2017/2018 பருவ காலத்திற்கான ஆஷஸ் தொடரின் 4 ஆவது டெஸ்ட் போட்டி நேற்று (30) சமநிலையில் முடிவுற்றது. கடந்த 26 ஆம் திகதி மெல்பர்னில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தது. இதன்படி ம்தலில் துடுப்பாடக் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 327 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக டேவிட் வோர்னர் 103 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஸ்டீவென் ஸ்மித் 76 ஓட்டங்களையும் ஷோன் மார்ஷ் 61 ஓட்டங்களையும் பெற்றனர்.
இங்கிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் ஸ்டுவர்ட் ப்ரோட் 4 விக்கெட்டுக்களையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுக்களையும் க்றிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடக் களமிறங்கிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 491 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக அலஸ்டையர் குக் அபாரமாக துடுப்பெடுத்தாடி இறுதிவரை ஆட்டமிழக்காது 244 ஓட்டங்களைப் பெற்றார். ஜோ ரூட் 61 ஓட்டங்களையும் ஸ்டுவர்ட் ப்ரோட் 56 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவுஸ்திரேலிய அணி சார்பில் பந்து வீச்சில் பெட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுக்களையும் ஜோஷ் ஹஸல்வுட் மற்றும் நாதன் லியோன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இலங்கை அணியிலிருந்து நீக்கப்பட்ட மாலிங்கவின் அதிரடி அறிவிப்பு
இங்கிலாந்து அணி 164 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப இரு விக்கெட்டுக்களும் அடுத்தடுத்து வீழ்ந்த நிலையில் போட்டி இங்கிலாந்தின் பக்கம் காணப்பட்டது. எனினும் அணித் தலைவர் ஸ்டீவென் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோரின் நிதானமான இணைப்பாட்டத்தின் மூலம் இங்கிலாந்து அணியின் ஆறுதல் வெற்றி கனவாகத் தொடங்கியது. டேவிட் வோர்னரின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து ஷோன் மார்ஷும் வந்த வேகத்தில் ஓய்வறை திரும்ப மீண்டும் இங்கிலாந்தின் பக்கம் போட்டி திரும்பியது. எனினும் மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த ஸ்மித் உடன் ஜோடி சேர்ந்த மிச்சல் மார்ஷ் மிகப் பொறுமையாக துடுப்பெடுத்தாடி 5ஆம் நாள் இறுதிவரை எவ்வித விக்கெட்டுக்களையும் பறிகொடுக்காமல் போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதன் போது ஸ்டீவென் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களையும் டேவிட் வோர்னர் 86 ஓட்டங்களையும் மிச்சல் மார்ஷ் 29 ஆட்டமிழக்காமல் ஓட்டங்களையும் பெற்றனர்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக இரட்டைச் சதம் கடந்த இங்கிலாந்து அணியின் அலஸ்டையர் குக் தெரிவு செய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான போட்டி ஜனவரி மாதம் 3ஆம் திகதி சிட்னியில் நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
அவுஸ்திரேலியா (முதலாவது இன்னிங்ஸ்) – 327 (119) – டேவிட் வோர்னர் 103, ஸ்டீவன் ஸ்மித் 76, ஷோன் மார்ஷ் 61, கேமரோன் பென்க்ரோப்ட் 26. ஸ்டுவர்ட் ப்ரோட் 4/51, ஜேம்ஸ் ஆண்டர்சன் 3/61, க்ரிஸ் வோக்ஸ் 2/72
இங்கிலாந்து (முதலாவது இன்னிங்ஸ்) – 491 (144.1) – அலஸ்டையர் குக் 244*, ஜோ ரூட் 61, ஸ்டுவர்ட் ப்ரோட் 56, க்றிஸ் வோக்ஸ் 26, பெட் கம்மின்ஸ் 4/117, ஜோஷ் ஹசல்வுட் 3/95, நாதன் லியோன் 3/109
அவுஸ்திரேலியா (இரண்டாவது இன்னிங்ஸ்) – 263/4 (124.2) – ஸ்டீவன் ஸ்மித் 102*, டேவிட் வோர்னர் 86, மிச்சல் மார்ஷ் 29*, ஜேம்ஸ் ஆண்டர்சன் 1/46, ஸ்டுவர்ட் ப்ரோட் 1/44, க்றிஸ் வோக்ஸ் 1/62
முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.