இங்கிலாந்து அணி காயங்களால் பீதியடையவில்லை – மோர்கன்

213
Image Courtesy - Getty Images

மேற்கிந்திய தீவுகளுடனான லீக் போட்டியில் நானும் (இயன் மோர்கன்), ஜேசன் ரோயும் உபாதைகளுக்கு உள்ளாகியிருந்த போதிலும், காயங்களால் பீதியடையாமல் எமது வீரர்கள் மேற்கிந்திய தீவுகளை இலகுவாக வீழ்த்தியது மகிழ்ச்சியளிப்பதாக இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் தெரிவித்தார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நேற்று (14) சௌத்ஹெம்ப்டனில் நடைபெற்ற உலகக் கிண்ண லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்கிந்திய தீவுகளை இலகுவாக வீழ்த்திய இங்கிலாந்து

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 19ஆவது…

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட்ட இங்கிலாந்த அணி, எதிரணியை பந்துவீச்சில் மிரட்டியது.

எனினும், போட்டியின் இடைநடுவில் இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய் ஆகிய இரண்டும் வீரர்களும் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது உபாதைகளுக்கு உள்ளாகி மைதானத்தை விட்டு வெளியேறினர்.

இதில் ஜேசன் ரோய்கு இடது தொடையின் பின்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதுடன், இயன் மோர்கனுக்கு முதுகுப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து மோர்கனுக்குப் பதிலாக ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணியை தற்காலிகமாக வழிநடத்தியிருந்தார்.

இந்த நிலையில், போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முதுகுவலி உபாதையுடன் கலந்துகொண்ட இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன், எழுந்து நின்று கொண்டு கேள்விகளுக்கு பதிலளித்தார். இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,

”இரண்டு வீரர்கள் அடுத்தடுத்து உபாதைகளுக்கு உள்ளாகி மைதானத்தில் இருந்து வெளியேறியது சற்று கவலையை ஏற்படுத்தும் என்பது தெரியும். அதற்காக நாங்கள் பீதியடையத் தேவையில்லை. அடுத்த 48 மணி நேரத்தில் எமது உபாதை குறித்த அறிவிப்பை வெளியிடுவோம்.

பொதுவாக எனது முதுகுவலி தசைப்பிடிப்பு ஒருசில தினங்களில் குணமடைந்துவிடும். ஆனால் தற்போது அதுபற்றி ஒன்றும் தெளிவாக கூறமுடியாது. எனினும், இன்னும் 24 மணி நேரத்தில் அதுதொடர்பில் அறிந்துகொளள் முடியும்” என தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த வாரம் பங்களாதேஷுக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து சார்பாக சதமடித்து 153 ஓட்டங்களைக் குவித்த ஜேசன் ரோய், காயம் காரணம் காரணமாக இந்தப் போட்டியில் துடுப்பெடுத்தாட வரவில்லை.

இந்த நிலையில் ஜேசன் ரோயின் காயம் குறித்து இயன் மோர்கன் கருத்து வெளியிடுகையில், ”ஜேசன் ரோயின் காயம் குறித்து தற்போது எனக்கு எதையும் கூறமுடியாது, அவருக்கு ஒரு இறுக்கமான தொடை தசைப்பிடிப்பு ஒன்று ஏற்பட்டு இருந்தது, எனவே அவர் நாளை (15) ஸ்கேன் பரிசோதனை செய்வார், எனவே அதன் அறிக்கைகள் இன்னும் 48 மணித்தியாலங்களில் தான் எமக்கு கிடைக்கும்

அத்துடன், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (18) ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டிக்கு முன் ஜேசன் ரோய் குணமடைந்துவிடுவாரா என்பது பற்றி உறுதியாக கூறமுடியாது.

அதேபோன்று, எம்முடன், ஒருசில பந்துவீச்சாளர்களும் உபாதைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். உண்மையில் இந்த நிலை எமது அடுத்த கட்ட நகர்வுக்கு மிகப் பெரிய சவாலைக் கொடுக்கவுள்ளது. ஏனெனில் மிகவும் குறுகிய கால இடைவெளியில் நாங்கள் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் விளையாடவுள்ளோம்” என அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜோ ரூட்டின் அபார ஆட்டம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மோர்கன் பதிலளிக்கையில், ”துடுப்பாட்டத்தைப் போல பந்துவீச்சிலும் அவர் பிரகாசித்திருப்பது உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. ஜேசன் ரோய்க்குப் பதிலாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி அவர் சதமடித்து அசத்தி தனது திறமையை மேலும் வெளிக்காட்டியிருந்தார். இம்முறை போட்டித் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர் அவர் தான் என்று நான் நினைக்கிறேன்.

பொறுப்பற்ற துடுப்பாட்டமே தோல்விக்கு காரணம் – ஜேசன் ஹோல்டர்

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில்…

அவர் இதுவரை இரண்டு சதங்களை அடித்துள்ளார். அவர் எமது அணியில் இருக்கின்ற ஒரு முக்கியமான வீரர். இது அவரது துடுப்பாட்டத்தின் ஒரு பக்கமாகும், இதை கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களாக அவர் செய்து வருகின்றார். எனினும், மக்கள் அவருடைய திறமையை அதிகம் பார்த்ததில்லை. உண்மையில் இதுதான் அவரது விரிவான விளையாட்டு. எனவே இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் ஜோ ரூட் விளையாடி விதம் பாராட்டக்குரியது” என அவர் கூறினார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<