நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்து ஓவர்களை வீச தவறிய குற்றச்சாட்டுக்காக, இங்கிலாந்து அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது, இங்கிலாந்து அணி 86 ஓவர்களை மாத்திரம் வீசியிருந்த நிலையில், ஆட்டநேர இறுதிவரை மீதமுள்ள ஓவர்களை வீச தவறியது. இதன் காரணமாக, இங்கிலாந்து அணியின் வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆட்டநேரத்தில் மேலதிகமாக அரை மணித்தியாலயத்தை எடுத்துக்கொண்ட போதும், ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி 2 ஓவர்களை வீச தவறியதாக கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, கள நடுவர்கள் மற்றும் போட்டி மத்தியஸ்தர் க்ரிஸ் பிரோட் ஆகியோர் இணைந்து, இந்த தீர்மானத்தை மேற்கொண்டதுடன், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜோ ரூட் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் காரணமாக மேலதிக விசாரணைகள் தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் 2.22 சரத்தின்படி, நிர்ணயிக்கப்படும் நேரத்தில், பந்துவீச தவறுவதற்கும், ஓவர்கள் தாமதமாவதற்கும், அணியின் வீரர்களுக்கு ஓவர் ஒன்றிற்கு போட்டிக்கட்டணத்தில் 20 சதவீதம் அபாராதமாக அறவிடப்படும்.
சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, சீரற்ற காலநிலை காரணமாக சமனிலையாக முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…