2025இல் இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம்: போட்டி அட்டவணை வெளியீடு

110

இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் அடுத்த ஆண்டு (2025) இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த நாட்டு அணியுடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20i கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் சபையும், பிசிசிஐ-யும் வெளியிட்டுள்ளன. 

அதன்படி, இந்திய ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகள் 2025 இல் இங்கிலாந்து செல்கின்றன. அப்போது, இந்திய மகளிர் அணி, ஜூன்ஜூலை காலப்பகுதியில் 5 போட்டிகள் கொண்ட T20i தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகியவற்றில் இங்கிலாந்துடன விளையாடவுள்ளது. 

அதன் பிறகு, 2026 இல் மீண்டும் இங்கிலாந்து செல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, கிரிக்கெட்டின் தாயகமாக விளங்கும் இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து மகளிர் அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவுள்ளது. லோர்ட்ஸ் மைதானத்தில் இதுவரை 149 ஆடவர் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், மகளிருக்காக நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், இந்தப் போட்டிக்கான திகதி குறிப்பிடப்படவில்லை. 

இந்த நிலையில், அடுத்த ஆண்டு இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணி, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதுதவிர, ஜிம்பாப்வே அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டியிலும், மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா அணிகளுடன் ஒருநாள் மற்றும் T20i தொடர்களிலும், அயர்லாந்துடன் ஒருநாள் தொடரிலும் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. 

கடைசியாக இந்திய அணி கடந்த 2021 இல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியது. ஐந்து போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகள் நடைபெற்ற நிலையில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது. கடைசி போட்டி கொரோன வைரஸ் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2022இல் அந்தப் போட்டி நடைபெற்றதுடன் அதில் இங்கிலாந்து வெற்றி பெற்றதால் தொடர் 2-2 என சமன் ஆனது. 

அதன் பிறகு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையில் இந்தியாவில் நடைபெற்றது. இதில் 4-1 என தொடரை இந்தியா வென்றமை குறிப்பிடத்தக்கது 

இதேவேளை, இங்கிலாந்து மகளிர் அணி, அடுத்தாண்டு இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுடன் T20i மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. 

இங்கிலாந்து எதிர் இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை (ஆடவர்) 

  • முதல் டெஸ்ட்: ஜூன் 20 – ஹெட்டிங்லி, லீட்ஸ் 
  • இரண்டாவது டெஸ்ட்: ஜூலை 2 – எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹம் 
  • மூன்றாவது டெஸ்ட்: ஜூலை 10 – லோர்ட்ஸ், லண்டன் 
  • நான்காவது டெஸ்ட்: ஜூலை 23 – ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர் 
  • ஐந்தாவது டெஸ்ட்: ஜூலை 31 – தி ஓவல், லண்டன் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<