பங்களாதேஷ் அணிக்கெதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து குழாத்தில் புதுமுக வீரராக இடம்பெற்றிருந்த சகலதுறை வீரர் டொம் எபெல், தசைப் பிடிப்பு உபாதை காரணமாக குறித்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.
தற்போது இலங்கை A அணிக்கெதிராக நடைபெற்று வருகின்ற 2 போட்டிகள் கொண்ட உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகின்ற அவர், கடந்த புதன்கிழமை இலங்கை A அணிக்கு எதிராக கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பந்துவீசும்போது காயமடைந்தார்.
குறிப்பாக, அவர் வீசிய முதல் ஓவரின் 3ஆவது பந்தை வீசிய போது அவரது இடது இடுப்பு பகுதியில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இந்த நிலையில், நேற்று (16) நடத்தப்பட்ட ஸ்கேன் பரிசோதனைகளின் பின்னர் அவரது காயம் குணமடைய இன்னும் சில வாரங்கள் செல்லும் என தெரியவந்துள்ளது, அதன்படி அவர் விரைவில் இங்கிலாந்து புறப்பட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இலங்கை A – இங்கிலாந்து லயன்ஸ் டெஸ்ட் தொடர் சமநிலை
- முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் இலகு வெற்றி
சுற்றுலா இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் ஒருநாள் மற்றும் T20I தொடர் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இவ்விரு தொடர்களிலும் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட இங்கிலாந்து குழாம் கடந்த சில தினங்களுக்கு முன் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டது.
இதில் இலங்கையில் தற்போது நடைபெற்ற வருகின்ற இங்கிலாந்து லயன்ஸ் அணியில் இடம்பிடித்து விளையாடிய 28 வயதான சகலதுறை வீரரான டொம் எபெல், பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட குழாத்தில் முதல்தடவையாக உள்வாங்கப்பட்டிருந்தார்.
எவ்வாறாயினும், இலங்கை A அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியின் போது தசைப் பிடிப்பு உபாதைக்குள்ளாகிய டொம் எபெல் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியுள்ளார்.
இதனிடையே, அவருக்குப் பதிலாக எந்தவொரு மாற்றீடு வீரரும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், பங்களாதேஷ் அணியுடனான T20I தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து குழாத்தில் இடம்பிடித்துள்ள வில் ஜெக்ஸ் பெரும்பாலும் டொம் எபெலுக்குப் பதிலாக ஒருநாள் அணியில் இணைத்துக் கொள்ளப்படலாம் என espn cricinfro இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து ஒருநாள் அணி விபரம்: ஜோஸ் பட்லர் (தலைவர்), ரெஹான் அஹ்மட், மொயின் அலி, ஜொப்ரா ஆர்ச்சர், சாம் கரண், சகிப் மஹ்மூத், டேவிட் மலான், ஆடில் ரஷித், ஜேசன் ரோய், பில் சோல்ட், ரீஸ் டொப்லி, ஜேம்ஸ் வின்ஸ், கிறிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் வுட்.
இங்கிலாந்து T20I அணி விபரம்: சகிப் மஹ்மூத், ஜேசன் ரோய் மற்றும் ஜேம்ஸ் வின்ஸ்க்கு பதிலாக பென் டக்கெட், வில் ஜெக்ஸ் மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<