15வது ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டி பிரான்சில் நடைபெற்று வருகிறது. இதன் 2ஆவது சுற்றுப் போட்டியின் கடைசி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன.
ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின்- இத்தாலி அணிகள் மோதின. இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஸ்பெயின் அதிர்ச்சிககரமாகத் தோற்றது.
இத்தாலி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இத்தாலி வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அந்த அணிக்கு ஸ்பெயின் வீரர்களால் பதிலடி கொடுக்க இயலவில்லை.
33ஆவது நிமிடத்தில் இத்தாலி முதல் கோலை அடித்தது. அந்த அணியின் பின்கள வீரர் ஜியார்ஜியோ ஷிலினி இந்த கோலை அடித்தார். முதல் பாதி ஆட்டம் முடிவில் இத்தாலி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
2ஆவது பாதி ஆட்டத்திலும் இத்தாலியின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. ஆட்டம் முடியும் தருவாயில் அந்த அணி 2ஆவது கோலை அடித்து ஸ்பெயினுக்கு மேலும் அதிர்ச்சிகொடுத்தது. 91ஆவது நிமிடத்தில பெல்லோ இந்த கோலை அடித்தார். நடப்பு சாம்பியனான ஸ்பெயின் அணியால் இறுதிவரை ஒரு கோல் கூட போட முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றமே.
இந்த வெற்றி மூலம் இத்தாலி அணி 2012 இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் தோற்றதற்குப் பழி தீர்த்துக்கொண்டது. இத்தாலி அணி கால்இறுதியில் பலம் வாய்ந்த ஜெர்மனியைச் சந்திக்கிறது. இந்த ஆட்டம் ஜூலை 2ஆம் திகதி நடைபெறும்.
மற்றொரு ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து- ஐஸ்லாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாகத் தோற்றுப் போட்டியில் இருந்து வெளியேறியது.
ஆட்டத்தின் 4ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து கோல் அடித்து முன்னிலை பெற்றது. நட்சத்திர வீரர் வெய்ன்ரூனி பெனால்டி மூலம் இந்த கோலை அடித்தார்.
6ஆவது நிமிடத்திலேயே ஐஸ்லாந்து பதில் கோல் அடித்து சமன் செய்தது. ரேக்னர் சிகுர்சன் இந்த கோலை அடித்தார். 18ஆவது நிமிடத்தில் ஐஸ்லாந்து 2ஆவது கோலை அடித்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தது. கோல்பின் சிக்போர்சன் இந்த கோலை அடித்தார். ஆட்டத்தின் இறுதிவரை இங்கிலாந்து அணியால் மேலும் கோல் எதுவும் போட முடியவில்லை.
இறுதியில் ஐஸ்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி முதல் முறையாக கால்இறுதிக்கு முன்னேறியது. இந்தத் தோல்வியால் இங்கிலாந்து பயிற்சியாளர் ராய்ஹட்சன் பதவி விலகினார். ஐஸ்லாந்து அணி கால் இறுதியில் பிரான்சை சந்திக்கிறது.
இன்றும், நாளையும் ஒய்வு நாளாகும். 30ஆம் திகதி முதல் கால்இறுதி தொடங்குகிறது. போலந்து, போர்த்துக்கல், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், வேல்ஸ், ஐஸ்லாந்து ஆகிய அணிகள் கால்இறுதிக்குத் தகுதி பெற்றன.
ஸ்பெயின், இங்கிலாந்து, ஹங்கேரி, சுலோவாக்கியா, அயர்லாந்து குடியரசு, குரோஷியா, சுவிட்சர்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய அணிகள் 2ஆவது சுற்றில் வெளியேறின.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்