ஒரு நாள் அரங்கில் புதிய உலக சாதனை படைத்த இங்கிலாந்து

366

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 481 ஓட்டங்களைக் குவித்து இங்கிலாந்து அணி ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் புதிய உலக சாதனையை படைத்துள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டி டிரென்ட் பிரிட்ஜில் உள்ள நொட்டின்ஹம் மைதானத்தில் நேற்று (19) நடைபெற்றது.

சந்திமாலுக்கு போட்டித் தடை : பயிற்சியாளர், முகாமையாளர் மீது குற்றச்சாட்டு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக செயின்ட் லூசியாவில்…

இதன் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ரோய், ஜோனி பெயார்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர்.

இங்கிலாந்து அணி முதலில் இருந்தே அவுஸ்திரேலிய பந்து வீச்சை பதம் பார்த்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் வேகமாக அடித்து ஆடினர். அந்த அணியின் ஓட்ட எண்ணிக்கை 159 ஆக இருக்கும் போது முதல் விக்கெட்டாக ஜேசன் ரோய் 61 பந்துகளில் 82 ஓட்டங்களை எடுத்து ரன் அவுட்டானார்.

அடுத்து களமிறங்கிய அலெக்ஸ் ஹேல்ஸும் அதிரடியை தொடர்ந்தார். இதனால் அணியின் ஓட்டம் பெறும் வேகம் ஒரு ஓவருக்கு 8 ஓட்டங்களாக உயர்ந்தது.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 310 ஆக இருந்தபோது சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பேர்ஸ்டோவ் சதமடித்ததுடன், 92 பந்துகளில் 5 சிக்ஸர், 15 பௌண்டரிகளுடன் 139 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து அலெக்ஸ் ஹேல்ஸும் சதமடித்தார். அடுத்து இறங்கிய ஜோஸ் பட்லர் 11 ஒட்டங்களுடன் ஆட்டமிழக்க, அணித் தலைவர் இயென் மோர்கனும், தனது பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 பந்துகளில் 6 சிக்ஸர், 3 பௌண்டரிகளுடன் 67 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பொறுப்புடன் ஆடிய ஹேல்ஸ் 92 பந்துகளில் 5 சிக்ஸர், 16 பௌண்டரிகளுடன் 147 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 459 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த அணிக்கான தமது சொந்த சாதனையை இங்கிலாந்து அணி, 2 வருடங்களுக்குப் பிறகு முறியடித்தது.

முன்னதாக இலங்கை வசமிருந்த உலக சாதனையை, கடந்த 2016ஆம் ஆண்டு இதே மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் 444 ஓட்டங்களைக் குவித்து இங்கிலாந்து அணி புதிய உலக சாதனை படைத்திருந்தது.  

அத்துடன், ஜோனி பெயார்ஸ்டோ, அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் சதமடித்து அசத்த, ஜேசன் ரோய் மற்றும் அணித் தலைவர் இயென் மோர்கன் ஆகியோர் அரைச்சதம் அடித்து இங்கிலாந்து அணிக்கான இந்த வரலாற்று வெற்றியைப் பெற்றுக்கொடுத்தனர். அத்துடன், இவர்களது சராசரி துடுப்பாட்ட வேகம் 100ஐயும் தாண்டியிருந்தது.

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து வீராங்கனை உலக சாதனை

அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்….

மறுபுறத்தில் இங்கிலாந்தின் துடுப்பாட்ட வரிசையை வீழ்த்துவதற்கு எட்டு பந்துவீச்சாளர்களை அவுஸ்திரேலிய அணி பயன்படுத்தி இருந்தது. அதிலும் குறிப்பாக அவ்வணியின் வேகப்பந்துவீச்சாளர் அன்ட்ரு டை 9 ஓவர்களுக்கு 100 ஓட்டங்களை வாரி வழங்கியிருந்தமை சிறப்பம்சமாகும்.

இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அத்துடன், இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 21 சிக்ஸர்களும், 41 பௌண்டரிகளும் பெற்றுக்கொண்டது.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை நியூசிலாந்து மகளிர் மற்றும் அயர்லாந்து மகளில் அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 490 ஓட்டங்களைக் குவித்து உலக சாதனை படைத்தது. ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகளிலேயே பெறப்பட்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகவும் இது பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • இயென் மோர்கன்

இதையடுத்து, 482 ஓட்டங்கள் என்ற கடின இலக்குடன் அவுஸ்திரேலியா அணி களமிறங்கியது. அவ்வணிக்காக டிராவிஸ் ஹெட் 51 ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டோனிஸ் 44 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் அவுஸ்திரேலிய அணி 37 ஓவர்களில் 239 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்து தோல்வியைத் தழுவியது.

சங்கா, மஹேல உள்ளிட்ட வீரர்களின் நிராகரிப்பு வரவேற்கத்தக்கது – அர்ஜுன ரணதுங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான..

இங்கிலாந்து அணி சார்பில் ஆடில் ரஷித் 4 விக்கெட்டுக்களையும், மொயின் அலி 3 விக்கெட்டுக்களையும், டேவிட் வில்லி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

எனவே, இங்கிலாந்து அணி 242 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக அலெக்ஸ் ஹேல்ஸ் தெரிவானார்.

இப்போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்

  • ஆடவருக்கான ஒரு நாள் கிரிக்கெட்டில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.
  • இங்கிலாந்து அணியின் மிகப் பெரிய ஓரு நாள் வெற்றியாகவும், அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய தோல்வியாகவும் இது பதிவாகியது.
  • ஒரு நாள் போட்டிகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட (62) அதிக பௌண்டரிகள். முன்னதாக இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் 52 பௌண்டரிகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
  • ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக 3000 ஓட்டங்களைக் குவித்த முதல் வீரராக இயென் மோர்கன் வரலாற்றில் இடம்பிடித்தார்.
  • இங்கிலாந்து சார்பாக ஒரு நாள் அரங்கில் வேகமான அரைச்சதத்தைப் (21 பந்துகள்) பெற்றுக்கொண்ட வீரராக இயென் மோர்கன் இடம்பெற்றார்.
  • ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதங்களைக் குவித்த உலகின் 8ஆவது வீரராக ஜோனி பெயார்ஸ்டோ இடம்பிடித்தார். முன்னதாக விராத் கோஹ்லி, டேவிட் வோர்னர், குயின்டன் டி கொக், குமார் சங்கக்கார, ஹசிம் அம்லா, ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் சஹீர் அப்பாஸ் ஆகிய வீரர்கள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
  • இங்கிலாந்து அணிக்காக வருடமொன்றில் 4 ஒரு நாள் சதங்களைப் பூர்த்தி செய்த டேவிட் கோவர்ஸின் (1983) சாதனையையும் ஜோனி பெயார்ஸ்டோ சமப்படுத்தினார்.

ஒரு நாள் போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவித்த அணிகள்

அணி ஓட்டம் எதிர் இடம் திகதி
இங்கிலாந்து 481/6 அவுஸ்திரேலியா நொட்டின்ஹம் 19 ஜுன் 2018
இங்கிலாந்து 444/3 பாகிஸ்தான் நொட்டின்ஹம் 30 ஆகஸ்ட் 2016
இலங்கை 443/9 நெதர்லாந்து ஆம்ஸ்டெல்வீன் 4 ஜுலை 2006
தெ.ஆபிரிக்கா 439/2 மே. தீவுகள் தெ.ஆபிரிக்கா 18 ஜனவரி 2015
தெ.ஆபிரிக்கா 438/9   அவுஸ்திரேலியா தெ.ஆபிரிக்கா  12 மார்ச் 2006
தெ.ஆபிரிக்கா 438/4 இந்தியா மும்பை 25 ஒக்டோபர் 2015

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<