முத்தரப்பு இளையோர் ஒருநாள் தொடரில் இலங்கைக்கு முதல் தோல்வி

141
England U19 vs Sri Lanka U19

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் முத்தரப்பு இளையோர் ஒருநாள் தொடரின் 7ஆவது போட்டியில், இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியை இங்கிலாந்து 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தியுள்ளது.

இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் மேற்கிந்திய தீவுகளின் இளம்  கிரிக்கெட் அணியும் பங்குபெறும் இந்த முத்தரப்பு ஒருநாள் தொடர் கரீபியன் தீவுகளில் நடைபெறுகின்றது. இந்நிலையில், இத்தொடரில் தாம் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை இளம் கிரிக்கெட் அணி இங்கிலாந்தை நேற்று (15) என்டிகுவா மைதானத்தில் வைத்து எதிர்கொண்டது.

தொடர்ந்து, நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கையின் இளம் வீரர்கள் இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 42.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 113 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் காமில் மிஷார 23 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் 20 ஓட்டங்கள் கடந்த ஒரே வீரராக மாறினார். மறுமுனையில், அட்டகாசமான பந்துவீச்சினை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர்களான ஜோர்ஜ் பால்டர்சன் மற்றும் ஸ்கோட் கியூரி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர். இதேநேரம், ஜோ எவிசனும் 2 விக்கெட்டுக்களை பதம் பார்த்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட மிகவும் சவால் குறைந்த 114 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய இங்கிலாந்து அணி தமது பதில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது.

தொடர்ந்து இங்கிலாந்து இளையோர் கிரிக்கெட் அணி வெற்றி இலக்கிற்கான தமது பயணத்தில் சிறிது தடுமாற்றத்தை காட்டிய போதிலும், அவ்வணிக்கு டேன் மோஸ்லி தனது போராட்டமான துடுப்பாட்டம் மூலம் ஓட்டங்கள் சேர்த்தார்.

டேன் மோஸ்லி இன் துடுப்பாட்ட உதவியோடு, இங்கிலாந்து அணி போட்டியின் வெற்றி இலக்கை 33 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களுடன் அடைந்தது.

இங்கிலாந்துத் தரப்பின் வெற்றியினை உறுதி செய்த டேன் மோஸ்லி 62 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்கள் குவித்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் கவிந்து நதீஷன் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி சிறந்த பந்துவீச்சினை காட்டிய போதிலும் அது வீணானது.

அதேநேரம், இப்போட்டியில் அடைந்த தோல்வி மூலம் இலங்கை அணி, இந்த முத்தரப்பு இளையோர் ஒருநாள் தொடரில் முதல் தோல்வியினை பதிவு செய்திருக்கின்றது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 113 (42.4) காமில் மிஷார 23(50), ஸ்கோட் கியூரி 18/3(7.4), ஜோர்ஜ் பால்டர்சன் 18/3(7), ஜோ எவிசன் 18/2(7)

இங்கிலாந்து – 115/6 (33) டேன் மோஸ்லி 43(62), கவிந்து நதீஷன் 33/3(10)

முடிவு – இங்கிலாந்து 4 விக்கெட்டுக்களால் வெற்றி