தோல்வியிலும் அணியில் முன்னேற்றங்களை கண்ட மிக்கி ஆர்தர்!

England tour of Sri Lanka 2021

852

இங்கிலாந்து அணிக்கு எதிராக 2-0 என தொடர் தோல்வியை சந்தித்தாலும், இலங்கை கிரிக்கெட் அணியில் சில முன்னேற்றங்களை கண்டுள்ளதாக அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் குறிப்பிட்டள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மிக்கி ஆர்தர் நியமிக்கப்பட்டு ஒரு வருடமாகியும், இது தன்னுடைய மூன்றாவது டெஸ்ட் தொடர் என்பதையும், இன்றளவிலும் வீரர்களை சரியாக கண்டறிவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

>>ஒருநாள், T20i தொடர்களுக்காக இங்கிலாந்து செல்லவுள்ள இலங்கை அணி

“தொடரில் சில நன்மைகள் கிடைத்துள்ளன. நீண்ட நாட்களாக கொவிட்-19 பாதுகாப்பு வளையத்தில் இருந்தாலும், வீரர்கள் முன்னேறுவதை நான் பார்க்கிறேன். இலங்கை அணியுடன் ஒருவருடமாக இருந்தாலும், இது என்னுடைய மூன்றாவது டெஸ்ட் தொடர்.

இப்போதும் வீரர்களை சரியாக கண்டறிவதற்கு முயற்சிக்கிறேன். செஞ்சூரியனில், வீரர்கள் முதல் இன்னிங்ஸில் விளையாடியதை பார்த்து, சிறப்பான வீரர்கள் என கண்டறிந்தேன். எனினும், உபாதைகள் ஏமாற்றமளித்தன. திமுத் கருணாரத்ன வொண்டரசில் சதமடித்தார். இந்த தொடரில் அஞ்செலோ மெதிவ்ஸ் சிறப்பாக ஆடினார். லசித் எம்புல்தெனிய அற்புதமாக ஆடியிருந்தார்”

அதேநேரம், இலங்கை அணி தற்போது சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளதாகவும், துடுப்பாட்டத்தை தற்போது சரிசெய்யவேண்டிய நிலை ஏற்பட்டள்ளதாகவும் மிக்கி ஆர்தர் குறிப்பிட்டார்.

“வேகப் பந்துவீச்சாளர்களை வைத்து நாம் கடினமாக உழைத்திருந்தோம். இப்போது எம்மிடம் மிகச்சிறந்த 6 வேகப் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். மணிக்கப்பட்டு சுழல் பந்துவீச்சாளர்களை உள்ளடக்கிய, மிகச்சிறந்த சுழல் பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.  

இப்போது நாம் துடுப்பாட்ட வீரர்களை சரியான இடத்துக்கு அழைத்துவர வேண்டும். பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ப சரியான ஓட்டங்களை துடுப்பாட்ட வீரர்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும். எமது துடுப்பாட்டம் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது.

எனவே, அவர்களுடன் கலந்துரையாடி ஏன் இவ்வாறு துடுப்பெடுத்தடினர் எனவும், தற்காப்பு ஆட்டத்தை ஏன் நம்பவில்லை எனவும் கேட்கவேண்டும். அணியை பொருத்தவரை, தனியொருவர் பிரகாசிப்புகள் இருந்தாலும், அனைத்து பிரகாசிப்பும் ஒரு போட்டியில் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.

இதேவேளை, இந்த தொடர் முழுவதும் பிரகாசித்த சுழல் பந்துவீச்சாளர் லசித் எம்புல்தெனியவை பார்த்து உற்சாகப்படுவதாகவும் மிக்கி ஆர்தர் குறிப்பிட்டார். லசித் எம்புல்தெனிய முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் உட்பட 10 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

“லசித் எம்புல்தெனியவை பார்த்து நான் உற்சாகமடைகிறேன். மிகச்சிறந்த வீரர். அவரின் திறமைக்காக கடினமாக உழைக்கிறார். 10 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருந்தாலும், அவர் ஆச்சரியப்படுத்தும் ஒரு வீரர்.

அவருடைய விரல்கள் பரிசாக கிடைக்கப்பெற்றுள்ளன. அதன்மூலம் அவரின் சுழல் பந்துவீச்சு பிரகாசிக்கிறது. அனைவரையும் ஈர்க்கும் ஒரு இளம் வீரர். அவருடைய எதிர்காலம் அற்புதமாக அமையும் என எதிர்பார்க்கிறேன். அவருடன் இணைந்து பணிபுரிவது தொடர்பில் அதிகமாக உற்சாகமடைகிறேன். அவருடைய எதிர்காலம் மிகச்சிறப்பாக அமையும்” என மிக்கி ஆர்தர் குறிப்பிட்டார்.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<