இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான சவாலை இலங்கை அணி எதிர்கொள்ளுமா?

2440

கீட்டன் ஜென்னிங்ஸ் தலைமையில் இலங்கை வந்திருக்கும் இங்கிலாந்து லயன்ஸ் அணி, இலங்கை A அணிக்கு எதிரான நான்கு நாட்களை கொண்ட இரண்டு போட்டிகள் உள்ளடங்கலாக 5 ஒரு நாள் போட்டிகளில் மோதவுள்ளது.

கொழும்பில், நேற்று (8ஆம் திகதி, புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியாளர்களுடனான சந்திப்பின் போதே உத்தியோகபூர்வ அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது. எனினும், இங்கிலாந்து அணிக்கு எதிரான இலங்கை A குழாமையோ அல்லது அணித் தலைவரையோ இன்னும் அறிவிக்கவில்லை.

தலைமை பயிற்சியாளர் அவிஷ்க குணவர்தன தெரிவிக்கையில், ”20 பேர் கொண்ட குழாம் தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், இவ்வணிக்கான சில வீரர்கள் தென்னாபிரிக்காவிலுள்ள தேசிய அணியில் இருப்பதால் 15 பேர் கொண்ட இறுதிக் குழாமை தெரிவு செய்ய முடியாமல் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

”நான்கு நாட்களை கொண்ட கழகங்களுக்கிடையிலான போட்டிகள் நடைபெற்று வருவதானால், அதிகளவான கிரிக்கெட் வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதனால் தெரிவு செய்யப்படும் குழாம், எதிர் வரும் முக்கியமான போட்டித் தொடர்களில் திறமைகளை வெளிப்படுத்தும் என நம்புகின்றேன்” என்றார் அவிஷ்க குணவர்தன

அதே நேரம், இங்கிலாந்து லயன்ஸ் அணி பயிற்றுவிப்பளரான, முன்னாள் சிம்பாவே விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர் அண்டி பிளவர் கூறுகையில், என்னுடைய அணி எவ்விதமான சவால்களையும் எதிர் நோக்கும் வகையில் தயார் செய்துள்ளேன். இந்த கிரிக்கெட் தொடருக்காக டுபாயில் இரண்டு வார காலம் பயிற்சி முகாம் ஒன்றினை நடத்தியிருந்தோம். மேலும், நடைபெறவுள்ள பயிற்சி போட்டியில் நிச்சியமாக இங்குள்ள கள நிலைமைகளுக்கேற்ப வீரர்கள் தங்களை மாற்றிக் கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், இலங்கை A அணியுடனான போட்டிகள் சவால் மிக்கவையாகவே இருக்கும். எனினும், நாங்கள் இந்த சுற்றுப்பயணம் முழுவதிலும் ஆக்கபுர்வமான கிரிக்கெட் விளையாட முடியும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் 11 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் ஜனாதிபதி அணியுடானான பயிற்சி போட்டி எதிர்வரும் 12ஆம், 13ஆம் , மற்றும் 14ஆம் திகதிகளில் மொரட்டுவ டிரோன் பெர்னாண்டோ மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து இலங்கை A அணியுடனான நான்கு நாட்களை கொண்ட முதலாவது போட்டி பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் இரண்டாவது போட்டி ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

மேலும், 5 ஒருநாள் போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இரண்டு போட்டிகள் ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், ஒரு போட்டி  குருநாகல கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ள நிலையில் ஏனைய எஞ்சிய இரண்டு போட்டிகளும் கொழும்பு கிரிக்கெட் கழகத்தில் (CCC) இடம்பெறவுள்ளது.

இங்கிலாந்து லயன்ஸ் அணி

இங்கிலாந்து லயன்ஸ் நான்கு நாள் அணி: கீட்டன் ஜென்னிங்ஸ் (அணித் தலைவர்), ஹசீப் ஹமீட், நிக் குபிங்க்ஸ், டொம் அல்சொப், டொம் வேஸ்ட்லி, ஜோ கிளார்க், லியாம் லிவிங்ஸ்டன், பென் போக்ஸ், சாம் குரான், டொம் குரான், டோபி ரோலண்ட்-ஜோன்ஸ், டொடாம் ஹேல்ம், கிரேக் ஓவர்டோன், ஓலி ரெய்னர், ஜாக் லீச்

இங்கிலாந்து லயன்ஸ் 50 ஓவர் அணி: கீட்டன் ஜென்னிங்ஸ் (அணித் தலைவர்), டேனியல் பெல்-ட்ரம்மாண்ட், டொம் அல்சொப், பென் டக்கெட், ஜோ கிளார்க், லியாம் லிவிங்ஸ்டன், பென் போக்ஸ், சாம் குரான், டொம் குரான், கிரேக் ஓவர்டோன், டொம் ஹேல்ம், ஜேம்ஸ் புல்லர், ஓலி ரெய்னர் , ஜோஷ் போய்ஸ்டன்

போட்டி அட்டவணை

பெப்ரவரி 17-20 – முதல் நான்கு நாட்கள் கொண்ட போட்டி பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம்
பெப்ரவரி 24-27 – இரண்டாவது நான்கு நாட்கள் கொண்ட போட்டி ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம்

மார்ச் 2 – 1ஆவது ஒருநாள் போட்டி, ரங்ரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம்
மார்ச் 4 – 2ஆவது ஒருநாள் போட்டி, ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம்
மார்ச் 6 – 3ஆவது ஒருநாள் போட்டி, குருநாகல கிரிக்கெட் அரங்கம்
மார்ச் 9 – 4ஆவது ஒருநாள் போட்டி, கொழும்பு கிரிக்கெட் கழகம்
மார்ச் 11 – 5ஆவது ஒருநாள் போட்டி, கொழும்பு கிரிக்கெட் கழகம்