இன்னிங்ஸ் அடிப்படையில் தென்னாபிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து

204
©ICC

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக போர்ட் எலிசெபெத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

முதல் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில், முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்று, தொடரை சமப்படுத்தியிருந்தன. இந்த நிலையில், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் அடிப்படையில் வெற்றிபெற்று, தொடரில் 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது.

கசூஸா, மஸ்வோர், எர்வின் ஆகியோரின் அரைச்சதங்களோடு ஜிம்பாப்வே முன்னிலை

சுற்றுலா இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் ………

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இங்கிலாந்து அணி, ஒல்லி போப்பின் கன்னி டெஸ்ட் சதம் மற்றும் பென் ஸ்டோக்ஸின் சதம் என்பவற்றின் ஊடாக, 499 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

ஒல்லி போப் ஆட்டமிழக்காமல் 135 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, பென் ஸ்டோக்ஸ் 120 ஓட்டங்கள், செம் கரன் 44 ஓட்டங்கள், ஷெக் க்ரெவ்ளேவ் 44 ஓட்டங்கள் மற்றும் இறுதியாக மார்க் வூட் வேகமாக 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் கேஷவ் மஹாராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்த, காகிஸோ ரபாடா 2 விக்கெட்டுகளையும், டேன் பெட்டர்சன் மற்றும் என்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி, டொம் பெஸ் உட்பட இங்கிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 209 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

தென்னாபிரிக்க அணி சார்பில் குயிண்டன் டி கொக் 63 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள, டீன் எல்கர் 35 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் டொம் பெஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்த, ஸ்டுவர்ட் ப்ரோட் 3 விக்கெட்டுகளையும், செம் கரன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து இன்னிங்ஸ் தோல்வியினை தவிர்க்கும் முகமாக 290 ஓட்டங்கள் பின்னடைவில் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, ஐந்தாவது நாள் ஆட்டத்தின் போது, 237 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து போட்டியில் தோல்விக்கண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பில் அதிகபட்சமாக கேஷவ் மஹாராஜ் 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, டேன் பெட்டர்சன் 39 ஓட்டங்கள், பெப் டு ப்ளெசிஸ் 36 ஓட்டங்கள் மற்றும் காகிஸோ ரபாடா 16 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

இதில், இறுதி விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த கேஷவ் மஹாராஜ் மற்றும் டேன் பெட்டர்சன் ஆகியோர் 99 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றபோதும், கேஷவ் மஹாராஜ் துரதிஷ்டவசமாக ரன்-அவுட் மூலம் ஆட்டமிழந்திருந்தார்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பொருத்தவரை அணித் தலைவர் ஜோ ரூட் அபாரமாக பந்துவீசி, 4 விக்கெட்டுகளை வீழ்த்த, மார்க் வூட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதேவேளை, இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி தொடரில் 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளதுடன், நான்காவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 24ம் திகதி ஜொஹன்னஸ்பேர்க்கில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டி சுருக்கம்

இங்கிலாந்து – 499/9d, ஒல்லி போப் 135*, பென் ஸ்டோக்ஸ் 120, செம் கரன் 44, ஷெக் க்ரெவ்ளேவ் 44, மார்க் வூட் வேகமாக 42, கேஷவ் மஹாராஜ் 180/5, காகிஸோ ரபாடா 97/2

தென்னாபிரிக்கா 209/10, குயிண்டன் டி கொக் 63, டீன் எல்கர் 35,  டொம் பெஸ் 31/5, ஸ்டுவர்ட் ப்ரோட் 30/3

தென்னாபிரிக்கா (F/O) – 237/10, கேஷவ் மஹாராஜ் 71, டேன் பெட்டர்சன் 39*, பெப் டு ப்ளெசிஸ் 36, காகிஸோ ரபாடா 16, ஜோ ரூட் 87/4, மார்க் வூட் 32/3

முடிவு – இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<<