சிறந்த பந்துவீச்சினால் வெற்றி பெற்ற ஏறாவூர் யங் ஹீரோஸ்

214

கிழக்கு மாகாண டிவிஷன் – II அணிகள் இடையே நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (16) நிறைவுக்கு வந்த ஏறாவூர் யங் ஹீரோஸ் மற்றும் அம்பாறை ஹிமிதுராவ கழகம் இடையிலான மோதலில் ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் 132 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. 

யங் ஸ்டார் அணியை வீழ்த்திய சிவானந்த விளையாட்டுக் கழகம்

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண டிவிஷன் – II கழகங்கள் இடையே நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட்…

கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த மோதலில், நாணய சுழற்சியில் வென்ற ஏறாவூர் யங் ஹீரோஸ் அணியினர், போட்டியில் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காக பெற்றுக் கொண்டனர்.

இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய யங் ஹீரோஸ் அணியினர் 50 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்களைப் பெற்றனர். 

யங் ஹீரோஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இஸ்மத் 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்களைப் குவித்தார். அதேநேரம், றஹ்மானும் 46 ஓட்டங்கள் பெற்று யங் ஹீரோஸ் அணிக்கு துடுப்பாட்டத்தில் வலுச்சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஹிமிதுராவ அணியின் பந்துவீச்சு சார்பில் டிஸ்ஸாநாயக்க மற்றும் திலகரட்ன ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர். 

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 255 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய அம்பாறையின் ஹிமிதுராவ அணியினர் பதில் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்தனர். 

தொடர்ந்து, துடுப்பாட்டத்தை தொடங்கிய அம்பாறை அணி யங் ஹீரோஸ் வீரர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 38.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து வெறும் 122 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. 

ஹிமிதுராவ அணியின் துடுப்பாட்டத்தில் போராட்டம் காட்டிய திஸ்ஸாநாயக்க 37 ஓட்டங்கள் பெற்றிருந்தார். மறுமுனையில், யங் ஹீரோஸ் அணியின் பந்துவீச்சில் பாஷில் மற்றும் நவ்சாத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தனர். 

இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் யங் ஹீரோஸ் அணியினர், இத்தொடரில் தமது இரண்டாவது வெற்றியினைப் பதிவு செய்து கொள்கின்றமை முக்கிய விடயமாகும்.  

போட்டியின் சுருக்கம்

யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் – 2548 (50) இஸ்மத் 80, றஹ்மான் 46, திலகரட்ன 45/3, திஸ்ஸநாயக்க 59/3

ஹிமிதுரா விளையாட்டுக் கழகம் – 122 (38.3) திஸ்ஸநாயக்க 37, பாஷில் 6/3, நவ்ஷாத் 21/3

முடிவு – ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் 132 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<