இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான இயென் மோர்கன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
36 வயதான இயென் மோர்கன், அயர்லாந்து நாட்டில் பிறந்தவர். 2006இல் அயர்லாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 2009 ஏப்ரல் வரை அயர்லாந்து அணிக்காக விளையாடி வந்த அவர், அதே ஆண்டு மே மாதம் முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாட ஆரம்பித்தார். அன்று முதல் கடந்த ஆண்டு வரையில் இங்கிலாந்து அணிக்காக அவர் விளையாடி இருந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இயென் மோர்கன் அறிவித்தார். இருந்தாலும் தொழில்முறை சார்ந்த கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வந்தார். இந்த சூழலில் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று (13) அவர் அறிவித்துள்ளார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஹஷிம் அம்லா
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
‘அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு எடுத்த முடிவு இது. நான் நேசிக்கும் விளையாட்டிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்ள இதுவே சரியான நேரம். 2005இல் மிடில்செக்ஸ் அணியில் ஆரம்பித்தது முதல் SA20 லீக்கில் பர்ள் ரோயல்ஸ் அணிக்காக விளையாடியது வரை களத்தில் ஒவ்வொரு தருணத்தையும் நான் நேசித்தேன்.
அனைத்து விளையாட்டு வீரர்களைப் போலவும் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் இருந்துள்ளன. அனைத்து நேரங்களிலும் என் குடும்பத்தினரும், நண்பர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர். குறிப்பாக எனக்கு உறுதுணையாக இருந்த எனது மனைவிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை ஒரு வீரராக மாற்றிய சக வீரர்கள், பயிற்சியாளர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. உலக அளவில் உள்ள Franchise கிரிக்கெட் அணிகளுக்காக விளையாடியது மறக்க முடியாத பல நினைவுகளை எனக்கு கொடுத்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அன்புக்குரியவர்களுடன் அதிக நேரத்தை செலவிட முடிந்தது. எதிர்வரும் நாட்களில் அதைத் தொடர்ந்து செய்வேன் என நம்புகிறேன். நான் களத்தில் விளையாடத் தான் விடை கொடுத்துள்ளேன். ஆனால், கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்ந்து நான் பயணிப்பேன். அது வர்ணனையாளராக, கிரிக்கெட் வல்லுனராக இருக்கலாம்’ என மோர்கன் தெரிவித்துள்ளார்.
இயென் மோர்கன் 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 ஓட்டங்களையும், 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7701 ஓட்டங்களையும், 115 T20I போட்டிகளில் விளையாடி 2458 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.
அதுமாத்திரமின்றி, இயென் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்று சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<