கட்டுப்படுத்தப்பட்ட பயிற்சிகளில் ஈடுபடவுள்ள இங்கிலாந்து!

England tour of Sri Lanka 2021

217
England tour of Sri Lanka 2021

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட அணி, இன்றைய தினத்திலிருந்து (6) கட்டுப்படுத்தப்பட்ட பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (05) இங்கிலாந்து வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது கட்ட கொவிட்-19 வைரஸ் தொற்று பரிசோதனைகளில், வீரர்கள் எவருக்கும் கொவிட்-19 தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்ட பின்னரே, இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

>> அபுதாபி T10 லீக்கில் சங்கக்காரவுக்கு புதிய பதவி

எவ்வாறாயினும், ஆரம்பத்தில் கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர், மொயீன் அலிக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளமை இரண்டாவது பரிசோதனையிலும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மொயீன் அலி தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

மொயீன் அலி, இங்கிலாந்து குழாத்திலிருந்து தற்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகிய வீரர்களை தங்கவைப்பதற்கு காலியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும், அங்கு இடம்பெற்று வருகின்ற நிர்மானப்பணிகள் காரணமாக, ஹம்பாந்தோட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றில், மொயீன் அலி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அதேநேரம், மொயீன் அலியுடன் நெருங்கியிருந்த காரணத்தால், தனிமைப்படுத்தப்பட்டிருந்த, இங்கிலாந்து அணியின் மற்றுமொரு சகலதுறை வீரரான க்ரிஸ் வோர்க்ஸிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொவிட்-19 தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும், க்ரிஸ் வோர்க்ஸ் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளார் என இங்கிலாந்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணியின் மொயீன் அலிக்கு கொவிட்-19 தொற்று இருப்பது கடந்த 4ம் திகதி உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில், வீரர்கள் அனைவருக்கும் மேற்கொள்ளப்படும் இரண்டாவது கொவிட்-19 பரிசோதனையின் பின்னர், பயிற்சிகள் தொடர்பில் அறிவிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், தற்போது கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான முதல் டெஸ்ட் போட்டி, 14ம் திகதி ஆரம்பிக்கவுள்ளதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஜனவரி 22ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<