சௌத்தம்ப்டன் நகரில் நடைபெற்ற சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவுற்றது.
இதேவேளை ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதுகின்ற இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியும் முன்னதாக சமநிலை அடைந்திருந்த நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியுள்ளது.
ஐ.சி.சி. இன் வாழ்நாள் சாதனையாளர்கள் பட்டியலில் கல்லிஸ்
ஐந்து நாட்களுமே ஆட்டத்தில் மழையின் குறுக்கீடு காணப்பட்ட இந்த செளத்தம்ப்டன் டெஸ்ட் போட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை (21) நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவரான ஜோ ரூட், தனது தரப்பிற்காக துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.
தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைவாக துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 583 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் வலுவாக காணப்பட்ட நிலையில் தமது முதல் இன்னிங்சை நிறுத்தியது.
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் தனது சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸை வெளிப்படுத்திய ஸக் கிராவ்லி 34 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 267 ஓட்டங்களைக் குவித்தார். மறுமுனையில் டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய இரண்டாவது சதத்தினை பதிவு செய்த விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான ஜோஸ் பட்லரும் தனது சிறந்த டெஸ்ட் இன்னிங்சாக 152 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் பவாட் அலாம், சஹீன் அப்ரிடி மற்றும் யசீர் ஷாஹ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.
இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 273 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.
ஐ.பி.எல் தொடருக்கான புதிய இலச்சினை வெளியீடு
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் அதன் தலைவர் அஸார் அலி தனது 17ஆவது டெஸ்ட் சதத்துடன் 141 ஓட்டங்கள் பெற்றிருக்க, அரைச்சதம் தாண்டிய மொஹமட் றிஸ்வான் 53 ஓட்டங்களை குவித்திருந்தார்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் ஜேம்ஸ் அன்டர்சன் 56 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி சிறப்பாகச் செயற்பட, ஸ்டுவார்ட் புரோட் 2 விக்கெட்டுக்களைச் கைப்பற்றினார்.
தொடர்ந்து பாகிஸ்தான் அணி தமது முதல் இன்னிங்ஸில் பெற்ற ஓட்டங்கள் போதாது என்பதால் பலோவ் ஒன் (follow on) முறையில் இங்கிலாந்தை விட 310 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது.
பின்னர், பாகிஸ்தான் பாகிஸ்தான் அணி 187 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட போது போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வர போட்டியும் சமநிலை அடைந்தது.
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த பாபர் அஸாம் 63 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதேவேளை, அபிட் அலி 42 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் இம்முறை ஜேம்ஸ் அன்டர்சன் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்ததோடு, குறித்த விக்கெட்டுக்கள் மூலம் டெஸ்ட் வரலாற்றில் மொத்தமாக 600 விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதல் வேகப்பந்துவீச்சாளராகவும் சாதனை படைத்திருந்தார்.
2020 ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகும் லசித் மாலிங்க
இப்போட்டி சமநிலை அடைந்ததை அடுத்து பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக தலா 13 புள்ளிகள் வீதம் பெற்றுக்கொள்கின்றன.
இதேநேரம், இந்த டெஸ்ட் தொடரில் எந்த வெற்றியையும் பதிவு செய்யாத பாகிஸ்தான் அணி, கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றி பெறாத அணி என்ற மோசமான சாதனையை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்கின்றது.
போட்டியின் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியின் ஸக் கிராவ்லி மாற, தொடர் நாயகன் விருது ஜோஸ் பட்லருக்கு வழங்கப்பட்டது.
போட்டியின் சுருக்கம்
இங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 583/8d (154.4) – ஸக் கிராவ்லி 267, ஜோஸ் பட்லர் 152, பவாட் அலாம் 46/2
பாகிஸ்தான் (முதல் இன்னிங்ஸ்) – 273 (93) – அஸார் அலி 141, மொஹமட் றிஸ்வான் 53, ஜேம்ஸ் அன்டர்சன் 56/5, ஸ்டுவார்ட் புரோட் 40/2
பாகிஸ்தான் (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 187/4 (83.1) – பாபர் அஸாம் 63*, அபிட் அலி 42, ஜேம்ஸ் அன்டர்சன் 45/2
முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<