சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மேலும் ஒரு இங்கிலாந்து வீரர் ஓய்வு

279

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக திகழ்ந்த இவர், சுமார் ஓராண்டாக காயம் காரணமாக எந்தவொரு உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவில்லை  

இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத ஸ்டீவன், சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 

இது குறித்து ஸ்டீவன் பின் கூறுகையில், ‘இன்று (நேற்று) முதல் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுகிறேன். கடந்த 12 மாதங்களாக காயத்தில் இருந்து மீள்வதற்காக எனது உடலோடு போராடினேன். இறுதியில் தோல்வியே மிஞ்சியது. சில வியப்புக்குரிய நினைவுகளோடு கிரிக்கெட்டில் இருந்து விலகுகிறேன். இங்கிலாந்து அணிக்காக 36 டெஸ்ட் உட்பட ஒட்டுமொத்தத்தில் 125 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளேன். 

இங்கிலாந்து அணிக்காக விளையாடுவது தான் கனவாக இருந்தது. இவ்வளவு போட்டிகளில் விளையாடுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. கடந்த 12 மாதங்களாக எனக்கு பக்கபலமாக இருக்கும் சஸ்செக்ஸ் நிர்வாகத்துக்கு நன்றி. கிரிக்கெட் தான் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. எதிர்காலத்தில் ஏதாவது ஒரு வகையில் கிரிக்கெட்டுடன் தொடர்பில் இருப்பேன் என்று நம்புகிறேன்என்றார். 

34 வயதான ஸ்டீவன் ஃபின் 6 அடி 7 அங்குலம் உயரத்தை உடையவர். 2010ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்த அவர் 2017ஆம் ஆண்டுக்கு பிறகு தேசிய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். உள்ளூர் கவுண்டி அணியான மிடில்செக்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடிய அவர் அதன் பிறகு சஸ்செக்ஸ் அணிக்கு மாறினார். 

இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டுகளையும், 69 ஒருநாள் போட்டிகளில் ஆடி 102 விக்கெட்டுகளையும், 21 T20i கிரிக்கெட்டில் ஆடி 27 விக்கெட்டுகளையும் ஸ்டீவன் ஃபின் வீழ்த்தியுள்ளார்.   

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2010-11, 2013, 2015ஆம் ஆண்டுகளில் ஆஷஸ் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியில் அங்கம் வகித்தார். அதேபோல, பிரிஸ்பேனில் நடைபெற்ற தனது அறிமுக ஆஷஸ் டெஸ்ட்டில் 6 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்துவீச்சு பிரதியாக இடம்பிடித்தது 

2015ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பிராட் ஹெடின், கிளென் மெக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஹெட்ரிக் சாதனை படைத்தார். இதன்மூலம் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஒரே இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுக் கொண்டார் 

சில தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆரம்ப வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், சகலதுறை வீரர் மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், வேகப் பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிரோட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர். தற்போது ஸ்டீவன் ஃபின்னும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் இங்கிலாந்து ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர் 

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<