இந்தியாவின் சிலிகுரி நகரில் இடம்பெற்று வரும் தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் நான்காவது மகளிர் கிண்ண தொடரில் இலங்கை அணி பூட்டான் அணியுடன் இன்று மோதியது. இந்தப் போட்டியில் இரண்டாவது பாதியில் அணித் தலைவி எரந்தி மற்றும் பிரவீனா ஆகியோரால் பெறப்பட்ட கோல்களின் உதவியுடன் இலங்கை மகளிர் அணி இத்தொடரில் முதல் வெற்றியை பெற்றுள்ளது.
ஏற்கனவே இடம்பெற்ற இத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை மகளிர் அணி மாலைத்தீவுகள் அணியிடம் 5-2 என்ற கோல்கள் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. எனவே இன்றைய போட்டி மிகவும் முக்கியமாக இருந்தது.
அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பை அதிகரிப்பதற்கு கட்டாயம் இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நிலையில் களமிறங்கிய இலங்கை மகளிர் அணியினர், முதல் பாதியில் கோல் வாய்ப்புகளுக்காக பல முறை முயற்சித்தனர். எனினும் எதிரணியின் பின்கள வீரர்களின் சிறந்த தடுப்பினால் இலங்கை அணியால் எந்த கோலையும் போட முடியாமல் போனது. எதிரணிக்கும் இதே நிலையே ஏற்பட்டது.
முதல் பாதி: இலங்கை 00 – 00 பூட்டான்
பின்னர் தீர்மானம் மிக்க இரண்டாவது பாதியில் இலங்கை அணியின் தலைவி எரந்தி மூலம் அணி முதல் கோலைப் பெற்றது. 60 நிமிடங்கள் கடந்த நிலையில், எரந்தி எதிரணியின் பின்கள வீராங்கனைகளை சிறந்த முறையில் கடந்து சென்று, கோல் காப்பாளருக்கு மேலால் செல்லும் வகையில் கம்பங்களுக்குள் பந்தை செலுத்தி அந்த கோலைப் பெற்றார்.
அதன் பின்னர் 77ஆவது நிமிடத்தில் இலங்கை அணியின் மற்றொரு முக்கிய வீராங்கனையான பிரவீனா பெரேரா அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றுக்கொடுத்தார்.
அதன் பின்னரும் அரையிறுதி வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கோடு இலங்கை அணி மேலும் கோல்களைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் அவை சிறந்த முடிவுகளை கொடுக்கவில்லை.
முழு நேரம்: இலங்கை 02 – 00 பூட்டான்
இதற்கு முன்னர் 2012ஆம் அண்டு மற்றும் 2014ஆம் ஆண்டில் இடம்பெற்ற தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் மகளிர் கிண்ண தொடர்களில் இலங்கை அணி பூட்டான் அணியை முறையே 4-0 மற்றும் 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.