யூரோ கிண்ண கால்பந்த தொடரில் 53 வருடங்களுக்கு முன்பு சம்பியன் கிண்ணம் வென்ற இத்தாலி கால்பந்து அணி, மீண்டும் தம்முடைய பிரபலமான பின் களத்தை பலமாக கொண்டு, சாதனை படைக்க காத்திருக்கிறது.
யூரோ வரலாறு
இத்தாலி அணி கடந்த 1968ஆம் ஆண்டு தமது சொந்த மண்ணில் விளையாடிய யூரோ கிண்ணத்தில், சம்பியனாக முடிசூடியிருந்தது. குறித்த இந்த ஆண்டிலேயே முதன் முதலாக யூரோ கிண்ணத்தில் விளையாட தகுதியும் பெற்றிருந்தது. தொடரின் முதல் கட்ட (1st Leg) இறுதிப் போட்டியானது 1-1 என சமனிலையாக, இரண்டாவது இறுதிப் போட்டியில் யுகொஸ்லேவியா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சம்பியனாகியது.
இலகு வெற்றியுடன் யூரோ 2020ஐ ஆரம்பித்த இத்தாலி
இதன் பின்னர் கடந்த 2000ம் ஆண்டு மற்றும் 2012ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு இத்தாலி அணி தகுதிபெற்றிருந்தாலும், துரதிஷ்டவசமாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்தது.
இத்தாலி எவ்வாறு தகுதிபெற்றது?
ஜேர்மனி அணிக்கு எதிராக 2016 யூரோ கிண்ணத்தின் காலிறுதியில், பெனால்டி உதைகளால் இத்தாலி தோல்வியடைந்தது. இதன் பின்னர் அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து அண்டானியோ கொண்ட்டே விலகினார். இதனை தொடர்ந்து புதிய முகாமையாளராக கியான் பீரோ பதவியேற்றார். எனினும், இத்தாலி அணி 2018ம் ஆண்டு பிஃபா உலகக் கிண்ணத்தொடருக்கான வாய்ப்பை இழந்தது. இதன்மூலம் 1992ம் ஆண்டுக்கு பின்னர் மிகப்பெரிய தொடரொன்றின் வாய்ப்பை இழந்திருந்தது.
இந்த வீழ்ச்சியை தொடர்ந்து இத்தாலி கால்பந்து அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக ரொபேர்டோ மன்ச்சினி நியமிக்கப்பட இத்தாலி அணி வளர்ச்சி பாதையை நோக்கியது. ரொபேர்டோ மன்ச்சினியின் கீழ் களமிறங்கிய இத்தாலி அணி மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறத்தொடங்கியது. உலகின் சிறந்த பயிற்றுவிப்பாளர்களில் ஒருவராக பார்க்கப்பட்ட ரொபேர்டோ மன்ச்சினியின் கீழ், 2018ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கி இதுவரையில் எந்தவொரு போட்டியிலும் இத்தாலி அணி தோல்வியடையவில்லை. தொடர்ச்சியாக 27 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன், 75 கோல்களை இத்தாலி அணி பெற்று, 7 கோல்களை மாத்திரமே எதிரணிகளுக்கு வழங்கியுள்ளது.
இத்தாலி அணி யூரோ தகுதிச் சுற்றுத் தொடரின் குழுநிலையில், 10 போட்டிகளிலும் வெற்றிபெற்று சாதித்தது. இதில், 37 கோல்களை இத்தாலி அணி பெற்றதுடன், 4 கோல்களை மாத்திரமே எதிரணிகளுக்கு வழங்கியிருந்தது.
அதேநேரம், இறுதியாக நடைபெற்ற சர்வதேச நட்பு ரீதியான போட்டிகளில் சென் மரினோ அணியை 7-0 எனவும், செக் குடியரசு அணியை 4-0 எனவும் வீழ்த்தியிருந்தது.
பலம் மற்றும் பலவீனம்
இத்தாலி அணியின் மிகப்பெரிய பலம் காற்றும் உள்செல்லாத அவர்களது பின் களம். குறிப்பாக தலைவர் ஜியொர்ஜியோ செய்லினி மற்றும் லியானார்டோ பொனுச்சி ஆகிய இருவரும், தற்போதைய கால்பந்து உலகத்தில் மிகச்சிறந்த மத்திய பின் கள வீரர்கள் (Center Backs). இதனால், மிகவும் பலமான முன் கள வீரர்களை கொண்ட அணிகளும் தடுமாறக்கூடும்.
அதேநேரம், ரொபேர்டோ மன்ச்சினி, கோல்களை பெறுவதற்கு தங்களுடைய முன் கள வீரர்களுக்கு அதிகம் அழுத்தம் கொடுப்பதில்லை. தகுதிச் சுற்றுப் போட்டிகளில் மொத்தமாக 37 கோல்களை இத்தாலி அணி பெற்றுள்ளதுடன், இதில் 19 வீரர்கள் கோல்களை பெற்றுள்ளனர். அத்துடன், பந்து பரிமாற்றங்கள் மற்றும் உயர்த்தி மேற்கொள்ளப்படும் பந்து பரிமாற்றங்கள், எதிரணி பின் களத்துக்கு அச்சுறுத்தலாக அமையும்.
அதுமாத்திரமின்றி, யூரோ கிண்ணத்தில் அவர்களுடைய லீக் போட்டிகள் அனைத்தும் தங்களுடைய சொந்த மைதானத்தில் நடைபெறவுள்ளமை இத்தாலி அணிக்கு மேலும் பலமளிக்கும். இவர்களுக்கான லீக் போட்டிகள் அனைத்தும் ரோமின் ஒலிம்பிகோ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
எனினும், இத்தாலி அணிக்கு நொக்-அவுட் போட்டிகளில் மிகப்பெரிய பின்னடைவாக இருக்கப்போகும் விடயம், கழக போட்டிகளில் சிறப்பாக செயற்படும் முன்னணி வீரர்கள், தேசிய அணிக்காக சோபிக்க தவறிவருகின்றனர். சீரோ இமோபைல், லோரென்சோ இன்சைன் மற்றும் எண்ரியா பெலோட்டி ஆகியோர் கழகங்களுக்கான போட்டிகளில் தொடர்ச்சியாக பிரகாசித்து வரும் போதும், இத்தாலி அணிக்காக சிறப்பாக ஆடியிருக்கவில்லை.
குழுநிலையில் சுவிஸ்லாந்து, துருக்கி மற்றும் வேல்ஸ் அணிகள் தங்களுடைய தினத்தில் எதிரணிக்கு ஆச்சரியத்தை கொடுக்கக்கூடிய அணிகள். எனவே, ஆரம்பம் முதல் இத்தாலி அணி சிறந்த கால்பந்தை ஆடும் பட்சத்திலேயே வெற்றிகளை பெறமுடியும்.
அதுமாத்திரமின்றி இத்தாலி அணியின் மத்திய கள வீரர் மெஸ்ட்ரோ மார்கோவின் உபாதையும் சற்று கேள்வியை எழுப்பியுள்ளது. இவரின் பந்து பரிமாற்ற திறமை மற்றும் பந்தினை தாக்கும் விதங்கள் அணிக்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கும்.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள்
சீரி ஏ லீக்கின் Lazio கழகத்துக்காக சீரோ இமோபைல் இந்த பருவகாலத்தின் மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தியிருந்தார். 2019-20 பருவகாலப்பகுதியில் 36 கோல்கலை செலுத்தி, ஐரோப்பியாவின் தங்கக்காலணியை வென்றிருந்தார். அதனையடுத்த பருவகாலத்தில் 20 கோல்களை எடுத்திருந்தார். தேசிய அணிக்காக இவரது பங்கு குறைவாக இருந்தாலும், இம்முறை தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரராக உள்ளார்.
அடுத்ததாக லியானார்டோ பொனுச்சி மற்றுமொரு பிரகாசிக்கக்கூடிய வீரராக உள்ளார். பின் களத்தில் மாத்திரமல்லாமல், முன் களத்திலும் அவருடைய பந்து பரிமாற்றங்கள் ஈர்க்கப்பட்டிருந்தன. இவருடன், சம்பியன்ஷ் லீக்கை வென்றிருந்த செல்ஸி அணியில் விளையாடிய மத்தியக் கள வீரர் ஜோர்கின்ஹோவும் அணியின் எதிர்பார்க்கப்படும் வீரர்களில் ஒருவராக உள்ளார்.
கொரோனா மத்தியிலும் விழாக்கோலம் காணவுள்ள விளையாட்டு உலகம்
அத்துடன் இளம் மத்திய கள இரட்டையர்களான மானுவல் லோகடெல்லி மற்றும் நிக்கோலோ பரேல்லா ஆகியோர் பந்துகளை தக்கவைப்பதிலும், எதிரணியின் பின்கள திட்டங்களை தகர்ப்பதற்கும் முக்கிய வீரர்களாக இருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழாம்
- Goalkeepers: Gianluigi Donnarumma, Alex Meret (Napoli), Salvatore Sirigu (Torino)
- Defenders: Francesco Acerbi (Lazio), Alessandro Bastoni (Inter), Leonardo Bonucci (Juventus), Giorgio Chiellini (Juventus), Giovanni Di Lorenzo (Napoli), Emerson Palmieri (Chelsea), Alessandro Florenzi (Paris), Leonardo Spinazzola (Roma), Rafael Toloi (Atalanta)
- Midfielders: Nicolò Barella (Inter), Bryan Cristante (Roma), Jorginho (Chelsea), Manuel Locatelli (Sassuolo), Lorenzo Pellegrini (Roma), Stefano Sensi (Inter), Marco Verratti (Paris)
- Forwards: Andrea Belotti (Torino), Domenico Berardi (Sassuolo), Federico Bernardeschi (Juventus), Federico Chiesa (Juventus), Ciro Immobile (Lazio), Lorenzo Insigne (Napoli), Giacomo Raspadori (Sassuolo)
>>மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க<<