இலங்கைக்கு எதிரான இங்கிலாந்து பயிற்சியாளர் குழாத்தில் ஜெக் கல்லிஸ்!

Jacques Kallis named as England batting consultant for Sri Lanka Test tour - Tamil

266

இலங்கை அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரர் ஜெக் கல்லிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் சபை முழுநேர துடுப்பாட்ட, பந்துவீச்சு மற்றும் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த பயிற்றுவிப்பாளர்களுக்கான விண்ணப்ப இறுதி திகதியாக ஜனவரி 10ம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நுவன் துஷார அடுத்த மாலிங்கவா?

இவ்வாறு முழுநேர பயிற்றுவிப்பாளர்களை இங்கிலாந்து கிரிக்கெட் சபை நியமிக்கவுள்ள நிலையில், ஜெக் கல்லிஸின் நியமனம் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் இறுதி ஆலோசகர் நியமனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெக் கல்லிஸின் நியமனம் போன்று, பாகிஸ்தான் தொடருக்காக ஜொனதன் ட்ரொட் நியமிக்கப்பட்டதுடன், தென்னாபிரிக்க தொடருக்காக மார்கஸ் ட்ரெஸ்கொதிக் நியமிக்கப்பட்டிருந்தார்.

இலங்கை தொடருக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜெக் கல்லிஸ், இந்திய அணிக்கு எதிரான தொடரில் இணைக்கப்படமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேநேரம், கொவிட்-19 வைரஸ் மற்றும் உயிரியல் பாதுகாப்பு வளையத்தின் நெருக்கடிகள் காரணமாக தொடருக்காக வீரர்களை சுழற்சிமுறையில் பயன்படுத்தவும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை எதிர்பார்த்துள்ளது.

அதேநேரம், இங்கிலாந்து தலைமை பயிற்றுவிப்பாளர் க்ரிஸ் சில்வர்வூட்டின், உதவி பயிற்றுவிப்பாளரான க்ரேம் தோர்ப்பிற்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்திய அணிக்கு எதிரான தொடரில் இவர் அணியுடன் இணைந்துகொள்வார். இங்கிலாந்து அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக ஜொன் லிவிஸ், விக்கெட் காப்பு ஆலோசகராக ஜேம்ஸ் போஸ்டர் மற்றும் சுழல்பந்துவீச்சு ஆலோசகராக ஜீடான் பட்டேல் ஆகியோர் செயற்படவுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அடுத்த மாதம் 14ஆம் திகதி விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<