விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்திருக்கும் சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான T20 தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் T20 தொடர்களை நிறைவு செய்திருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, தமது நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட T20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடவுள்ளது.
கிரிக்கெட் மோதலுக்காக கொழும்பு வரும் யாழ் மாஸ்டர்ஸ் அணி
அந்தவகையில் இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் மோதும் T20 தொடர் முதல் கட்டமாக ஆரம்பாகியுள்ள நிலையில், குறித்த T20 தொடரின் முதல் போட்டி வெள்ளிக்கிழமை (4) செளத்தம்ப்டன் நகரில் ஆரம்பமாகியது.
தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ச் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இங்கிலாந்து வீரர்களுக்கு வழங்கினார்.
அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயம் செய்யப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைக் குவித்தது.
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் தன்னுடைய 7 ஆவது T20 அரைச்சதத்தினை பூர்த்தி செய்த டேவிட் மலான் 43 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்கள் பெற்றார். இதேநேரம், ஜோஸ் பட்லர் 29 பந்துகளுக்கு 44 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பாக கிளேன் மெக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன் மற்றும் அஸ்டன் ஏகார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.
தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 163 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி, போராட்டம் ஒன்றை காண்பித்த போதும் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. இதனால், அவுஸ்திரேலிய அணியின் வெற்றி வெறும் 2 ஓட்டங்களால் நழுவிப் போனது.
அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் சார்பில், டேவிட் வோனர் தன்னுடைய 18 ஆவது T20 அரைச்சதத்துடன் 4 பௌண்டரிகள் அடங்கலாக 47 பந்துகளுக்கு 58 ஓட்டங்கள் பெற்றார். இதேநேரம், அணித்தலைவர் ஆரோன் பின்ச் 46 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
பங்களாதேஷ் அணிக்கு பயிற்சியளிக்கத் தயார் – ஹத்துருசிங்க
மறுமுனையில், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் ஜொப்ரா ஆர்ச்சர் மற்றும் ஆதில் ரஷீட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பின் வெற்றியை உறுதி செய்தனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியின் டேவிட் மலான் தெரிவாகியிருந்தார். இதேநேரம், இங்கிலாந்து அணி இப்போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுக்கொள்கின்றது.
அடுத்ததாக இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது T20 போட்டி எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (6) முதல் போட்டி இடம்பெற்ற அதே செளத்தம்ப்படன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இங்கிலாந்து – 162/8 (20) – டேவிட் மலான் 66, ஜோஸ் பட்லர் 44, கேன் ரிச்சர்ட்சன் 13/2, கிளேன் மெக்ஸ்வெல் 14/2, அஸ்டன் ஏகார் 32/2
அவுஸ்திரேலியா – 160/6 (20) – டேவிட் வோனர் 58, ஆரோன் பின்ச் 46, மார்க் ஸ்டொய்னிஸ் 23*, ஆதில் ரஷீட் 29/2, ஜொப்ரா ஆர்ச்சர் 33/2
முடிவு – இங்கிலாந்து அணி 2 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<