பாகிஸ்தான் சென்று ஏழு T20i போட்டிகளில் விளையாடும் இங்கிலாந்து

202
AFP

அடுத்த ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஏழு போட்டிகள் கொண்ட T20i தொடரில் விளையாடும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொம் ஹெரிசனுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ரமீஸ் ராஜாவுக்கும் இடையில் லாகூரில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தாண்டு T20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு T20i போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந்தது.

ஆனால் பாதுகாப்பு காரணங்களினால் குறித்த தொடரை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்தது. மேலும் நியூசிலாந்து அணியைத் தொடர்ந்து இங்கிலாந்தும் அதே காரணத்தை முன்வைத்து T20i தொடரை ரத்து செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், ரத்து செய்யப்பட்ட குறித்த தொடரானது அடுத்த ஆண்டு செப்டம்பர் – ஒக்டோபர் மாதங்களில் 5 போட்டிகளைக் கொண்ட T20i தொடராக நடத்துவதற்கு தீர்மானிக்கட்டது.

இதனிடையே, இரு நாட்டு கிரிக்கெட் சபைகளின் முக்கிய அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பினைத் தொடரந்து குறித்த தொடரில் மேலதிகமாக 2 T20i போட்டிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரு அணிகளுக்குமிடையில் ஏழு T20i போட்டிகள் நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொம் ஹெரிசன் கருத்து தெரிவிக்கையில்,

நானும் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் சிரேஷ;ட இயக்குனர் மார்ட்டின் டார்லோவும் லாகூருக்குச் சென்று, கடந்த சில வாரங்களாக நடைபெற்ற சில விடயங்கள் தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.

இந்தப் பேச்சுவார்த்தையில் இங்கிலாந்து அணியின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது குறித்தும், எதிர்கால உறவு குறித்தும் விவாதித்தோம். அதன்படி 2022ஆம் ஆண்டு செப்டம்பர், ஒக்டோபர் மாதங்களில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஏழு T20i போட்டிகளில் விளையாடும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

மேலும் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கிண்ணத் தொடருக்கு பின் டெஸ்ட் தொடரிலும் நாங்கள் விளையாட திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடர் நிறைவடைந்த பிறகு மீண்டும் பாகிஸ்தான் செல்லும் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<