ஒயின் மோர்கன் தலைமையிலான ஒருநாள் பயிற்சி குழாம் அறிவிப்பு

423

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடருக்காக இங்கிலாந்து கிரிக்கெட் சபையானது 24 பேர் கொண்ட பயிற்சி குழாமை இன்று (9) அறிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்ட நிலையில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் துணிச்சலான முடிவுடன் 117 நாட்களின் பின்னர் நேற்று (8) சர்வதேச கிரிக்கெட் ஆரம்பமானது.

ஒத்திவைக்கப்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில்

சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் உலகிற்கு கொண்டுவரும் நோக்கில் இங்கிலாந்து கிரிக்கெட் சபையானது தொடர்ச்சியாக பல்வேறு தொடர்களை ஏற்பாடு செய்துள்ளது. தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில் அடுத்து அயர்லாந்து அணியுடன் 3 போட்டிகள் ஒருநாள் தொடரிலும், அதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 ஆகிய இரு தொடர்களிலும் மோதவுள்ளது. 

அந்த வகையில் அடுத்து நடைபெறவுள்ள அயர்லாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்காக இங்கிலாந்து கிரிக்கெட் சபையானது தங்களது பயிற்சி குழாமை அறிவித்துள்ளது. துடுப்பாட்ட வீரர் ஒயின் மோர்கன் தலைமையில் 24 வீரர்கள் குறித்த பயிற்சி குழாமில் இடம்பெற்றுள்ளனர். மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற தவறிய விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் ஜொனி பெயர்ஸ்டோ ஒருநாள் குழாமுக்கு திரும்பியுள்ளார். 

இதேவேளை டெஸ்ட் போட்டிகளுக்கு மீண்டும் திரும்பிய சகலதுறை வீரர் மொயின் அலி முதல் டெஸ்ட்டுக்கான குழாமில் நீக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளை நிற பந்து அதாவது ஒருநாள் சர்வதேச தொடருக்கான குழாமில் இடம்பெற்றுள்ளார். இதேவேளை ஒருநாள் தொடருக்காக எதிர்பார்க்கப்பட்ட வீரர்களான முதல் டெஸ்ட் போட்டிக்கான அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ், விக்கெட்காப்பாளர் ஜொஸ் பட்லர் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் ஆகியோர் ஒருநாள் குழாமில் இடம்பெறவில்லை.

இங்கிலாந்து – பாகிஸ்தான் டெஸ்ட், டி20 தொடருக்கான அட்டவணை வெளியீடு

மேலும் வழமையான டெஸ்ட் அணித்தலைவர் ஜோ ரூட் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களான மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரும் ஒருநாள் குழாமில் இடம்பெறவில்லை. அத்துடன் தோள்பட்டை உபாதை காரணமாக சகலதுறை வீரர் கிறிஸ் ஜோர்டன், பெட் பிரவுண் மற்றும் டேவிட் மலான் ஆகியோரும் ஒருநாள் குழாமில் இடம்பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற 23 வயதுடைய வேகப்பந்துவீச்சாளர் ஷாகிப் மஹ்மூத், துடுப்பாட்ட வீரர்களான சாம் ஹைன் மற்றும் பில் சால்ட் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களான ஹென்றி ப்ரோக்ஸ், டொம் ஹெல்ம், ப்றைடொன் கிறேஸ், ரிச்சர்ட் க்ளீசன் ஆகிய 7 வீரர்கள் ஒருநாள் அறிமுகம் பெறாத வீரர்களாக குறித்த குழாமில் இடம்பெற்றுள்ளனர். 

24 பேர் கொண்ட பயிற்சி குழாம்

ஒயின் மோர்கன் (அணித்தலைவர்), மொயின் அலி, ஜொனி பெயர்ஸ்டோ, டொம் பென்டன், சேம் பில்லிங்ஸ், ஹென்றி ப்ரோக்ஸ், ப்றைடொன் கிறேஸ், டொம் கரன், லியம் டௌசன், பென் டக்கட், லௌரி எவன்ஸ், ரிச்சர்ட் க்ளீசன், லுயிஸ் க்ரேகரி, சாம் ஹைன், டொம் ஹெல்ம், லியம் லிவ்விங்ஸ்டன், ஷாகிப் மஹ்மூத், மெத்யூ ப்ராகின்ஸன், ஆதில் ரஷீட், ஜேசன் ரோய், பில் சால்ட், ரீஸ் டொப்லி, ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி

நவீட் நவாஸின் பதவிக்காலத்தை நீடித்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபை

குறித்த 24 வீரர்களுடன் எதிர்வரும் வியாழக்கிழமை (16) ஒருநாள் தொடருக்கான பயிற்சி ஆரம்பமாகவுள்ளது. குறித்த குழாம் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு எதிர்வரும் 21 மற்றும் 24 ஆம் திகதிகளில் இரு பயிற்சிப்போட்டிகள் நடைபெறவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அனைத்து பயிற்சிகளும் நிறைவுற்ற பின்னர் இறுதி ஒருநாள் சர்வதேச குழாம் அறிவிக்கப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக குறித்த ஒருநாள் சர்வதேச தொடர் மூடிய மைதானத்தில் அதாவது ரசிகர்கள் அற்ற நிலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து – அயர்லாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச தொடர் அட்டவணை. (அனைத்து போட்டிகளும் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.)

  • 30 ஜூலை – முதலாவது போட்டி – த ஏஜஸ் போல்
  • 1 ஆகஸ்ட் – இரண்டாவது போட்டி – த ஏஜஸ் போல்
  • 4 ஆகஸ்ட் – மூன்றாவது போட்டி – த ஏஜஸ் போல்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<