குசல் பெரேராவோடு இங்கிலாந்து செல்ல இணைகிறார் சமிந்த பண்டார

2925
Kusal-&-Bandara

இலங்கை அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா ஊக்கமருந்து குற்றச் சாட்டுகளில் இருந்து கடந்த மாதம் விடுவிக்கப்பட்டு இருந்தார். இதன் மூலம் அவர் மீண்டும் சர்வதேச கிரிக்கட் அரங்கிற்கு காலடி எடுத்து வைத்தார்.

அதன் பிரதிபலனாக  குசல் பெரேராவை இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இணைப்பது தொடர்பில் சனத் ஜயசூரிய தலைமையிலான இலங்கை கிரிக்கட்  குழு கலந்து ஆலோசித்து அவரை வெகு விரைவில் இங்கிலாந்துத் தொடரில் இணைக்கப் போவதாக கூறியிருந்தார்.

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் தில்ஷானுக்கு பதிலாக யார் அணியில் இணைய வேண்டும்?

இந்த நிலையில் இலங்கை அணிக்குக் கிடைத்த வேகப்பந்து முத்தான , மணித்தியாலத்திற்கு 140 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் பந்து வீசும் திறமை கொண்ட துஸ்மன்த சமீர உபாதைக்குள்ளாகினார். அவரது கீழ் முதுகில் உபாதை ஏற்பட்டு இருந்தது. இதனால் மருத்துவர்கள் இவருக்கு 4 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கி இருந்தார். இதனால் இவருக்குப் பதிலாக எந்த வேகப்பந்து வீச்சாளரை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இணைப்பது என்ற கேள்வி இருந்து வந்தது. அந்த கேள்விக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சமீரவின் இடத்தை நிரப்ப 29 வயதான சமிந்த பண்டார இலங்கை அணியில் இணைவார் என்று கூறப்பட்டு இருந்தது.

சமிந்த பண்டாரவைப் பற்றிக் கூறப் போனால் கேகாலை புனித மேரிஸ் கல்லூரியில் தனது முதற் கட்ட கிரிக்கட் வாழ்வை ஆரம்பித்த சமிந்த பண்டார 5 வருட காலங்களில் 51முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் 141 விக்கட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.  மார்ச் மாதம் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக அவர் விளையாடிய இறுதிப் போட்டியில் 68 ஓட்டங்களுக்கு 9 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார். அத்தோடு நடைபெற்று முடிவடைந்த AIA பிரீமியர் லீக் தொடரில் அதிக விக்கட்டுகளைக் கைப்பற்றிய பந்து வீச்சாளர்களில் முதல் 15 இடங்களில் உள்ள ஓரே ஒரு வேகப்பந்து வீச்சாளர் சமிந்த பண்டாரவே. 2015/16ஆம் ஆண்டுக்கான AIA பிரீமியர் லீக் தொடரில் 9 போட்டிகளில் விளையாடிய அவர்  26.30 என்ற பந்துவீச்சு சராசரியில் 33 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார். புதிய பந்துகளில் சிறப்பாக இரண்டு வகையிலும் பந்தை ஸ்விங் செய்யும் திறமை இவரிடம் உள்ளது என்பது முக்கிய அம்சமாகும்.

டெஸ்ட் கிரிக்கட்டில் குசல் பெரேராவின் பங்களிப்பு

இதனால் துஸ்மந்த சமீரவிற்குப் பதிலாக இலங்கை அணியில் இணைக்க சிறந்த தெரிவு சமிந்த பண்டாரதான் என்ற முடிவு  எட்டப்பட்டு அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இணைவார் என்று கூறப்பட்டு இருந்தது.

இதன்படி இன்று  இலங்கை கிரிக்கட் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி குசல் பெரேரா மற்றும் சமிந்த பண்டார ஆகிய இருவரும் ஒன்றாக இங்கிலாந்து நோக்கிச் சென்று 3ஆவது டெஸ்ட் போட்டியின் போது அணியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அத்தோடு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த எரங்கவின் பந்து வீச்சுப் பாணியில் சந்தேகம் எழுந்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்து இருந்தது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வீசப்பட்ட பந்து வீச்சிலேயே குறித்த சந்தேகம் எழுந்ததையடுத்து குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருந்தது.

இதனால்  இம்மாதம் 6ஆம் திகதி லாப்ரோ நகரில் சமிந்த எரங்க, பந்துவீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் எனவும் பரிசோதனை முடிவுகள் வரும் வரை சமிந்த எரங்கவிற்கு சர்வதேச கிரிக்கட்டில் பந்துவீச முடியும் என்று .சி.சி  கூறியுள்ளதாகவும், அதனால் அவர் தெரிவு செய்யப்பட்டால் 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் எனவும் இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்து உள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்