சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான T20 தொடரின் இரண்டாவது போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (28) மன்செஸ்டர் நகரில் நடைபெற்ற பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் இடையிலான T20 தொடரின் முதல் போட்டி மழையினால் கைவிடப்பட இரண்டாவது போட்டி முதல் போட்டி இடம்பெற்ற அதே மன்செஸ்டர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) ஆரம்பமாகியது.
மழை காரணமாக கைவிடப்பட்ட பாகிஸ்தான் – இங்கிலாந்து முதல் T20
தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஒயின் மோர்கன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பாகிஸ்தான் அணிக்கு வழங்கினார்.
இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணிக்கு அதன் தலைவர் பாபர் அஸாம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வந்து அரைச்சதம் ஒன்றினைப் பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து முன்வரிசையில் துடுப்பாடிய மொஹமட் ஹபீஸ் அதிரடியான அரைச்சதம் ஒன்றினைப் பெற்றார். இதனால் 20 ஓவர்கள் நிறைவுக்கு பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது.
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் T20 சர்வதேசப் போட்டிகளில் தன்னுடைய 15ஆவது அரைச்சதத்தினைப் பூர்த்தி செய்த பாபர் அஸாம் 44 பந்துகளுக்கு 7 பௌண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களைப் பெற்றார். இதேநேரம், மொஹமட் ஹபீஸ் 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக வெறும் 36 பந்துகளுக்கு 69 ஓட்டங்களை எடுத்தார். மொஹமட் ஹபீஸ் இப்போட்டி மூலம் T20 சர்வதேசப் போட்டிகளில் 2,000 ஓட்டங்கள் என்கிற மைல்கல்லினை எட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் மணிக்கட்டு சுழல்வீரரான ஆதில் ரஷீட் 2 விக்கெட்டுக்களைச் சாய்க்க கிறிஸ் ஜோர்டன் மற்றும் டோம் கர்ரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 196 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணிக்கு அதன் தலைவர் ஒயின் மோர்கன், ஜொன்னி பெயர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மலான் ஆகியோர் தமது அசத்தலான துடுப்பாட்டம் மூலம் உதவினர்.
இந்த வீரர்களின் துடுப்பாட்ட உதவியோடு இங்கிலாந்து அணி போட்டியின் வெற்றி இலக்கினை 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 199 ஓட்டங்களுடன் அடைந்தது.
சென்னை சுபர் கிங்ஸ் அணியில் 10 பேருக்கு கொரோனா
இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவிய ஒயின் மோர்கன் அவரின் 14ஆவது T20 அரைச்சதத்தோடு வெறும் 33 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதேநேரம், இங்கிலாந்து அணிக்கு மற்றுமொரு அரைச்சதம் பெற்று உதவிய டேவிட் மலான் 36 பந்துகளுக்கு 54 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். இதேவேளை, ஜொன்னி பெயர்ஸ்டோவ் 24 பந்துகளுக்கு 44 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் சதாப் கான் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியும், ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்திய போதும் அவர்களின் பந்துவீச்சு வீணானது.
போட்டியின் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியின் தலைவர் ஒயின் மோர்கன் தனது சிறந்த துடுப்பாட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டார்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் 1-0 என முன்னிலை அடைந்திருக்க, T20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இரண்டாம் போட்டி நடைபெற்ற இதே மன்செஸ்டர் மைதானத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (01) நடைபெறவுள்ளது.
தனிப்பட்ட காரணத்தால் ஐ.பி.எல். தொடரிலிருந்து ரெய்னா விலகல்
போட்டியின் சுருக்கம்
பாகிஸ்தான் – 195/4 (20) – பாபர் அஸாம் 56, மொஹமட் ஹபீஸ் 69, ஆதில் ரஷீட் 2/32
இங்கிலாந்து – 199/5 (19.1) – ஒயின் மோர்கன் 66, டேவிட் மலான் 54*, ஜொன்னி பெயர்ஸ்டோவ் 44, சதாப் கான் 3/34, ஹரிஸ் ரவூப் 2/34
முடிவு – இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<