இலங்கை இளையோர் அணிக்கு அடுத்த தோல்வி

172

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் முத்தரப்பு இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று (19) இங்கிலாந்தின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியினை எதிர்கொண்ட இலங்கை இளையோர் அணியினர் 44 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளனர். 

மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி அங்கே இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகள் பங்குபெறும் முத்தரப்பு இளையோர் ஒருநாள் தொடரில் ஆடிவருகின்றது.

இந்த முத்தரப்பு தொடரில் தாம் விளையாடிய கடைசிப் போட்டியிலும் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இலங்கையின் இளம் வீரர்கள் மீண்டும் அவர்களை என்டிகுவா நகரில் வைத்து எதிர்கொண்டனர்.

தொடர்ந்து போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்தின் இளம் அணிக்காக வலதுகை துடுப்பாட்ட வீரரான ஜோர்டன் கோக்ஸ் சதம் விளாசினார். இதுதவிர, ஜோய் எவிசனும் அதிரடியான அரைச்சதம் ஒன்றினை பெற்றார்.

இந்த இரண்டு  வீரர்களினதும் துடுப்பாட்ட உதவியோடு இங்கிலாந்து கிரிக்கெட் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 292 ஓட்டங்கள் பெற்றது.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் சதம் கடந்த ஜோர்டன் கோக்ஸ் 105 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம், ஜோய் எவிசன் வெறும் 18 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் மற்றும் 2 பெளண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் நவீன் பெர்னாந்து, சமிந்து விஜேசிங்க, சோனால் தினுஷ மற்றும் லக்ஷான் கமகே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டினர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 293 ஓட்டங்களைப் பெற இலங்கை இளம் அணி துடுப்பாடியது. இலங்கை அணிக்காக அதன் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயற்பட்ட போதும் மத்திய வரிசை வீரர்கள் ஜொலிக்காத காரணத்தினால் இலங்கை இளம் அணி 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 248 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது. 

இலங்கை இளம் அணியின் துடுப்பாட்டத்தில் நவோத் பரணவிதான 73 ஓட்டங்கள் பெற்றிருக்க, ரவிந்து ரசன்சத 52 ஓட்டங்களையும் சோனால் தினுஷ  51 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

அதேநேரம், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் லூக் ஹொல்மன் மற்றும் லூயிஸ் கோல்ட்வேர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்தனர்.

இப்போட்டியில் தோல்வியடைந்துள்ள இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி முத்தரப்பு ஒருநாள் தொடரில் தமது மூன்றாவது தோல்வியினை பதிவு செய்துள்ளமை  குறிப்பிடத்தக்க விடயமாகும்.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து – 292/4 (50) ஜோர்டன் கோக்ஸ் 105(128), ஜோய் எவிசன் 50(18)*, சமிந்து விஜேசிங்க 51/1(8)

இலங்கை – 248/9 (50) நவோத் பரணவிதான 73 (75), ரவிந்து ரசன்த 52(46), சோனால் தினுஷ 51(64)*, லூயிஸ் கோல்ட்வேர்த்தி 37/2(9), லூக் ஹொல்மன் 50/2(9)

முடிவு – இங்கிலாந்து 44 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<