பலம் வாய்ந்த பார்சிலோனாவுக்கு 4 கோல்களால் அதிர்ச்சித் தோல்வி கொடுத்த PSG

1077

ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஸ் லீக் சுற்றுப் போட்டியில் பிரபல பார்சிலோனா அணியை, பரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணி (PSG) 4-0 என்ற கோல்கள் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடையச் செய்து, சர்வதேச அளவில் இன்று அதிகம் கதைக்கப்படும் அணியாக தம்மை மாற்றியுள்ளது.  

ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஸ் லீக் சுற்றுப் போட்டிகளின் குழு மட்ட போட்டிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் நேற்றைய தினம் 16 அணிகளுக்கிடையிலான நொக் அவுட் சுற்றுப் போட்டிகள் ஆரம்பமாகின.

குழு மட்ட போட்டிகளில் மொத்தமாக 32 அணிகள் போட்டியிட்டன. அதில் ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களை பெற்ற அணிகள் நோக் அவுட்  சுற்றுக்கு தகுதி பெற்றன. அந்த வகையில் நேற்றைய தினம் இரண்டு போட்டிகளின் முதல் கட்ட ஆட்டம் (First Leg) நடைபெற்றன

ப்ரீமியர் லீக்கில் இரண்டாம் இடத்தை தொடர்ந்து தக்க வைத்த மன்செஸ்டர் சிட்டி

இங்லிஷ் பிரீமியர் லீக் பிரீமியர் லீக் தொடரில் இடம்பெற்ற மன்செஸ்டர் சிட்டி மற்றும்…

பரிஸ் செயிண்ட் ஜெர்மைன்  (PSG) எதிர் பார்சிலோனா

சமபலம் மிக்க இவ்விரு அணிகளுக்கிடையிலான விறுவிறுப்பான போட்டியில் எதிர்பாராத வகையில் பார்சிலோனா அணியின் லியோனல் மெஸ்ஸி, நெய்மர் மற்றும் லூயிஸ் சுவாரஸ் ஆகிய அதிரடி வீரர்களுக்கு மத்தியில் 4-0 என்ற கோல்கள் கணக்கில் பரிஸ் செயிண்ட் ஜெர்மைன் கால்பந்து கழகம் வெற்றி பெற்று அதிர்ச்சியளித்தது.

ஏஞ்சல் டி மரியா தனது பிறந்த நாள் பரிசாக இரண்டு கோல்களை அடித்து இந்த போட்டியில் PSG பெற்ற வெற்றிக்கு பெரிதும் பங்காற்றினார். 29 வயதான ஏஞ்சல் டி மரியா, முதல் பாதி நேரத்தின் 18ஆவது நிமிடமும் இரண்டாம் பாதி நேரத்தின் 55ஆவது நிமிடமும் கோல்களை அடித்தார்.

அதே நேரம், எஞ்சிய இரு கோல்களையும் ஜூலியன் டிராக்ஸ்ளர் போட்டியின் 40ஆவது நிமிடத்திலும், எடின்சன் கவாணி இரண்டாம் பாதி நேரத்தியின் 72ஆவது நிமிடத்திலும் பெற்றுக் கொடுத்தனர்.

2006/07ஆம் ஆண்டுக்கு பின்னர் லியோனல் மெஸ்ஸி, நெய்மர் மற்றும் லூயிஸ் சுவாரஸ் போன்ற உலக புகழ் பெற்ற வீரர்களுக்கு மத்தியில் பார்சிலோனா அணி பெற்றுக்கொண்ட மோசமான தோல்வியாக இது கருதப்படுகின்றது.

முதல் கட்டப் போட்டியில் எதிரணியின் சொந்த மைதானத்தில் தோல்வியை சந்தித்துள்ள பார்சிலோனா, இதன் அடுத்த கட்டப் போட்டியை எதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி பார்சிலோனா, கேம்ப் நொவ்வில் எதிர்கொள்ளவுள்ளது.

பென்ஃபிக்கா எதிர்  டார்ட்மண்ட்

16 அணிகளை கொண்ட நொக் அவுட் சுற்றுப் போட்டிகளின் இவ்விரு அணிகளுக்கிடையிலான முதல் கட்ட போட்டியில் கோஸ்டாஸ் மித்ரோகலோவின் அதிரடி கோலின் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் பென்ஃபிக்கா கால்பந்து கழகம் வெற்றியீட்டியது.

பென்ஃபிக்கா கால்பந்து கழகம் சார்பாக சிறப்பாக விளையாடிய கோஸ்டாஸ் மித்ரோகலோ இத்தொடரில் தனது 13ஆவது போட்டியில் 13ஆவது கோலை நேற்றைய தினம் பதிவு செய்தார். போட்டியின் 48ஆவது நிமிடம் கிடைக்கப் பெற்ற கோணர் உதை மூலம் உள்ளவந்த பந்தினை கோலாக மாற்றியதன் ஊடாகவே அவர் தனது அணிக்கான குறித்த வெற்றி கோலைப் பெற்றார்.

இரண்டாம் பாதியில் கிடைக்கப் பெற்ற இலகுவான பெனால்டி வாய்ப்பை கைநழுவ விட்ட டார்ட்மண்ட் அணி, இந்தத் தோல்வியின் மூலம் இரண்டாம் கட்ட சுற்றுப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சுழல்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும் குழு மட்டப் போட்டிகளில் மொத்தமாக 21 கோல்களை பதிவு செய்த இவ்வணி, இந்தப் போட்டியில் எவ்விதமான கோலையும் பதிவு செய்யாதது குறிப்பிடத்தக்கது

பென்ஃபிக்கா அணித் தலைவர் லூயிசா அவரது 500ஆவது கழக போட்டிகளுக்காக களமிறங்கியிருந்தார். இவ்வணிகளுகிடையிலான தீர்மானம் மிக்க இரண்டாம் கட்ட போட்டி ஜேர்மன், டார்ட்மண்ட்டில் எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள்

அணி 1 அணி 2 முதல் சுற்று இரண்டாம் சுற்று
மன்செஸ்டர் சிட்டி  மொனாக்கோ பெப்ரவரி 21 மார்ச்  15
ரியல் மட்ரிட்  நாப்போலி பெப்ரவரி 15 மார்ச் 07
பென்ஃபிக்கா  டார்ட்மண்ட் (1–0)

பெப்ரவரி 14

மார்ச் 08
பயெர்ன் முனிச்  ஆர்சனல் பெப்ரவரி 18 மார்ச் 07
போர்டோ  ஜுவண்டஸ் பெப்ரவரி 22 மார்ச் 14
பேயர் லெவர்க்சென்  அட்லிடிகோ மெட்ரிட் பெப்ரவரி 21 மார்ச் 15
பரிஸ் செயிண்ட் ஜெர்மைன்  பார்சிலோனா (4–0)

பெப்ரவரி 14

மார்ச் 08
செவில்லா  லெஸ்டர் சிடி பெப்ரவரி 22 மார்ச் 14