சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான T20i கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
மேலும், இந்த வெற்றியுடன் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரினை 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது.
விறுவிறுப்பான போட்டியில் இங்கிலாந்து வெற்றி
இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20 தொடரின் இரண்டாவது போட்டி, செளத்தம்ப்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை (5) ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஆரோன் பின்ச் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது அணிக்காக தேர்வு செய்து கொண்டார்.
இதனை அடுத்து இந்த T20 தொடரின் முதல் போட்டியில் தோல்வியினை தழுவிய அவுஸ்திரேலிய அணி, தொடரினை தக்கவைக்கும் நோக்கோடு தமது துடுப்பாட்டத்தினை தொடங்கியது.
தொடர்ந்து அவுஸ்திரேலிய அணிக்கு முன்வரிசை வீரர்களாக வந்த டேவிட் வோனர் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோர் சிறந்த ஆரம்பம் தராவிட்டாலும், அணித்தலைவரான ஆரோன் பின்ச் சமார்த்தியமான துடுப்பாட்டத்துடன் ஓட்டங்கள் சேர்த்தார். இதனால், அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களைக் குவித்தது.
அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் சார்பில் சிறப்பாக செயற்பட்ட ஆரோன் பின்ச் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 40 ஓடடங்கள் குவிக்க, மார்கஸ் ஸ்டொய்னிஸ் 26 பந்துகளுக்கு 35 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் கிறிஸ் ஜோர்டான் தனது வேகத்தின் மூலம் 2 விக்கெட்டுக்களைச் சாய்க்க ஆதில் ரஷீட், மார்க் வூட் மற்றும் ஜொப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டியிருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக 158 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லர் தனது அதிரடி அரைச்சதத்துடன் உதவினார். இதனால், இங்கிலாந்து அணி போட்டியின் வெற்றி இலக்கினை 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 158 ஓட்டங்களுடன் அடைந்தது.
இங்கிலாந்து அணியின் வெற்றி இலக்கிற்கு உதவிய ஜோஸ் பட்லர், தன்னுடைய 9ஆவது T20 அரைச்சதத்துடன் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பெளண்டரிகள் அடங்கலாக 77 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேநேரம், டாவிட் மலானும் 42 ஓட்டங்கள் பெற்ற் தனது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.
அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பாக அஷ்டன் ஏகார் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் தெரிவாகினார்.
ஆஸியை வீழ்த்திய இங்கிலாந்து அணிக்கு அபராதம்
அடுத்ததாக இரு அணிகளும் மோதும் T20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி செவ்வாய்க்கிழமை (8) இரண்டாம் T20 போட்டி நடைபெற்ற அதே செளத்தம்ப்படன் மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றது.
போட்டியின் சுருக்கம்
அவுஸ்திரேலியா – 157/7 (20) ஆரோன் பின்ச் 40, மார்கஸ் ஸ்டொய்னிஸ் 35, கிறிஸ் ஜோர்டன் 40/2
இங்கிலாந்து – 158/4 (18.5) ஜோஸ் பட்லர் 77*, டாவிட் மலான் 42, அஷ்டன் ஏகார் 27/2
முடிவு – இங்கிலாந்து கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<