பட்லரின் உபாதை குறித்து இங்கிலாந்து பயிற்றுவிப்பாளரின் கருத்து

310
AFP

இங்கிலாந்து அணியில் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த விக்கெட் காப்பாளரும், மத்தியவரிசை துடுப்பாட்ட வீரருமான ஜோஸ் பட்லர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது என அவ்வணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ட்ரெவொர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.

ஜேசன் ரோயின் துடுப்பாட்டம் இங்கிலாந்து அணிக்கு பலம் – இயன் மோர்கன்

பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் …….

பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கடந்தவாரம் நடைபெற்ற உலகக் கிண்ணத்தின் 12ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் வேகமாக துடுப்பெடுத்தாடிய ஜோஸ் பட்லர் 44 பந்துகளுக்கு 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

குறித்த போட்டியில் ஜோஸ் பட்லர் துடுப்பெடுத்தாடும் போது, பந்து கடுமையாக தாக்கியதில் அவரது தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் பட்லர் விக்கெட் காப்பாளராக செயற்படவில்லை என்பதுடன், ஜொனி பெயார்ஸ்டோவ் விக்கெட் காப்பாளராக செயற்பட்டார். அதேநேரம், குறித்த போட்டியைத் தெடர்ந்து இங்கிலாந்து அணியினர் ஈடுபட்ட பயிற்சியிலும் அவர் இணைந்திருக்கவில்லை.  

இவ்வாறான நிலையில், பட்லர் முழுமையாக உடற்தகுதி பெறும் பட்சத்தில் அடுத்த போட்டியில் விளையாடுவார் எனவும், இல்லையென்றால் ஜேம்ஸ் வின்ஸ் அல்லது மொயீன் அலி ஆகியோரில் ஒருவர் அவரது இடத்தில் விளையாடுவர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், ஜோஸ் பட்லர் தற்போது குணமடைந்துள்ளதாகவும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவார் எனவும் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ட்ரெவொர் பெய்லிஸ் குறிப்பிட்டுள்ளார். பட்லரின் உபாதை குறித்து மேலும் குறிப்பிட்ட அவர், “பட்லர் தற்போது குணமடைந்துள்ளார். அவரால் முழுமையாக பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் என்பதுடன், அடுத்த போட்டியில் விளையாடுவதற்கான உடற்தகுதியையும் கொண்டுள்ளார். எனினும், அவரால் பாய்ந்து பிடிக்கக்கூடிய பிடியெடுப்புகளை நிகழ்த்த முடியுமா? என்பதை நாம் இன்னும் நிச்சயிக்கவில்லை” என்றார்.

இங்கிலாந்து அணிக்காக மத்தியவரிசையில் வேகமாக ஓட்டங்களை குவிக்கும் முக்கிய வீரராக ஜோஸ் பட்லர் உள்ளார். இதுவரையில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஒரு சதம் மற்றும் ஒரு அரைச்சதம் அடங்கலாக 185 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இதேவேளை, உலகக் கிண்ணத்தில் தாங்கள் விளையாடிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள இங்கிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. இந்தநிலையில், தங்களுடைய நான்காவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை நாளைய தினம் (14) சௌதெம்டனில் எதிர்கொள்ளவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<