டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டுவர்ட் பிரோட் புதிய மைல்கல்

The Ashes 2023

308

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வேகப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை இங்கிலாந்து அணியின் ஸ்டுவர்ட் பிரோட் படைத்துள்ளார்.

இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மன்செஸ்டர் நகரில் புதன்கிழமை (19) ஆரம்பமாகியதுடன், முதல்நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 299 ஓட்டங்களை எடுத்துள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா வீரர்களான உஸ்மான் கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரினதும் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணியின் சிரேஷ்ட வேகப் பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிரோட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டி சாதனை படைத்தார்.

இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய 5ஆவது வீரர் என்ற சாதனையை ஸ்டுவர்ட் பிரோட் படைத்துள்ளார். அதேபோல டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய 2ஆவது வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதில் 394 விக்கெட்டுகள் இங்கிலாந்திலும், 206 விக்கெட்டுகள் வெளிநாடுகளிலும் எடுக்கப்பட்டவை ஆகும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இலங்கையின் சுழல்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் உள்ளார். அதேபோல, 2ஆவது இடத்தில் அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன் 708 விக்கெட்டுகளுடனும், 3ஆவது இடத்தில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் அண்டர்சன் 688 விக்கெட்டுகளுடன், இந்தியாவின் அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.

எனவே, அனில் கும்ப்ளேயை பின்தள்ளி நான்காவது இடத்தைப் பிடிக்க ஸ்டுவர்ட் பிரோட்டிற்கு இன்னும் 19 விக்கெட்டுகளே தேவைப்படுகின்றன.

அதுமாத்திரமின்றி, இங்கிலாந்து வீரர்கள் மத்தியில் 600 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரராக ஸ்டுவர்ட் பிரோட் இடம்பிடித்தார்.

அத்துடன் முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் விக்கெட் எடுத்த இங்கிலாந்து வீரர்களில் இயென் போத்தமை பின்தள்ளி முதலிடத்தைப் பிடித்தார்.

அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக 148 விக்கெட்டுகளை வீழ்த்தி இயென் போத்தம் முதலிடத்தில் இருந்தார். தற்போது 149 விக்கெட்டுகளுடன் ஸ்டுவர்ட் பிரோட் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

முன்னாள் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரரும், ICC இன் போட்டி மத்தியஸ்தருமான கிறிஸ் பிரோட்டின் மகனான ஸ்டுவர்ட் பிரோட், 2007இல் மைக்கல் வோகன் தலைமையில் இலங்கைக்கு எதிராக கொழும்பில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். ஒரு துடுப்பாட்ட வீரராக கிரிக்கெட் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த அவர், மிகத் தாமதமாகவே பந்துவீச்சு பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார்.

உலகின் முன்னணி டெஸ்ட் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்ற 37 வயதான ஸ்டுவர்ட் பிரோட், இதுவரை 20 முறைக்கும் மேல் 5 விக்கெட் குவியலை எடுத்துள்ளார். அதேபோல டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்று தடவைகள் 10 விக்கெட் குவியலை எடுத்துள்ளார்.

அதுமாத்திரமின்றி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு தடவைகள் ஹெட்ரிக் எடுத்த ஒரே இங்கிலாந்து பந்துவீச்சாளரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<