இந்தியாவுடனான ஒருநாள் தொடரிலிருந்து இயென் மோர்கன் தீடீர் விலகல்

447
BCCI

இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியின் போது காயமடைந்த இங்கிலாந்து அணித் தலைவர் இயென் மோர்கன் மற்றும் சேம் பில்லிங்ஸ் ஆகிய இருவரும் எஞ்சியுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, தற்போது இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் உள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

>>IPL தொடரிலிருந்தும் நீக்கப்படும் ஸ்ரேயாஷ் ஐயர்?

இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியின் போது காயமடைந்த இயென் மோர்கன், எஞ்சிய இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எனவே, இயன் மோர்கன் விலகியதால் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணியை ஜோஸ் பட்லர் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இயென் மோர்கனுக்குப் பதிலாக மேலதிக வீரர்கள் பட்டியலில் இடம்பெற்ற டாவிட் மலானுக்கு இங்கிலாந்து ஒருநாள் அணியில் வாய்பபு வழங்குவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னதாக இங்கிலாந்து அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான சேம் பில்லிங்ஸும் முதலாவது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>Video – Legends தொடரில் Dilshan & Co படைத்த சாதனைகள்..!|Sports RoundUp – Epi 154

இதன்படி, சேம் பில்லிங்ஸின் இடத்தில் லியெம் லிவிங்ஸ்டன் இர்னடாவது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அறிமுக வீரராக களமிறங்க உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

இதேநேரம், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய இயென் மோர்கன்,

இரண்டாவது போட்டியில் பங்கேற்பதற்காகப் பயிற்சி மேற்கொண்டிருந்தோம். அப்போதுதான் கையில் ஏற்பட்ட காயத்தின் தன்மை பெரிதாகத் தெரிந்தது. பிடியெடுப்பை எடுக்கும் போது காயத்தைப் பற்றி நினைப்பு இருந்துகொண்டே இருந்தது. பெரிய காயம் ஒன்றும் கிடையாது. விரைவில் குணமாகிவிடும் என நம்புகிறேன்.

>>2008க்குப் பிறகு முதல்முறையாக புதிய ஜேர்சியுடன் களமிறங்கும் CSK

அதேபோல, இந்தக் காயத்துடன் எதிர்வரும் போட்டிகளில் பங்கேற்றால் அது இங்கிலாந்து அணிக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கலாம். இதனால், எனக்குப் பதிலாக ஜோஸ் பட்லர் தலைவராகச் செயல்படுவார். அவர்மீது முழு நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்தார்.

இதனிடையே, சாம் பில்லிங்ஸுக்கு மாற்று வீரராகச் சேர்க்கப்பட்டுள்ள லிவிங்ஸ்டன் கருத்து தெரிவிக்கையில்,

இரண்டாவது ஒருநாள் போட்டியில் களமிறங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.  நீண்டகாலமாக இங்கிலாந்து அணியுடன் பயணித்திருக்கிறேன். சேம் பில்லிங்ஸ் காயத்தால் அவதிப்படுவது வருத்தமளிக்கிறது. ஒருமுறையாவது வாய்ப்பு கிடைத்துவிடாதா எனப் பல மாதங்களாகக் காத்திருந்தேன்.

இரண்டாவது போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு நிச்சயம் என்னை நிரூபிப்பேன். இந்திய அணி சமீப காலமாகவே சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. வெற்றிக்காக கடுமையாகப் போராடுவோம் எனக் கூறினார்.

லியெம் லிவிங்ஸ்டன், 2017ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக இரண்டு டி-20 போட்டிகளில் விளையாடியிருந்தார். அண்மையில் நடைபெற்ற
பிக் பாஷ் லீக் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டதால், தற்போது முதல்முறையாக ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஏற்கனவே, முழங்கை உபாதை காரணமாக இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<