கிரிக்கெட்டில் சாதிக்க பொறியியல் துறையை விட்ட ஆகாஷ் மத்வால்

296

கிரிக்கெட் உலகின் பணக்கார லீக் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 16ஆவது பருவகாலம் முழுவதும் மிகவும் விறுவிறுப்பாகவே அமைந்தது.

சென்னை, குஜராத், மும்பை மற்றும் லக்னோ அணிகள் பிளே ஒப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், சென்னையில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சுபர் ஜயன்ட்ஸை 81 ஓட்டங்களால் வெற்றிகொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது தகுதிகாண் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வாலின் அபார பந்துவீச்சு முக்கிய காரணமாக இருந்தது. ஆகாஷ் மத்வால் 3.3 ஓவர்களில் 5 ஓட்டங்கனை மட்டும் விட்டுக்கொடுத்து 1.4 என்ற மிகக்குறைந்த சராசரியில் 5 விக்கெட்டுகளை பதம் பார்த்திருந்தார்.

>> அபார பந்துவீச்சோடு குவாலிபையர் போட்டிக்கு தெரிவான மும்பை 

இதன்மூலம் அனில் கும்ப்ளே மற்றும் ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்குத் தள்ளி, மிகக்குறைந்த சராசரியுடன் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அத்துடன், தனது அபார பந்துவீச்சால் IPL வரலாற்றில் பிளே ஒப் சுற்றில் 5 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையையும் 29 வயதான ஆகாஷ் மத்வால் படைத்தார்

எனவே, இம்முறை IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் புயலாக மாறியுள்ள ஆகாஷ் மத்வால் யார்? அவரது பின்னணி என்ன? என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்.

ஆகாஷ் மத்வால், 1993ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்க்கி என்ற பகுதியில் பிறந்தார். இவரின் குழந்தைப் பருவமும் பாடசாலை பருவமும் அங்கு தான். உத்திரகாண்டின் ரூர்க்கி பகுதியில் உள்ள பப்ளிக் சீனியர் செகண்டரி பாடசாலையில் படித்து வந்தார். இவர், பாடசாலையில் படிக்கும் போதே டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வந்துள்ளார். டென்னிஸ் பந்தில் வேகமாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுப்பதில் வல்லவராகவும் திகழ்ந்தார்.

ஆகாஷ் மத்வால், படிப்பில் அதிக அக்கறையும் ஆர்வமும் கொண்ட மாணவராக சிறந்து விளங்கியவர். பிற்காலத்தில் பொறியியலாளர் படிப்பை படித்துக் கொண்டிருந்த போது, கிரிக்கெட் விளையாடுவதை வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே மேற்கொண்டு வந்துள்ளார்.

2016இல் பொறியியலாளருக்காக படித்து பட்டம் பெற்ற அவர், கிரிக்கெட்டின் மீதான காதலால் உள்ளூர் கழக அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் விளையாட ஆரம்பித்தார். எவ்வாறாயினும், தனது கிரிக்கெட் கனவை நிறைவேற்றுவதற்காக கட்டிட பொறியியலாளர் பணியை துறந்துவிட்டு கையில் பந்தை எடுத்தார்.

இந்திய வீரர் ரிஷப் பண்ட் மற்றும் ஆகாஷ் மத்வால் இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள். இருவரும் உத்தரகாண்டின் ரூர்க்கியில் உள்ள தண்டேரா என்ற பகுதியில் அருகருகே வசித்து வந்துள்ளனர். குறிப்பாக இந்திய வீரர் ரிஷப் பண்ட்டும் ஆகாஷ் மத்வாலும் உத்தரகாண்ட் அணியின் பயிற்சியாளரான அவ்தார் சிங்கிடம் ஒரே சமயத்தில் ஒன்றாக பயிற்சிகளை ஆரம்பித்தனர்.

இதனிடையே, 2019இல் உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் சபையினால் நடத்தப்பட்ட தேர்வு முகாமில் தன்னுடைய 24 வயதில் கலந்து கொண்டு அசத்திய அவரின் திறமையை உணர்ந்து அப்போதைய பயிற்சியாளர் மற்றும் முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் முதல் முறையாக உத்தரகாண்ட் அணிக்காக ஆகாஷ் மத்வாலை தேர்வு செய்தார்.

தன்னுடைய 25ஆவது வயதில், அதாவது 2019ஆம் ஆண்டில் நவம்பர் 8ஆம் திகதி நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் தொடரில் உத்தரகாண்ட் அணிக்காக ஆகாஷ் மத்வால் அறிமுகமானார். இது தான் இவரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆரம்ப பாடசாலையாக அமைந்தது. அதே ஆண்டில் ரஞ்சி கிண்ணத் தொடரில் உத்தரகாண்ட் அணிக்காக களமிறங்கினார்.

அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு, விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் உத்தரகாண்ட் அணியில் இடம்பிடித்து விளையாடினார். இவ்வாறு மிகவும் குறுகிய காலத்தில் இந்தியாவின் அனைத்து உள்ளூர் தொடர்களிலும் ஆடி திறமைகளை வெளிப்படுத்திய அவர், தனது திறனை நாளுக்கு நாள் மெருகேற்றிக்கொண்டார். இதன்பயனாக அவர், 50 ஓவர்கள் போட்டியில் மாநில அணியை தலைவராக வழி நடத்தினார்.

இதுவரை 10 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள ஆகாஷ் மத்வால் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், 17 லிஸ்ட் A போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளையும், 29 T20 போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இவ்வாறு உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வந்த ஆகாஷ் மத்வால் மீது IPL அணிகளின் பார்வை விழுந்தது. 2019ஆம் ஆண்டு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வலைப் பந்துவீச்சாளராக இணைந்து கொண்டார். இதற்கிடையே, 2022இல் காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ் IPL இல் இருந்து விலகிய நிலையில் மாற்று வீரராக ஆகாஷ் மத்வால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார். ஆனால் அந்த பருவத்தில் அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த பருவத்தின் ஆரம்பத்திலும் ஆகாஷ் மத்வால், மும்பை அணியின் திட்டங்களில் இருக்கவில்லை.

ஏற்கெனவே ஜஸ்பிரீத் பும்ரா இல்லாத நிலையில் ஜொப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக அவதிப்பட்டதால் அவரிடம் இருந்து முழுமையான செயல்திறன் வெளிப்படவில்லை. ஒரு கட்டத்தில் ஆர்ச்சரும் IPL தொடரில் இருந்து விலகினார்.

மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடிய பிறகுதான் ஆகாஷ் மத்வாலுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான அறிமுக போட்டியில் 3 ஓவர்களை வீசிய மத்வால் 37 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த நிலையில் விக்கெட் வீழ்த்தவில்லை. அடுத்த 2 போட்டிகளில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியவில்லை. தொடர்ந்து குஜராத் அணிக்கு எதிராக வான்கடேவில் நடைபெற்ற போட்டியில் சுப்மன் கில், டேவிட் மில்லர் உள்ளிட்ட 3 பேரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது பாராட்டையும் பெற்றார். இதனையடுத்து மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார்.

IPL பிளே ஒப் வாய்ப்பை பெறுவதற்கு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மத்வால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து லக்னோ அணிக்கெதிரான எலிமினேட்டர் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி IPL இன் சாதனை புத்தகத்தில் தனது பெயரை இடம் பெறச் செய்ததுடன் 5 முறை சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை தொடரின் முக்கியமான கட்டத்துக்கு கொண்டு சென்றார்.

இந்த நிலையில், லன்னோ அணியுடான போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற பிறகு பேசிய ஆகாஷ் மத்வால், ‘மும்பை அணி எனக்கு பொறுப்புகளை வழங்கி உள்ளது. நான் அதை செய்ய முயற்சிக்கிறேன். பும்ராவின் இடத்தை என்னால் எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்கிறேன். பயிற்சி போட்டிகளில் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினேன். அதன் காரணமாகவே தற்போது இங்கே நிற்கிறேன்.

டென்னிஸ் பந்து கிரிக்கெட் மூலமாகவே யோர்க்கர்களை வீசுவதற்கு கற்றுக்கொண்டேன். அதை இங்கு முயற்சி செய்து பார்க்கிறேன். ஏனெனில் யோர்க்கர் பந்துகளே அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுப்பதில் இருந்து நம்மை பாதுகாக்கும். எனது பலமே யோர்க்கர் வீசுவதுதான். எனது பலத்தை அறிந்துள்ள அணித்தலைவர் ரோஹித் சர்மா, அணிக்கு தேவையான இடத்தில் என்னை பயன்படுத்துகிறார்’ என்றார்.

IPL மூலம் கிரிக்கெட் வீரர்கள் பணக்காரர்களாக மாறினாலும், ஆகாஷ் மத்வால் போன்ற இலை மரை காயாக இருக்கின்ற திறமையான வீரர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக IPL அமைந்து விட்டது. நடராஜன், வருண் சக்கரவத்தி, யஷாஸ்வி ஜெய்வால், ரிங்கு சிங் வழியில் IPL மூலம் மற்றுமொரு கிரிக்கெட் நட்சத்திரத்தை இந்திய கிரிக்கெட் கண்டெடுத்துள்ளது. எதிர்காலத்தில் நிச்சயம் இந்திய கிரிக்கெட் அணிக்கு இவரது பங்களிப்பு மிகப் பெரிய நன்மையைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<