கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்தில் நடைபெறவிருந்த கன்னி யூரோ T20 ஸ்லேம் கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யூரோ T20 ஸ்லேம் தொடரை இந்த ஆண்டு நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது. குறிப்பாக அனுசரணையாளர்கள், போட்டி ஏற்பாட்டாளர்கள், அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய கிரிக்கெட் சபைகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்த நிலையில், தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற தொடங்கியுள்ளதால், யூரோ T20 ஸ்லேம் தொடர் பிற்போடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியின் உப தலைவராக மொயீன் அலி நியமனம்
“நாம் போட்டி தொடரை கட்டாயம் நடத்துவதற்கான பல வழிகள் தொடர்பில் கலந்துரையாடினோம். ஒரே மைதானத்தில் போட்டியை நடத்துவது, அணிகள் மற்றும் வீரர்களை குறைப்பது, போட்டிகளை குறைப்பது என பல வழிகளில் கலந்துரையாடினோம். தொடரை விரைவுப்படுத்தி, நெதர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு தொடரை நடத்துவதற்கும் நாம் திட்டமிட்டோம். ஆனால், இப்போதைய நிலையில் திட்டங்கள் தொடர்பில் சரியான நம்பிக்கை இல்லை” என அயர்லாந்து கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி வோரென் டியோட்ரம் தெரிவித்தார்.
“நாம் தொடரை நடத்துவதற்கான பாதையை இழந்துவிட்டோம். கொவிட்-19 வைரஸ் காரணமாக அயர்லாந்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், விரைவில் நீக்கப்படும் என்ற நிலையில் இருந்த போதும், அது தற்போது ஆகஸ்ட் 10ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு தொடரை நடத்துவதற்கான திட்டத்தை யூரோ T20 ஸ்லேம் தொடருக்கான சபை கைவிட்டுள்ளது.“
“அதேநேரம், நாம் ஆரம்பித்துவிட்ட அதனை கட்டாயமாக தொடருவோம். இந்த தொடரானது வெற்றிகரமான ஒரு தொடராக அமையும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், அதற்கான சரியான தருணம் இதுவல்ல. மூன்று கிரிக்கெட் சபைகளும், தொடருக்கான முழுமையான விடயங்களையும் செயற்படுத்தினால் மாத்திரமே, குறித்த தொடர் வெற்றியானதாக அமையும் என எதிர்பார்க்கின்றோம்.“
“குறிப்பாக தொடர் முழுமையானதாக நடைபெற வேண்டும் என்பதுதான் எமது எண்ணம். காரணம், எமது வீரர்களுக்கு சரியான அனுபவத்தினை இந்த தொடரின் மூலம் கொடுக்க வேண்டும் என எண்ணியிருந்தோம். அதுவே எங்களுடைய முதல் நோக்கமாகவும் இருந்தது. எனவே தான், தொடரை ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளோம். அதுமாத்திரமின்றி எதிர்வரும் ஆண்டு யூரோ T20 ஸ்லேம் தொடரை நடத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, நாம் இதற்கான திட்டங்களை தொடருவோம்” என மேலும் குறிப்பிட்டார்.
மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க…