ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலங்கை கிரிக்கட் அணி கிரிக்கட்டின் தாயகமான இங்கிலாந்துக்கு சுற்றப் பயணம் செய்துள்ளது. இலங்கை அணி ஆரம்பத்தில் இங்கிலாந்து அணியோடு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்த 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 19ஆம் திகதி ஹெடிங்லி லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் ஜூன் மாதம் 13ஆம் திகதி நிறைவு பெறுகிறது. அதன் பின் இலங்கை அணி அயர்லாந்து அணியோடு 2 ஒருநாள் போட்டிகளில் பங்கெடுக்கவுள்ளது. அதன் பின் மீண்டும் இங்கிலாந்து அணியை சந்தித்து 5 ஒருநாள் போட்டிகளிலும். ஒரு சர்வதேச டி20 போட்டியிலும் விளையாடவுள்ளது.
இலங்கை முதலில் இங்கிலாந்து அணியோடு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதனால் இலங்கை மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றை சற்று உற்று நோக்குவோம்.
1982ஆம் ஆண்டு : இலங்கை எதிர் இங்கிலாந்து – 1ஆவது டெஸ்ட் போட்டி
இலங்கை அணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 1982ஆம் ஆண்டு கொழும்பு சரணவனமுத்து விளையாட்டு மைதானத்தில் சந்தித்தது. இப்போட்டி பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி ஆரம்பித்தது. இந்தப் போட்டியில் இலங்கை அணியை பந்துல்ல வர்ணபுரவும் இங்கிலாந்து அணியை கீத் பிலச்சரும் வழிநடத்தினார்கள்.
இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தமது முதல் இனிங்ஸில் சகல விக்கட்டுகளையும் இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக ரஞ்சன் மடுகல்ல 65 ஓட்டங்களையும், அர்ஜுன ரணதுங்க 54 ஓட்டங்களையும் பெற்றனர். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் டெரெக் அண்டர்வூட் 5 விக்கட்டுகளை வீழ்த்தினார். பதிலுக்கு தமது முதல் இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றது. இங்கிலாந்து அணி சார்பாக டேவிட் கொவர் 89 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணியின் பந்து வீச்சில் அஷந்த டி மெல் 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
இதன் பிறகு 5 ஓட்டங்கள் பின்னிலையில் தமது 2ஆவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 175 ஓட்டங்களுக்கு சுருண்டது. இலங்கை அணி சார்பாக 2ஆவது இனிங்ஸில் ரோய் டயஸ் 77 ஓட்டங்களையும் தலைவர் பந்துல்ல வர்ணபுர 38 ஓட்டங்களையும் பெற்றனர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜோன் எம்புரே 6 விக்கட்டுகளை வீழ்த்தினார். பின் 171 ஓட்டங்கள் என்ற இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 3 விக்கட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை தோற்கடித்தது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் ஜோன் எம்புரே தெரிவுசெய்யப்பட்டார்.
இங்கிலாந்துக்கு எதிராக இலங்கையின் 1வது டெஸ்ட் வெற்றி
இலங்கை அணி இங்கிலாந்தோடு முதலாவது டெஸ்ட் வெற்றியை 1993ஆம் ஆண்டு பெற்றது. எஸ்.எஸ்.சி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்றிருந்தது.
போட்டியின் ஸ்கோர் விபரம்
தலைவர்
இலங்கை – அர்ஜுன ரணதுங்க
இங்கிலாந்து – அலெக் ஸ்டுவர்ட்
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இங்கிலாந்து அணி – 1ஆவது இனிங்ஸில் 380/10
– ரொபின் ஸ்மித் 128
– க்ரெஹெம் ஹிக் 68
– அலெக் ஸ்டுவர்ட் 63
– ஜயனந்த வார்னவீர 90/4
– முத்தையா முரளிதரன் 118/4
இலங்கை அணி – 1ஆவது இனிங்ஸில் 469/10
– ஹஷான் திலகரத்ன 93*
– அரவிந்த டி சில்வா 80
– அர்ஜுன ரணதுங்க 64
– ரொஷான் மஹானாம 64
– க்றிஸ் லிவிஸ் 66/4
இங்கிலாந்து அணி – 2ஆவது இனிங்ஸில் 228/10
– ஜோன் எம்புரே 59
– க்றிஸ் லிவிஸ் 45
– ஜயனந்த வார்னவீர 98/4
– அசன்க குர்சிங்க 07/2
– சனத் ஜயசூரிய 46/2
இலங்கை அணி – 2ஆவது இனிங்ஸில் 142/5 (இலக்கு 140)
– ஹஷான் திலகரத்ன 36*
– அர்ஜுன ரணதுங்க 35
– அசன்க குர்சிங்க 29
– பில் டப்னெல் 34/2
– ஜோன் எம்புரே 48/2
போட்டியின் ஆட்ட நாயகன் – ஹஷான் திலகரத்ன
இலங்கை, இங்கிலாந்து தொடர்களும் பெறுபேறுகளும்
> 2006ஆம் ஆண்டு இங்கிலாந்தில் : 1-1 வெற்றி தோல்வியின்றி முடிவு
> 2007ஆம் ஆண்டு இலங்கையில் : 1-0 இலங்கை தொடரை வென்றது
> 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் : 1-0 இங்கிலாந்து தொடரை வென்றது
> 2012ஆம் ஆண்டு இலங்கையில் : 1-1 வெற்றி தோல்வியின்றி முடிவு
> 2014ஆம் ஆண்டு இங்கிலாந்தில் : 1-0 இலங்கை தொடரை வென்றது
1984ஆம் ஆண்டு தொடக்கம் இங்கிலாந்து மண்ணில் இலங்கை
விளையாடிய போட்டிகள் – 15
இலங்கைக்கு வெற்றி – 3
இங்கிலாந்துக்கு வெற்றி – 6
இலங்கை அணி இங்கிலாந்து மண்ணில் 1998ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியிலும், 2006 நொடிங்ஹம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியிலும் 2014ஆம் ஆண்டு லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியிலும் வெற்றிபெற்றிருந்தது.
டெஸ்ட் வரலாற்றில் இலங்கை, இங்கிலாந்து சந்தித்துள்ள போட்டிகளின் பெறுபேறு
விளையாடிய போட்டிகள் – 28
இலங்கைக்கு வெற்றி – 8
இங்கிலாந்துக்கு வெற்றி – 10
வெற்றி தோல்வியின்றி முடிவு – 10
இம்முறை போட்டி நடைபெறும் இங்கிலாந்து மைதானங்களில் இரு அணிகளினதும் பெறுபேறுகள்
ஹெடிங்லி லீட்ஸ் மைதானம்
இந்த மைதானத்தில் இலங்கை அணி இங்கிலாந்து அணியோடு ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணி 100 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.
ஹெடிங்லி லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தின் சாதனை
விளையாடிய போட்டிகள் – 73
வெற்றிபெற்ற போட்டிகள் – 31
தோல்வியுற்ற போட்டிகள் – 24
வெற்றி தோல்வியின்றி முடிவு – 18
ரிவர்சைட் செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானம்
இந்த மைதானத்தில் இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை.
ரிவர்சைட் செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் இங்கிலாந்தின் சாதனை
விளையாடிய போட்டிகள் – 05
வெற்றிபெற்ற போட்டிகள் – 05
தோல்வியுற்ற போட்டிகள் – 00
லண்டன் லோர்ட்ஸ் மைதானம்
கிரிக்கட்டின் தாயகம் என்று வர்ணிக்கப்படும் லோர்ட்ஸ் மைதானம் ஒரு இடத்தில் அதிக போட்டிகளை நடாத்திய பெருமைக்குரிய மைதானமாகும். இங்கு 131 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதனால் இந்த மைதானத்தில் விளையாடுவது என்பது ஒவ்வொரு கிரிக்கட் வீரரினதும் ஒரு கனவாகும். அத்தோடு இந்த மைதானத்தில் சதம் பெறுவது என்பது ஒவ்வொரு வீரரினது ஒரு விஷேட மைல்கல்லாகும். அந்த அடிப்படையில் இலங்கை அணியைச் சேர்ந்த 8 வீரர்கள் லோர்ட்ஸ் மைதாத்தில் சதம் பெற்றுள்ளார்கள்.
அந்த வீரர்கள் வருமாறு :
சிதத் வெத்தமுனி, துலீப் மென்டிஸ், அமல் சில்வா,மார்வன் அத்தபத்து, மஹேல ஜயவர்தன, டி.எம் டில்ஷான், குமார் சங்கக்கார மற்றும் எஞ்சலொ மெதிவ்ஸ்.
இவர்களில் மஹேல ஜயவர்தன மட்டும் இந்த மைதானத்தில் 2 முறை சதம் பெற்றுள்ளார்.
லோர்ட்ஸ் மைதானத்தில் இலங்கை அணி இங்கிலாந்து அணியோடு 7 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 2 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. அத்தோடு இலங்கை அணி இந்த மைதானத்தில் விளையாடிய போட்டிகளில் இன்னும் முதல் வெற்றியை பதிவு செய்தது கிடையாது.
லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தின் சாதனை
விளையாடிய போட்டிகள் – 129
வெற்றி பெற்ற போட்டிகள் – 51
தோல்வியுற்ற போட்டிகள் – 30
வெற்றி தோல்வியின்றி முடிவு – 48
துடுப்பாட்ட சாதனைகள்
•அதிக ஓட்டங்கள் – மஹேல ஜயவர்தன 2212 ஓட்டங்கள் 41 இனிங்ஸில் (சராசரி – 58.21)
•இங்கிலாந்திற்காக அதிக ஓட்டங்கள்- அலெஸ்டயர் குக் 1078 ஓட்டங்கள் 23 இனிங்ஸில் (சராசரி – 51.33)
•இங்கிலாந்தில் அதிக ஓட்டங்கள் – குமார் சங்கக்கார 862 ஓட்டங்கள் 22 இனிங்ஸில் (சராசரி – 41.04)
•தனி ஒருவரால் பெறப்பட்ட அதிக ஓட்டம் – மஹேல ஜயவர்தன 213* மற்றும் சனத் ஜயசூரிய 213
பந்துவீச்சு சாதனைகள்
•அதிக விக்கட்டுகள் – முத்தையா முரளிதரன் 112 விக்கட்டுகள் 30 இனிங்ஸில்
•இங்கிலாந்திற்காக அதிக விக்கட்டுகள் – மெதிவ் ஹோகார்ட் 37 விக்கட்டுகள் 17 இனிங்ஸில்
•இங்கிலாந்தில் அதிக விக்கட்டுகள் – முத்தையா முரளிதரன் 48 விக்கட்டுகள் 10 இனிங்ஸில்