இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 340 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டிய தென்னாபிரிக்க அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டுவந்தது.
நொட்டிங்ஹாம் டிரன்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணிக்கு சவாலான 474 என்ற ஓட்ட வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை துரத்தும் நோக்கில் ஆட்டத்தின் நான்காவது நாளான திங்கட்கிழமை இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி வெறும் 133 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இங்கிலாந்து இந்த இலக்கை எட்டியிருக்கும் பட்சத்தில் அது அதிக ஓட்ட வெற்றி இலக்கை துரத்திய உலக சாதனையாக இருந்திருக்கும். எனினும் தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து துடுப்பாட்ட வரிசையை முற்றாக சிதறிடித்தனர்.
இங்கிலாந்து சார்பில் ஆரம்ப வீரர் அலஸ்டயர் குக் பெற்ற 42 ஓட்டங்களே அந்த அணியின் அதிகபட்சமாகும். ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் ஒருவரும் 30 ஓட்டங்களைக் கூட எட்டவில்லை.
தென்னாபிரிக்க அணி சார்பில் வெர்னன் பிளன்டர் மற்றும் கேஷவ் மஹராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கிறிஸ் மொரிஸ் மற்றும் டுவன்னே ஒலிவியர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
தொடர்ந்தும் அவதிப்படும் முரளி விஜய் இலங்கையுடனான டெஸ்டில் இருந்து நீக்கம்
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய தென்னாபிரிக்க அணி 335 ஓட்டங்களை குவித்ததோடு இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 205 ஓட்டங்களையே பெற்றது.
இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 130 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற தென்னாபிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக துடுப்பெடுத்தாடி 343 ஓட்டங்களை பெற்று இங்கிலாந்துக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது.
தென்னாபிரிக்க அணி 1998 ஆம் ஆண்டுக்கு பின்னர் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடர் ஒன்றில் தோற்றதில்லை என்றபோதும், அந்த அணி டிரென்ட் பிரிட்ஜில் டெஸ்ட் போட்டி ஒன்றில் வென்றது 52 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
அதேபோன்று இங்கிலாந்து டெஸ்ட் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜோ ரூட்டுக்கு இது முதல் டெஸ்ட் தோல்வியாகும்.
இரண்டு இன்னிங்ஸ்களிலும் இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வரிசையை சாய்த்த பிலன்டர் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
தொடர் சமநிலையாகி இருக்கும் நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் வரும் ஜுலை 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.