல்லூரியைச் சேர்ந்த யெஹானி குருப்பு 4 பாடங்களில் ஏ சித்தியினையும், பெண்களுக்கான நீச்சல் போட்டியில் 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்ற அதே கல்லூரியைச் சேர்ந்த கங்கா செனவிரத்ன, ஒரு பாடத்தில் ஏ சித்தயுடன் இரண்டு பி சித்திகள் மற்றும் ஒரு சி சித்தியினைப் பெற்று உயர்தரத்தில் கல்வி கற்கும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில், தெற்காசிய விளையாட்டு விழாவில் பதக்கங்களை வென்று, சாதாரண தர பரீட்சையிலும் அதிசிறந்த பெறுபேகளைப் பெற்றுக்கொண்ட குறித்த ஆறு வீராங்கனைகளையும் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (10) விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கொரோனாவுக்காக ஒருநாள் சம்பளத்தைக் கொடுக்கும் விளையாட்டுத்துறை ஊழியர்கள்
கல்வி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் சேவைகள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட ஆறு வீராங்கனைகளுக்கும் தலா 50 ஆயிரம் ரூபா பணப்பரிசிலும் கையளிக்கப்பட்டன.
இதனிடையே, குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் டலஸ் அழகப்பெரும உரையாற்றுகையில்,
கடந்த டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கங்களை வென்று, மறுபுறத்தில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கும் தோற்றி அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட ஆறு வீராங்கனைகளும் இந்நாட்டில் உள்ள ஆறு மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கும் சிறந்த முன் உதாரணமாக இடம்பெற்றுவிட்டார்கள்.
நிச்சயம் இவர்களது பெயர்கள் இலங்கையின் பாடசாலைகள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதியப்பட வேண்டும்.
இந்நாட்டில் உள்ள பெற்றோர்கள் பரீட்சையை மாத்திரம் இலக்காகக் கொண்டு தமது பிள்ளைகளை வளர்க்காமல், கல்வியைப் போல விளையாட்டையும் சமநிலையுடன் செய்வதற்கு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
எனவே அவ்வாறு கல்வியையும், விளையாட்டையும் வெற்றிகொண்ட இந்த ஆறு மாணவிகளின் பெற்றோர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்த அரசாங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உண்மையில், பிள்ளைகளின் வாழ்க்கையில் விளையாட்டு உள்ளிட்ட இதர செயற்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டுதான் இவ்வருடம் முதல் நாங்கள் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் தவணைப் பரீட்சையை இரத்து செய்தோம்.
Photos: Felicitating SAG Athletes for excelling in O/L Examination
ஏனெனில், அந்தக் காலப்பகுதியில் தான் இல்ல விளையாட்டுப் போட்டிகள், மாபெரும் கிரிக்கெட் சமர் மற்றும் கல்விச் சுற்றுலா என்பன நடைபெறுகின்றன.
குறிப்பாக, பெரும்பாலான அதிபர்கள் தமக்கு பெற்றோர்களினால் அனுப்பி வைக்கின்ற கடிதங்களை என்னிடம் காண்பித்தனர்.
அதில் பெரும்பாலானவை தமது பிள்ளைக்கு ஏதாவது நோய் இருப்பதாகத் தெரிவித்து விடுமுறை வேண்டும் அல்லது இல்ல விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றச் செய்ய வேண்டாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தற்போது இலங்கையின் உள்ள பெரும்பாலான பாடசாலைகளின் ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது.
உண்மையில் இலங்கையில் உள்ள பெரும்பாலான பிள்ளைகள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
46ஆவது தேசிய விளையாட்டு விழாவை டிசம்பரில் நடத்த உத்தேசம்
எனவே, பெற்றோர்கள் தமது பிள்ளைகளை சிறுவயது முதல் விளையாட்டு உள்ளிட்ட பொழுதுபோக்குகளில் கட்டாயம் ஈடுபடச் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதேநேரம், கடந்த வருடம் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆட்டநிர்ணயம் மற்றும் நிதி சார்ந்த முரண்பாடுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட இறுதி அறிக்கை ஊடகங்களிடம் நேற்று (10) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இது இவ்வாறிருக்க, விளையாட்டுத்துறை செயலாளர் கே.டி.எஸ் ருவன்சந்த்ர, இலங்கை பரீட்சைகள் திணைக்கள பணிப்பாளர் மற்றும் கொழும்பு விஷாகா வித்தியாலயம். கொழும்பு மகளிர் கல்லூரி மற்றும் மொறட்டுவை வேல்ஸ் குமாரி கல்லூரி ஆகிய பாடசாலைகளின் அதிபர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<