பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரின் கடைசி மற்றும் ஒரு போட்டியைக் கொண்ட டி20 கிரிக்கட் போட்டி நேற்று மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இடம்பெற்றது.
ஏற்கனவே ஆர்மபத்தில் இடம்பெற்ற 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 2 அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்று சமநிலையில் முடிக்க 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 4 – 1 என்ற ரீதியில் வெற்றி கொண்டது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானம் செய்தது. இதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுகளை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பாக அலெக்ஸ் ஹேல்ஸ் 37 ஓட்டங்களையும், ஜேசன் ரோய் 21 ஓட்டங்களையும், ஜொஸ் பட்லர் 16 ஓட்டங்களையும், பெற்றனர். பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் வஹாப் ரியாஸ் 3 விக்கட்டுகளையும், இமாத் வசீம் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்கள்.
பின்னர் 136 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி சர்ஜீல் கான் மற்றும் காலித் லத்தீபின் அபார ஆட்டத்தால் 14.5 ஓவர்களில் 1 விக்கட்டை மாத்திரம் இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று 31 பந்துகள் மீதமிருக்க 9 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பாக சர்ஜீல் கான் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 59 ஓட்டங்களையும் காலித் லத்தீப் ஆட்டம் இழக்காமல் 42 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 59 ஓட்டங்களையும் பாபர் அசாம் ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களையும் பெற்று இருந்தனர். இங்கிலாந்து அணி சார்பாக வீழ்த்தப்பட்ட ஒரு வீக்கட்டை ஆதில் ரஷீத் கைப்பற்றி இருந்தார். போட்டியின் ஆட்ட நாயகனாக வஹாப் ரியாஸ் தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் சுமார் 60 நாட்களாக நடைபெற்ற இந்தத் தொடரை வெற்றியோடு முடித்துக் கொண்டது பாகிஸ்தான்.
போட்டியின் சுருக்கம்
இங்கிலாந்து – 135/7 (20)
அலெக்ஸ் ஹேல்ஸ் 37, ஜேசன் ரோய் 21, ஜொஸ் பட்லர் 16
வஹாப் ரியாஸ் 18/3, இமாத் வசீம் 17/2, ஹசன் அலி 24/2
பாகிஸ்தான் – 139/1 (14.5)
சர்ஜீல் கான் 59, காலித் லத்தீப் 59*, பாபர் அசாம் 15*
ஆதில் ரஷீத் 29/1
பாகிஸ்தான் அணி 9 விக்கட்டுகளால் வெற்றி