அவுஸ்திரேலியாவிற்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20i தொடரில் விளையடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இங்கிலாந்து அணியின் சிரேஷ்ட வீரர்களான ஜொனி பேர்ஸ்டோவ், மொயின் அலி மற்றும் கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக பெயரிடப்பட்ட ஒருநாள் மற்றும் T20i அணிகளில் பெயரிடப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியானது தற்சமயம் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனையடுத்து அந்த அணி அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட T20i தொடரிலும் விளையாடவுள்ளது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான T20i தொடரானது செப்டம்பர் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், ஒருநாள் தொடரானது செப்டம்பர் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இத்தொடருக்கான அவுஸ்திரேலியா கிரிக்கெட் குழாத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபை சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20i தொடரில் களமிறங்கும் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி விபரத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபை நேற்று (26) அறிவித்தது.
இதில் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ஜொனி பேர்ஸ்டோவ் மற்றும் சகலதுறை வீரர் மொயின் அலி ஆகிய இருவரும் ஒருநாள் மற்றும் T20i தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் அணியின் அனுபவ வீரரான ஜோ ரூட்டிற்கு பணிச்சுமை காரணமாக இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை.
- கமிந்து – சண்டிமாலின் போராட்டத்தை தாண்டி இலங்கை தோல்வி
- இலங்கை தொடரில் முன்னணி வேகப்பந்துவீச்சாளரை இழக்கும் இங்கிலாந்து
- ஐசிசியின் அபராதத்துக்கு முகங்கொடுத்த பாகிஸ்தான், பங்களாதேஷ்
மேலும், ஹொரி புரூக், கஸ் அட்கின்சன், பென் டக்கெட், ஜேமி ஸ்மித் மற்றும் மெத்யூ பொட்ஸ் உள்ளிட்டோருக்கு T20i தொடரில் ஓய்வளிக்கப்பட்டு, ஒருநாள் அணியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வேகப்பந்து வீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் ஒருநாள் மற்றும் T20i என இரு அணிகளிலும் இடம்பிடித்துள்ளார்.
இதனிடையே, காயம் காரணமாக இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ், ஸாக் கிரௌலி மற்றும் மார்க் வுட் உள்ளிட்டோருக்கும் அவுஸ்திரேலிய தொடருக்காக பெயரிடப்பட்ட இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்கவில்லை. மறுபுறத்தில் வேகப்பந்து வீச்சாளர் சகிப் மஹ்மூத்திற்கு T20i தொடருக்கான இங்கிலாந்து அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஜோஷ் ஹல், ஜேக்கப் பெதெல், ஜோன் டர்னர், டான் மௌஸ்லி மற்றும் ஜோர்டன் கொக்ஸ் உள்ளிட்ட 5 இளம் வீரர்களுக்கு முதல் தடவையாக அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து T20i அணி விபரம்: ஜோஸ் பட்டர் (தலைவர்), ஜொப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெதெல், பிரைடன் கார்ஸ், ஜோர்டன் கொக்ஸ், சாம் கரண், ஜோஷ் ஹல், வில் ஜெக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், சகிப் மஹ்மூத், டான் மௌஸ்லி, ஆதில் ரஷித், ஃபில் சோல்ட், ரீஸ் டாப்லி, ஜோன் டர்னர்.
இங்கிலாந்து ஒருநாள் அணி விபரம்: ஜோஸ் பட்லர் (தலைவர்), ஜொஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெதெல், ஹெரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜோஷ் ஹல், வில் ஜெக்ஸ், மெத்யூ பொட்ஸ், ஆதில் ரஷித், பில் சோல்ட், ஜேமி ஸ்மித், ரீஸ் டாப்லி, ஜொன் டர்னர்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<