இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி, மன்செஸ்டரில் நடைபெற்று வரும் நிலையில், உயிர்-பாதுகாப்பு வளையத்தில் இருந்து ஐந்து வீரர்களை விடுவிக்க இங்கிலாந்து அணி முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது.
கொரோனா பாதிப்பிற்குப் பிறகு முதன்முறையாக இங்கிலாந்தில் கடந்த 8ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் தொடங்கியது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகள் விளையாடி வருகிறது.
>>மீண்டும் பார்வையாளர்களுடன் ஆரம்பித்த கிரிக்கெட் போட்டி<<
கொரோனா வைரஸ் தொற்றால் வீரர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக உயிர்–பாதுகாப்பு வளையம் (Bio-Secure Bubble) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வளையத்திற்குள் இருக்கும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் வழிகாட்டல் நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வெண்டும்.
முன்னதாக இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்சர் இந்த வளையத்தை விட்டு வெளியேறியதால் 2ஆவது போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டதுடன், அவருக்கு எழுத்து மூலம் எச்சரிக்கை விடுக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்குமிடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி மன்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.
இந்த மூன்று போட்டியிலும் இங்கிலாந்து அணியில் டான் லோரன்ஸ், கிரேக் ஓவர்டன், ஒல்லி ரொபின்சன், ஒல்லி ஸ்டோன் ஆகியோர் இடம் பெறவில்லை. இதனால் குறித்த நான்கு வீரர்களையும் இங்கிலாந்து டெஸ்ட் அணியிலிருந்து விடுவிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
>>ரிச்சட்ஸ்-போத்தம் கிண்ணமாக மாற்றமடையும் விஸ்டன் கிண்ணம்!<<
அதேபோல் ஜோ டென்லிக்கு அயர்லாந்து தொடருக்கான ஒருநாள் கிரிக்கெட் முகாமிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
34 வயதாக டென்லி, மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட்டுக்குப் பதிலாக விளையாடியிருந்தார். எனினும், எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் அவர் இறுதி பதினொருவர் அணியில் இடம்பெறவில்லை.
இதேவேளை, இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட எஞ்சிய நான்கு வீரர்களும், ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் நடைபெறவுள்ள இங்கிலாந்தின் உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் ஒன்றான பொப் வில்ஸ் கவுண்டி கிண்ணத் தொடரில் தத்தமது கழகங்களுக்காக விளையாடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>இங்கிலாந்து அணியின் உப தலைவராக மொயீன் அலி நியமனம்<<
இதுஇவ்வாறிருக்க, இங்கிலாந்து அணியிலிருந்து ஐந்து பேரை வெளியேற்றியுள்ள நிலையில், இன்னும் 6 வீரர்களை தயாராக வைத்துள்ளது.
அதிலும் குறிப்பாக, கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற சந்தேகத்தில் ஏராளமான மாற்று வீரர்களை இங்கிலாந்து கிரிக்கெட் சபை தயாராக வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<