மாகாண சம்பியனாக மகுடம் சூடிய ஏறாவூர் யங் ஹீரோஸ் அணி

154

இலங்கை கிரிக்கெட் சபையினால், கிழக்கு மாகாண டிவிஷன் – II உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே ஏற்பாடு செய்யப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஏறாவூர் யங் ஸ்டார் விளையாட்டுக் கழக அணி, டைனமிக் விளையாட்டுக் கழகத்தினை 3 விக்கெட்டுக்களால் வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

நேற்று (29) திருகோணமலை ஹிந்துக் கல்லூரி மைதானத்தில் தொடங்கிய இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற திருகோணமலையின் டைனமிக் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தெரிவு செய்து கொண்டது.

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைய துடுப்பாட்டத்தை ஆரம்பித்த டைனமிக் அணிக்கு, சிறந்த ஆரம்பம் அமையவில்லை அதன்படி 29.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த டைனமிக் விளையாட்டுக் கழக அணியின் வீரர்கள் மொத்தமாக வெறும் 90 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தனர்.

டைனமிக் அணியின் துடுப்பாட்டம் சார்பாக அதன் ஆரம்பவீரரான குமுதன் பெற்ற 18 ஓட்டங்களே அவர்களின் தரப்பில் வீரர் ஒருவர் கூடுதலான ஓட்டங்களாக மாறியது.

மறுமுனையில் அட்டகாசமான பந்துவீச்சினை வெளிப்படுத்திய ஏறாவூர் யங் ஸ்டார் அணியின் பந்துவீச்சு சார்பில் றிப்னாஸ் 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, றம்ழான் 3 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 91 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய யங் ஸ்டார் அணி தமது பதில் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது.

யங் ஸ்டார் விளையாட்டுக்கழக அணி வெற்றி இலக்கிற்கான பயணத்தில் தடுமாற்றம் ஒன்றை காட்டிய போதிலும் அவ்வணிக்கு றியாஸ் பலமளித்தார்.

தொடர்ந்து, யங் ஸ்டார் விளையாட்டுக் கழக வீரர்கள் போட்டியின் வெற்றி இலக்கினை 32.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 92 ஓட்டங்களுடன் அடைந்தனர்.

யங் ஸ்டார் அணியின் வெற்றிக்கு உதவிய றியாஸ் 23 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இதேநேரம், டைனமிக் விளையாட்டுக் கழகத்தின் பந்துவீச்சு சார்பில் குமுதன் 3 விக்கெட்டுக்களைச் சாய்த்தும், ராம்கி மற்றும் தனுஜகன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்து போராட்டத்தினை காட்டிய போதும் அது வீணாகியிருந்தது.

போட்டியின் சுருக்கம்

டைனமிக் விளையாட்டுக் கழகம் – 90 (29.4) குமுதன் 18, றிப்னாஸ் 29/4, I. றம்ழான் 01/3

யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் – 92/7 (32.2) றியாஸ் 23, குமுதன் 33/3, ராம்கி 22/2, தனுஜகன் 23/2

முடிவுயங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் 3 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<