ஐரோப்பிய லீக் சம்பினாக முடிசூடிய செல்சி

206

ஈடன் ஹசார்ட்டின் இரட்டை கோல் மூலம் ஆர்சனல் கழகத்தை 4-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐரோப்பிய லீக் கிண்ணத்தை செல்சி கைப்பற்றியது.

அசர்பைஜான் தலைநகர் பகுவில் (Baku Olympic Stadium) அந்நாட்டு நேரப்படி கடந்த புதன்கிழமை (29) மாலை நடைபெற்ற இந்தப் போட்டிக்கு ஆர்சனல் மற்றும் செல்சி அணிகள் 2,500 மைல்கள் பயணித்து பங்கேற்றது. எனினும் பாதி அரங்கே நிரம்பிய நிலையில் நடைபெற்ற இந்தப் போட்டி மந்தமாகவே இருந்தது.

எனினும் செல்சி அணி 2013 ஆம் ஆண்டு ஐரோப்பிய லீக்கை வென்ற பின் ஐரோப்பிய பட்டம் ஒன்றை வெல்வது இது முதல் முறையாகும். அந்த அணியின் ஐந்தாவது ஐரோப்பிய கிண்ணம் இதுவாகும். அந்த அணியை விடவும் இங்கிலாந்து கழகங்களில் லிவர்பூல் (8) அதிக ஐரோப்பிய கிண்ணங்களை வென்றுள்ளது.   

உலகக் கிண்ண தகுதிகாணுக்கு முன் லாவோஸுடன் இலங்கை பலப்பரீட்சை

இந்நிலையில் மந்தமாக ஆரம்பமான இந்தப் போட்டியின் முதல் பாதியில் கோல் பெறுவதற்கு இரு அணிகளும் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

முதல் பாதி:  செல்சி 0 – 0 ஆர்சனல்

எனினும் இரண்டாவது பாதி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே முன்னாள் ஆர்சனல் வீரர் ஒலிவியர் கிரவுட் தலையால் ஹெடர் செய்து கோலொன்றை புகுத்தி செல்சி அணியை முன்னிலை பெறச் செய்தார்.

தொடர்ந்து 59 ஆவது நிமிடத்தில் ஈடன் ஹசார்ட் பரிமாற்றிய பந்தைப் பெற்ற பெட்ரே கோல் கம்பத்தின் மத்தியில் இருந்து தனது இடது காலால் உதைத்து செல்சிக்கு இரண்டாவது கோலை பெற்றுக் கொடுத்தார்.  

நான்கு நிமிடங்கள் கழித்து கிரவுட் எதிரணி பெனால்டி பெட்டிக்குள் வீழ்த்தப்பட்டதால் வழங்கப்பட்ட ஸ்பொட் கிக் மூலம் ஹசார்ட் கோல் புகுத்தி செல்சி அணியை 3-0 என முன்னிலை பெறச் செய்தார்.

இந்நிலையில் பெனால்டி பெட்டிக்கு வெளியில் இருந்து அலெக்ஸ் இவோபி ஆர்சனல் அணிக்காக அபார கோல் ஒன்றை புகுத்தினார். இது அந்த அணி ஆட்டத்திற்கு திரும்ப போதுமாக அமையவில்லை.

மூன்று நிமிடங்கள் கழித்து 72 ஆவது நிமிடத்தில் கிரவுட் தந்திரமாக பரிமாற்றி பந்தைக் கொண்டு ஈடன் ஹசார்ட்  கோல் புகுத்தினார்.

பெல்ஜியத்தின் நட்சத்திர வீரரான ஈடன் ஹசார்ட் செல்சி அணியுடனான ஏழு ஆண்டு உறவை முடித்துக் கொண்டு ரியல் மெட்ரிட் கழகத்திற்கு செல்ல எதிர்பார்த்திருக்கும் நிலையில் இது அவரது பிரியாவிடை வெற்றியாகவும் அமைய வாய்ப்பு உள்ளது.

”நான் முடிவை ஏற்கனவே எடுத்துவிட்டேன். இரு கழகங்களுக்காகவும் எதிர்பார்த்திருக்கிறேன். இது பிரியாவிடையாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் கால்பந்தில் எதுவும் நடக்கலாம்” என்று ஹசார்ட் போட்டிக்குப் பின் குறிப்பிட்டிருந்தார்.  

முழு நேரம்: செல்சி 4 – 1 ஆர்சனல்

கோல் பெற்றவர்கள்

செல்சி – ஒலிவியர் கிரவுட் 49′, பெட்ரோ 60′, ஈடன் ஹசார்ட் 65′ (பெனால்டி), 72′

ஆர்சனல் – அலெக்ஸ் இவோபி 69′

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க  <<