பாரம்பரிய மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதில் தயமிக்கமில்லை என்று யூனிஸ்கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் இங்கிலாந்தின் பாரம்பரிய மைதானமான லோர்ட்ஸில் தொடங்குகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு இதே மைதானத்தில் விளையாடும்போதுதான் பாகிஸ்தான் அணி வீரர்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நடந்து சுமார் 6 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் அணி மீண்டும் அதே மைதானத்தில் விளையாட இருக்கிறது.
இந்நிலையில் பழைய நினைவெல்லாம் மறந்து பாகிஸ்தான் வீரர்கள் வரலாற்று சிறப்புமிக்க மைதானமான லோர்ட்ஸில் சந்தோசமாக விளையாட இருக்கிறார்கள் என்று யூனிஸ்கான் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் மூத்த வீரர் யூனிஸ்கான் கூறுகையில், ‘‘லோர்ட்ஸ் மைதானத்தில் எப்போது விளையாடினாலும் அது சந்தோசம்தான். இங்கிலாந்தில் விளையாடும்போது பாரம்பரிய லோர்ட்ஸ் மைதானம், வீரர்கள் அறை போன்றவை எனது மனதில் நிற்கும்.
தற்போதைய சூழ்நிலையில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் எண்டர்சன், ப்ரோட் மிகச் சிறந்தவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நாங்கள் எண்டர்சன், ப்ரோட், பின் ஆகியோருக்கு எதிராக வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.
இங்கிலாந்து மைதானத்தில் கடந்த ஐந்து டெஸ்டில் யூனிஸ்கான் 52.22 சராசரி வைத்துள்ளார். ஒரு சதம், மூன்று அரைச் சதங்கள் அடித்துள்ளார்.
இவர் தனது எதிர்காலம் குறித்து கூறுகையில் ‘‘இது என்னுடைய கடைசி தொடராகக்கூட இருக்கலாம். ஒரு கிரிக்கெட் வீரராகவும், விளையாட்டு வீரராகவும் என்னுடைய உடல்தகுதி, ஆட்டத்திறன் சரியாக இருப்பதாக உணர்கிறேன். இதே வழியில் செல்ல கடவுள் விரும்பினால், எனது நாட்டிற்காக இன்னும் ஐந்து ஆண்டுகள் விளையாடலாம்.
ஆசாத் ஷபிக், அசார் அலி போன்ற இளைஞர்கள் பாகிஸ்தான் அணியில் வந்து கொண்டிருக்கிறார்கள். அணியின் முக்கிய வீரர் ஓய்வு பெறும்போது அவர்களது இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வி எழும். ஆனால், சில வீரர்கள் நாட்டிற்காகவும், அவர்களுக்காகவும் சிறப்பாக விளையாடுவார்கள். ஆகவே, எங்களுக்குப் பிறகு எங்களைவிட சிறப்பாக விளையாடும் வீரர்கள் அணியில் உள்ளனர்” என்றார்.
பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜூலை மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்