ஜோ ரூட்டின் அபார துடுப்பாட்டத்தினால் பங்களாதேஷை வீழ்த்திய இங்கிலாந்து

444

ஜோ ரூட் மற்றும் அணித் தலைவர் இயன் மோர்கனின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான முதலாவது போட்டியில், 16 பந்துகள் எஞ்சிய நிலையில் எட்டு விக்கெட்டுகளால் பங்களாதேஷ் அணியை இலகுவாக வெற்றியீட்டி தொடரில் தமது முதல் வெற்றியை இங்கிலாந்து அணி பதிவு செய்து கொண்டது.

லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பித்த 2017ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணத்தின் முதலாவது போட்டி இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் முதலில் பந்து வீச்சைத் தெரிவு செய்தார்.

அதனை தொடர்ந்து பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய தமீம் இக்பால் மற்றும் சௌம்யா சர்க்கார் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 56 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று சிறந்த ஒரு ஆரம்பத்தை பங்களாதேஷ் அணி சார்பாக பெற்றுக்கொடுத்தனர்.

சௌம்யா சர்க்கார் 28 ஓட்டங்களை பெற்றிருந்த போது, சகலதுறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸின் அதிரடி பந்து வீச்சில் ஜொனி பெயார்ஸ்டோவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அதனையடுத்து களமிறங்கிய இம்ருல் கைஸ் சற்று நேரம் தாக்குப் பிடித்தாலும் 19 ஓட்டங்களுடன் லியாம் பிளங்கெட்டின் பந்து வீச்சில் மார்க் வூட்டிடம் பிடி கொடுத்து வெளியேறினார்.

அவரை தொடர்ந்து தமீம் இக்பாலுடன் இணைந்து கொண்ட முஷ்பிகுர் ரஹிம் 166 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பதிவு செய்ததோடு, இந்த இணைப்பாட்டமானது பங்களாதேஷ் அணி வெளிநாட்டு மண்ணில் மூன்றாம் விக்கெட்டுக்காக பெற்றுக்கொண்ட அதிகூடிய இணைப்பாட்டமாகப் பதிவானது.

[rev_slider ct17-dsccricket]

அதிரடியாக துடுப்பாடிய முஷ்பிகுர் ரஹிம் 72 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 79 ஓட்டங்களை விளாசிய நிலையில், துரதிஷ்டவசமாக லியாம் பிளன்கெட்டின் பந்து வீச்சில் அலெக்ஸ் ஹேல்சிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அதேநேரம் நிதானமாக துடுப்பாடிய தமீம் இக்பால் 142 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 128 ஓட்டங்களை பதிவு செய்த அதேவேளை இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது இரண்டாவது சதத்தினை பதிவு செய்தார்.   

இறுதி ஓவர்களில் சபீர் ரஹ்மான் வேகமாக ஓட்டங்களைக் குவிக்க முயன்ற போதிலும் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து பங்களாதேஷ் அணியின் விக்கெட்டுகளை தொடர்ச்சியாக வீழ்த்தி பங்களாதேஷ் அணியை 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 305 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியது.

இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக பங்களாதேஷ் அணியால் கடைசி 5.2 ஓவர்களில் 44 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக லியாம் பிளங்கெட் 59 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் ஜேக் போல் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து, கடின வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட்டை வெறும் 6 ஓட்டங்களுக்கு வீழ்த்திய பங்களாதேஷ் அணி, இங்கிலாந்தை சற்று நிலைகுலையச் செய்தது.

எனினும், அதனை தொடர்ந்து மற்ற ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்சுடன் இணைந்து கொண்ட ஜோ ரூட் இரண்டாம் விக்கெட்டுக்காக 159 ஓட்டங்களை குவித்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். அலெக்ஸ் ஹேல்ஸ் 86 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 95 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை சபீர் ரஹ்மானின் பந்து வீச்சில் சன்சமுள் இஸ்லாமிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன், ஜோ ரூட்டுடன் இணைந்து 143 ஓட்டங்களை வீழ்த்தப்படாத இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டதோடு அணியை வெற்றிப் பாதைக்கு வழி நடத்தினார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 47.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 308 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்டுகளால் பங்களாதேஷ் அணியை வெற்றிகொண்டது.

இங்கிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஜோ ரூட் 129 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 133 ஓட்டங்களையும், அலெக்ஸ் ஹேல்ஸ் 95 ஓட்டங்களையும் அணித் தலைவர் இயன் மோர்கன் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்ட ஜோ ரூட் தனது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஒட்ட எண்ணிக்கையாக 133 ஓட்டங்களை பதிவு செய்தார்.

சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான மற்றுமொரு போட்டி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் பர்மிங்ஹமில் இலங்கை நேரப்படி இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.      

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் – 305/6 (50) – தமீம் இக்பால் 128, முஷ்பிகுர் ரஹிம் 79, சௌம்யா சர்க்கார் 28, சபீர் ரஹ்மான் 24, இம்ருல் கைஸ் 19, ஷகிப் அல் ஹசன் 10, லியாம் பிளன்கட் 59/4, பென்ஸ் ஸ்டோக்ஸ் 42/1, ஜேக் போல் 82/1

இங்கிலாந்து – 308/2 (47.2) – ஜோ ரூட் 133*, அலெக்ஸ் ஹேல்ஸ் 95, இயன் மோர்கன் 75*, மஷ்ரஃபி மோர்டசா  56/1, சபீர் ரஹ்மான் 13/1

முடிவு – இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி