இங்கிலாந்து ‘ப்ரீமியர் லீக்’கின் 15வது வாரம் நடந்து முடிந்த நிலையில் தரப்படுத்தலில் செல்ஸி அணி தொடர்ந்து முன்னிலையில் காணப்படுவதுடன் எதிர்பார்க்கப்பட்ட அநேக அணிகள் வெற்றி பெற்றன.
செல்ஸி தொடர்ந்து முன்னிலையில்
வெஸ்ட் ப்ரொம்விச் அல்பியன் அணியுடன் சொந்த மண்ணில் செல்ஸி மோதியது. பின் களத்தடுப்பில் பிரசித்தி பெற்ற வெஸ்ட் ப்ரொம்விச் அல்பியன் அணிக்கெதிராக செல்ஸி வீரர்களால் தமது வழமையான விளையாட்டை விளையாட முடியவில்லை.
செல்ஸி வீரர்களின் கோல் வாய்புகளை வெஸ்ட் ப்ரொம்விச் அல்பியன் அணி நேர்த்தியாக முறியடிக்க போட்டி சமநிலையில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் போட்டியின் 70வது நிமிடத்தில் ‘ப்ரீமியர் லீக்’கில் அதிக கோல்கள் அடித்த டியாகோ கொஸ்டா அபார கோல் ஒன்றினைப் போட்டு செல்ஸி அணியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்தார்.
இதன் மூலம் போட்டி 1-0 என செல்ஸி அணிக்கு சாதகமாக முடிவடைந்தது. டியாகோ கொஸ்டா இப் பருவகாலத்தில் 12 கோல்களைப் போட்டு முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்ஸிக்கு நெருக்கடி கொடுக்கும் ஆர்சனல்
ஸ்டோக் அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியை 3-1 என வெற்றிகொண்டதன் மூலம் ஆர்சனல் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தினை பெற்றுக்கொண்டது. மேலும் ஆர்சனல் அணி செல்ஸியை விட 3 புள்ளிகள் பின்னிலையில் காணப்படுகிறது.
போட்டியின் முதல் கோலினை ஸ்டோக் அணி சார்பாக சார்லி எடம் போட்டு ஆர்சனல் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். எனினும் சுதாரித்து விளையாடிய ஆர்சனல் தியோ வொல்கோட்டின் கோலினால் சமநிலை அடைந்தது.
இரண்டாவது பாதியில் மேலும் சிறப்பாட்டத்தை வெளிக்காட்டிய ஆர்சனல் அணிக்கு ஓஸில் மற்றும் இவோபி ஆகியோர் கோல் அடிக்க ஆர்சனல் அணி 3-1 என்ற வெற்றியை பதிவு செய்தது.
மன்செஸ்டர் சிட்டியை வீழ்த்திய லெய்செஸ்டர்
இங்கிலாந்து பிரீமியர் லீக்கின் தற்போதைய சாம்பியன்ஸ் லெய்செஸ்டர் அணி பலம் பொருந்திய மான்செஸ்டர் சிட்டி அணியை எதிர்த்தாடியது. போட்டியில் சிட்டி அணி சோபிக்கும் என எதிர்பார்த்த போதிலும் 4-2 என அவர்களை வீழ்த்தி லெய்செஸ்டர் அணி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.
குறிப்பாக சென்ற வருடம் அதிக கோல்கள் அடித்த ஜேமி வார்டி ”ஹட்ரிக்” கோல் அடித்து தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
மன்செஸ்டர் சிட்டியின் நட்சத்திர வீரர் செர்ஜியோ அகுவேரோ, சென்ற வாரம் நடந்த செல்ஸியுடனான போட்டியில் சிவப்பு அட்டை வழங்கப்பெற்று வெளியேற நேர்ந்ததால் இப்போட்டியில் விளையாட முடியாமல் போனது. அவருக்கு மேலும் மூன்று போட்டிகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்ற வருடம் உலக கால்பந்து ரசிர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து சாம்பியனான லெய்செஸ்டர் அணி இவ்வருடம் சோபிக்கத் தவறியமையால் புள்ளிப்பட்டியலில் பதினான்காம் இடத்தில் காணப்படுகிறது.
வெற்றியை சுவைத்தது மான்செஸ்டர் யுனைடட்
பிரபல கால்பந்து கழகமான மான்செஸ்டர் யுனைடட் மற்றுமொரு பிரபல கழகமான டொட்டன்ஹம் ஹொட்ஸ்பர் அணியை எதிர்த்தாடியது. கடந்த சில போட்டிகளில் வெற்றியை பதிவு செய்ய முடியாமல் தடுமாறிய மான்செஸ்டர் யுனைடட் அணி கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற தீர்க்கமான போட்டியில் சொந்த மண்ணில் டொட்டன்ஹம் ஹொட்ஸ்பர் அணியை எதிர்த்தாடியது.
போட்டி ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்றது. இரு அணி வீரர்களும் சளைக்காமல் ஆடினர். எனினும் போட்டியின் 29ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடட் அணியின் ஹென்ரிக் மிக்ஹிடார்யன் அடித்த கோல் அணியின் வெற்றி கோலாக மாறியது.
இதன் மூலம் போட்டியை 1-0 என்ற ரீதியில் மான்செஸ்டர் யுனைடட் அணி கைப்பற்றியது
மேலதிக போட்டி விபரங்கள்
சௌத்ஹம்ப்டன் 1 – 0 மிடில்ஸ்பரோ
லிவர்பூல் 2 – 2 வெஸ்ட் ஹம்
வட்போர்ட் 3 – 2 எவர்டன்
பர்ன்லி 3 – 2 போனமவ்த்
ஹல் சிட்டி 3 – 3 கிரிஸ்டல் பெலஸ்
ஸ்வான்சீ 3 – 0 சண்டர்லண்ட்