2021 ஜனவரியில் இலங்கை வரவுள்ள இங்கிலாந்து அணி

311

கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இங்கிலாந்து  கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் அடுத்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஐ.சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் கீழ் நடைபெறவுள்ள 2 போட்டிகளைக் கொண்ட இந்த தெடரானது உயிர் பாதுகாப்பு வலயத்தில் காலியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி, 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருந்தது. 

இலங்கை – தென்னாபிரிக்க தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது

எனினும், கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குறித்த தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதுடன், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் உடனடியாக சொந்த நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றது. இதனையடுத்து இலங்கையில் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை.

இந்த நிலையில், கொவிட் – 19 வைரஸ் தாக்கம் குறைவடைந்த பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து மண்ணில் மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வெற்றிகரமாக நடைபெற்றது.

இதனிடையே, ஐ.பி.எல் தொடர் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவுக்கு வந்த நிலையில், மீண்டும் டெஸ்ட் தொடர்களை நடத்துவதற்கு பெரும்பாலான நாடுகள் முன்வந்துள்ளன. 

இதன்படி, இம்மாதம் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், T20i தொடர்களில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி, குறித்த சுற்றுப்பயணம் நிறைவடைந்தவுடன் இலங்கை வரவுள்ளது.

Video – அடுத்த T20i திருவிழா தயார்: நவம்பர் 26இல் ‘LPL’ |Sports RoundUp – Epi 139

ஐ.சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் கீழ் நடைபெறவுள்ள இந்தத் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி மாதம் 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா Daily FT பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், 

”இங்கிலாந்து கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி இலங்கையை வந்தடையும். 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு தான் அந்த அணி இலங்கை வரவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி மாதம் 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன” என தெரிவித்தார்.

இங்கிலாந்து தொடருக்கான தென்னாபிரிக்கா குழாம் அறிவிப்பு

இதேநேரம், இலங்கை வரும் இங்கிலாந்து அணி எந்தவொரு பயிற்சிப் போட்டியிலும் விளையாட மாட்டாது எனவும், இங்கிலாந்து அணி வீரர்களுக்கிடையில் உள்ளக போட்டிகள் நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, எதிர்வரும் டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி விளையாடவுள்ளது. 

கொவிட் – 19 வைரஸுக்குப் பிறகு இலங்கை அணி விளையாடுகின்ற முதலாவது சர்வதேச தொடர் இதுவாகும். 

இந்தத் தொடர் நிறைவடைந்த பிறகு உடனடியாக நாடு திரும்பும் இலங்கை அணியினர், மத்தளை விமான நிலையத்தில் வந்திறங்கிய பின்னர் நேராக காலிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே 7 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவிருக்கின்றனர். 

இதனையடுத்து இலங்கை அணி ஜனவரி மாதம் 14ஆம் திகதி முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.

Video – கிரிக்கெட்டில் சாதிக்க தன்னம்பிக்கை வேண்டும் – PRAKASH SCHAFFTER

எனவே, கொவிட் – 19 வைரஸுக்குப் பிறகு இலங்கை அணி சொந்த மண்ணில் விளையாடுகின்ற முதலாவது சர்வதேச கிரிக்கெட் தொடராக இது அமையவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, இதுவரை நடைபெற்றுள்ள ஐ.சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை இந்திய அணி தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இதில் இங்கிலாந்து அணி 262 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும், 60 புள்ளிகளுடன் இலங்கை அணி 6ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<