இங்கிலாந்துக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகின்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணியும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த 30 ஆம் திகதி இங்கிலாந்தின் சௌதம்டன் (Southampton) நகரில் ஆரம்பமானது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 60 ஓட்டங்களால் வெற்றி பெற்று ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் தொடரை 3-1 என கைப்பற்றியிருக்கிறது இங்கிலாந்து அணி.
தொடரை கைப்பற்றும் நோக்கில் இங்கிலாந்து அணியும் தொடரை சமன் செய்யும் எதிர்பார்ப்பில் இந்திய அணியும் இந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது. எதிர்பார்பபுக்கள் மிகுந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. மேலும் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மொயின் அலி இணைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் நிறுவன தேர்தலை நடத்துவது குறித்து அமைச்சர் பைசரினால் விசேட அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை நடத்துவதற்கான கால எல்லையை அடுத்த வருடம் பெப்ரவரி 9ஆம் திகதிவரை நீடிப்பதற்கு சர்வதேச…
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் முன்வரிசை வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். அவ்வணி 86 ஓட்டங்களுக்கு முதல் ஆறு விக்கெட்டுகளையும் இழந்து இக்கட்டான நிலையில் இருந்த போது மொயின் அலி மற்றும் சாம் கரன் ஆகியோரின் இணைப்பாட்டம் அவ்வணிக்கு கைகொடுத்தது. இருவரும் இணைந்து ஏழாவது விக்கெட்டுக்காக 81 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் ஒன்பதாவது விக்கெட்டுக்காக சாம் கரன் மற்றும் ஸ்டுவர்ட் புரோட் ஜோடி 63 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 246 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் சாம் கரன் 78 ஓட்டங்களை பெற்றிருந்தார். இது அவர் டெஸ்ட் போட்டிகளில் பெற்றுக்கொண்ட அதிக பட்ச ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியது. மேலும் மொயின் அலி 40 ஓட்டங்களையும் பெற்றிருந்தார். இந்திய அணி சார்பாக பந்து வீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா மூன்று விக்கெட்டுக்களையும் இஷான்ட் சர்மா, அஷ்வின் மற்றும் மொஹமட் சமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர். இப்போட்டியில் இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட்டின் விக்கெட்டை கைப்பற்றிய இஷான்ட் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தனது 250 ஆவது விக்கெட்டை பதிவு செய்தார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியாவின் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் என வரலாற்றில் இடம் பிடித்தார். தமது முதலாவது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நிறைவில் விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்களை பெற்றிருந்தது.
தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளும் 50 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. எனினும் மூன்றாவது விக்கெட்டுக்காக புஜாரா மற்றும் கோஹ்லி இருவரும் இணைந்து 92 ஓட்டங்களை பெற்றிருந்த போது கோஹ்லி 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க புஜாரா கடைசிவரை ஆட்டமிழக்காமல் 132 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இறுதியில் இந்திய அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 273 ஓட்டங்களை பெற்று இங்கிலாந்து அணியை விட 27 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது. இங்கிலாந்து அணி சார்பாக பந்து வீச்சில் மொயின் அலி 5 விக்கெட்டுகளையும் ஸ்டுவர்ட் புரோட் 3 விக்கெட்டுகளையும் வீழ்ததியிருந்தனர். 27 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 6 ஓட்டங்கள் பெற்றிருந்த போது இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 260 ஓட்டங்களை பெற்று 233 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து நேற்று (2) போட்டியின் நான்காவது நாளிலும் தமது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி மேலதிகமாக 11 ஓட்டங்களை பெற்று 271 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணிக்கு 245 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இங்கிலாந்து அணி சார்பாக இரண்டாவது இன்னிங்ஸில் ஜோஸ் பட்லர் 69 ஓட்டங்களையும் ஜோ ரூட் மற்றும் சாம் கரன் ஆகியோர் முறையே 48 மற்றும் 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் மொஹமட் சமி 4 விக்கெட்டுகளையும் இஷான்ட் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்ததியிருந்தனர்.
உபுல் தரங்கவின் அதிரடி சதத்தால் சம்பியன் கிண்ணத்தை வென்றது கொழும்பு
இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாட்டில் நடைபெற்ற SLCT-20 லீக்கின் இறுதிப் போட்டியில் உபுல் தரங்கவின் அதிரடி சதத்தின் உதவியுடன் கொழும்பு…
245 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளும் 22 ஓட்டங்களுக்கு வீழ்ததப்பட்டது. எனினும் அணித்தலைவர் கோஹ்லி மற்றும் ரஹானே ஆகியோரின் இணைப்பாட்டம் இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தது. இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்காக 101 ஓட்டங்கள் பெற்றிருந்த போது கோஹ்லி 58 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இறுதியில் இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 184 ஓட்டங்களை மட்டுமே பெற்று 60 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. இங்கிலாந்து சார்பாக பந்துவீச்சில் மொயின் அலி நான்கு விக்கெட்டுகளையும் அன்டர்சன் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
துடுப்பாட்டத்தில் 49 ஓட்டங்களையும் பந்துவீச்சில் 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் மொயின் அலி போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். இரு அணிகளுக்குமிடையிலான ஐந்தாவதும் இறுதியுமன டெஸ்ட் போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 246 – கரன் 78, அலி 40, பும்ரா 46/3, ஷர்மா 26/2
இந்தியா (முதல் இன்னிங்ஸ்) – 273 – புஜாரா 132*, கோஹ்லி 46, அலி 63/5, புரோட் 63/3
இங்கிலாந்து (இரண்டாவது இன்னிங்ஸ்) – 271 – பட்லர் 69, ரூட் 48, கரன் 46, சமி 57/4, ஷர்மா 36/2
இந்தியா (இரண்டாவது இன்னிங்ஸ்) – 184 – கோஹ்லி 58, ரஹானே 51, அலி 71/4, அன்டர்சன் 33/2, ஸ்டோக்ஸ் 34/2
போட்டி முடிவு – இங்கிலாந்து அணி 60 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<